Published : 30 Sep 2014 11:07 AM
Last Updated : 30 Sep 2014 11:07 AM
ஆரஞ்சு மிட்டாயும் சில கட்டெறும்புகளும்
கும்பகோணம் பள்ளியில் ஒண்ணாங் கிளாஸ். அம்மா லாந்தர் வெளிச்சத் தில் சிலேட்டுப் பலகையில் பலப்பக் குச்சியால் உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் எழுதக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த பருவம்.
எதிர் வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த ஒரு பெண்மணி அம்மாவைத் தேடி வந்தாள். அவளது கையைப் பிடித்துக்கொண்டு என் வயதொத்த ஒரு பெண்ணும் வந்தாள். தாயின் புடவைத் தலைப்பில் முகத்தை மூடி நின்றிருந்த அவளை, “என் பையனைக் கட்டிக்கப் போறியா என்ன… எவ்ளோ வெக்கம்?” என்று கேட்டுவிட்டு, அம்மா என்னிடம், “பட்டாம்பூச்சி டப்பால ஆரஞ்சு மிட்டாய் வெச்சிருக்கேன். அவளுக்கு ரெண்டு எடுத்துக் குடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ’’ என்றாள்.
ஆரஞ்சு மிட்டாயை இருவரும் வாயில் போட்டுக்கொண்டு ‘ஸ்… ஸ்…' என்று மூச்சுக் காற்றை வாய் வழியாக இழுத்து, மிட்டாயின் ஜில்லிப்பையும், மணத்தையும், இனிப்பையும் அனுபவித்ததில் தொடங்கியது லக்ஷ்மியுடனான எனது நட்பு. பின்னர் தினம் தினம் ஆரஞ்சு மிட்டாயுடன் நட்பும் வளர்ந்தது.
பளபளக்கும் குண்டுக் கண்கள். மேடிட்ட நெற்றி. அழகான சப்பை மூக்கு. சின்ன உதடுகள். ஜிமிக்கிகளின் ஊசல். மறக்க முடியாதவை!
அவளும், நானும் கண்ணா மூச்சியில் ஒருவரை ஒருவர் தேடியிருக்கிறோம். ஓடிப் பிடித்து உருண்டிருக்கிறோம். கட்டங்களில் நொண்டிக் குதித்து பாண்டி ஆடியிருக்கிறோம். அவளது தூளி பஸ்ஸில் ஊர் ஊராகப் போயிருக்கிறோம்.
ஒருநாள் நாகேசுவரன் கோயிலில் நடுநடுவே புல் முளைத்த கருங்கல் தளத்தில் விளையாடிக் கொண்டிருந் தோம். தண்ணீர் விட்டால் புல் நன்றாக வளரும் என்று லக்ஷ்மி சொன்னாள். அருகில் சிங்கமுகக் குளம் இருந்தது. உள்ளங்கையில் தண்ணீர் ஏந்தி வந்து புல்லுக்கு விடுவது என்று தீர்மானித்து குளத்தை நோக்கி ஓடினோம்.
கல்லும் சுண்ணாம்பும் குழைத்துக் கட்டப்பட்ட ஒரு சிங்கத்தின் தலை பெரிதாகப் பிளந்த வாயுடன் பயங்கர மாக இருக்கும். அந்த வாயில் நுழைந்து பதினைந்து படிகள் இறங்கினால் சதுரமாகக் குளம். நான் சற்று அவசரப்பட்டு தடதடவென்று இறங்கி விட்டேன். நீரலை மோதிய படியில் காலை வைத்தபோது பாசி வழுக்கியது.
தண்ணீரில் ‘தொபுக்கடீர்’ என்று விழுந்தேன். நீருக்குள் மூழ்கி எழுந்தேன். கை கால்களுக்குப் பிடிப்பு இல்லை. லக்ஷ்மி ஒரு கையால் இரும்புக் கம்பியைப் பற்றிக்கொண்டு இன்னொரு கையை நீட்டி என்னைப் பிடித்துக் கரையேற்றிவிட்டாள். உடல் நடுங்கியது. ‘அப்படியே நான் உள்ள போயிருந்தா என்ன ஆயிருக்கும்?' என்று நடுக்கத்துடன் கேட்டேன்.
‘நீ ‘பே' ஆயிருப்பே...' என்று சொல்லி கலகலவெனச் சிரித்தாள்.
அவ்வளவு நெருக்கமாக என்னுடன் பழகிய லக்ஷ்மி அடுத்த ஆறாவது மாதத்தில் தூளியில் படுத்திருந்தபடியே இறந்து போனாள். எமன் அவளை டிப்தீரியா உருவில் அழைத்துப் போனான்.
முகம் முழுக்க மஞ்சள் பூசிக் குளிப்பாட்டினார்கள். புதுச்சட்டை, புதுப் பாவாடை போட்டு, இரட்டைப் பின்னல் இட்டுத் தூக்கிச் சென்றார்கள். லக்ஷ்மியின் அம்மாவும் என் அம்மாவும் கட்டிப்பிடித்துக் கதறினார்கள். யார் யாரோ அழுதார்கள். தெருவே அழுதது. எனக்கு அழுகை வரவில்லை.
அன்றைக்குப் பதினாறாம் நாள் லக்ஷ்மியின் வீட்டில் அவள் படத்தை வைத்து பூச்சூட்டி, பொட்டிட்டு படையல் இட்டிருந்தார்கள்.
அம்மாவுடன் போயிருந்தேன். லக்ஷ்மியின் படத்துக்கு நேர் கீழே ஸ்டாண்டில் அவளுக்குப் பிடித்த ஆரஞ்சு மிட்டாய்கள் நான்கைந்து வைத்திருந்தார்கள். பெரிய பெரிய கட்டெறும்புகள் மிட்டாய்களை மொய்த்துக் கொண்டிருந்தன. ஆரஞ்சு மிட்டாய்களையும் எறும்புகளையும் பார்த்தவுடன் எங்கேயிருந்துதான் பொங்கிக்கொண்டு வந்ததோ அப்படி ஓர் அழுகை. கதறிக் கதறி அழுதேன். இன்றைக்கு நினைத்தாலும் கண்ணீர்ப் படலம்.
‘கோ’ திரைப்படத்தில் கதாநாயகன் அஸ்வினின் (ஜீவா) தோழியான சரோ (பியா பாஜ்பாய்) ஒரு சாக்லேட் பைத்தியம். அவள் கொலையுண்டு இறந்த பின், அவள் தங்கியிருந்த வீட்டுக்கு அஸ்வின் (ஜீவா) வருவான். அங்கே அவளுடன் தங்கியிருக்கும் கதாநாயகி ரேணுகா (கார்த்திகா) சரோவின் அறைக்கு அவனைக் கூட்டிச் செல்வாள்.
அங்கே ஃப்ரேம் சிறையில் அழகாகச் சிரிக்கும் சரோவின் புகைப்படத்தை வைத்து அதன் கீழே ஒரு சாக்லேட்பட்டையை வைத்து அதை எறும்புகள் மொய்ப்பது போல் காட்டினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இயக்குநர் கே.வி. ஆனந்துக்கும் அது பிடித்துப் போயிற்று.
அதே போல் சரோவின் படத்துக்கு அருகில் திறக்கப்பட்ட ஒரு சாக்லேட் பட்டை. அதைக் கட்டெறும்புகள் மொய்த்தன. திரையில் இந்தக் காட்சி இடம் பெற்றபோது, தியேட்டரில் நிறைய அனுதாப உச்சுகள். கதாநாயகன் ஜீவா சாக்லேட் பட்டையையும் எறும்புகளையும் பார்த்து நெகிழ்வான்.
அந்தக் காட்சித் துணுக்குதான் கதாநாயகனை உசுப்பிவிடும். சரோவைக் கொலை செய்தவனைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கும். சில விநாடிகளே திரையில் இடம் பெறும் காட்சி என்றாலும் மிக அழுத்தமாக அது ரசிகர்கள் மனதில் இடம் பெற்றது!
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
dsuresh.subha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT