Published : 21 Nov 2014 03:49 PM
Last Updated : 21 Nov 2014 03:49 PM
சோதனை மிகும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, சிறு வயதில் தங்கள் அன்னை அல்லது ஆசான் கற்பித்த ஒரு பாடல் மூலமோ, வசனம் மூலமோ திரைக் கதாநாயகர்கள் மீண்டும் எழுச்சி பெறுவதாகக் காட்டப்படுவது திரை மரபு. அம்மாதிரிப் பாடல்கள் திரைக்கதையில் திருப்பத்தை ஏற்படுத்துவதுடன் மற்றுமொரு நோக்கத்தையும் நிறைவு செய்கின்றன.
அவை இடம்பெற்ற படங்கள் வெளிவந்து மறக்கப்பட்ட வெகு காலத்திற்கு பிறகும் கூட அவ்வித எழுச்சிப் பாடல்களின் வரிகளைக் கேட்கும் மக்கள் புது உற்சாகம் அடைவார்கள். அவை வெளிப்படுத்தும் உணர்வே, இதன் அடிப்படைக் காரணம். இம்மாதிரியான தமிழ்-இந்திப் பாடல்களைப் பார்க்கலாம். வழக்கப்படி முதலில் இந்திப் பாட்டு.
சிறந்த கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றுவதுடன் அவற்றுக்கு மனம் கவரும் இசையமைக்கும் திறனும் உடையவர் ரவீந்தர் ஜெயின். அவர் இயற்றி இசையமைத்த இப்பாடல் இடம்பெற்ற படம் ஃபக்கீரா. சசிகபூர், சப்னா ஆஸ்மி, மற்றும் டேனி ஆகியோர் நடித்திருந்தனர்.
அன்னை பாடுவதாகவும், சிறு வயதில் ஒன்றாக இருந்த சகோதரர்கள் பாடுவதாகவும், பின்பு ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் பிரிந்துவிட்ட அவர்களில் ஒருவர் பாடுவதாகவும் ஆகமொத்தம் படத்தின் கதைப்போக்கில் மூன்று தருணங்களில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
பாடியவர்கள் லதா மங்கேஷ்கர், கிஷோர் குமார், மஹேந்திர கபூர் .
பாட்டு:
ஓ, சுன்கே தேரி புக்கார்,
சங்க் சல்னே கோ கோயி ஹோ, நாஹோ தய்யார்
ஹிம்மத் நா ஹார், சல் சலாச்சல்,
அகேலா சல் சலாச்சல்
ஃபக்கிரா சல் சலாசல் அகேலா சல்
நன்னே நன்னே பாவ் ஹை தேரி
சோட்டி சோட்டி பாஹே ஹை
ஊச்சி ஊச்சி மஞ்சில் தேரி
லம்பி லம்பி ராஹே ஹை
பஹ்லே கிஸ்மத் கி மார்
ஜித்னா தப்தா ஹை சோனா
உத்னா ஆத்தா ஹை நிக்கர்
ஓ, சுன்கே தேரி புக்கார்...
இதன்பொருள்:
உன் அழைப்பை ஏற்று உன்னுடன் செல்ல
எவரும் முன்வந்தாலும் வராவிட்டாலும்
தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்
சென்றுகொண்டே இரு ஃபக்கீரா, செல்
உன் கால்கள் (அடிகள்) மெலிதானவை
உன் துணை (உதவி) சிறிது
(ஆனால்) உன் இலக்கு மிக உயரமானது
உன் பாதை நீண்ட நெடியது
முதலில் விதியின் விளையாட்டு
எனினும் கலங்காதே
தங்கம் எந்த அளவு அடித்து நீட்டப்படுமோ
அந்த அளவு அது பொலிவடையும்
தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்
சூரியன், சந்திரன், நட்சத்திரம், எரிமலை
அனைத்திற்கும் அதன் அதன் சிரிப்பு உண்டு
எதிலிருந்து எவ்வளவு நீர் மேகமாக ஆகின்றதோ
அத்தனை நேரம் மழை பெய்கிறது
மனிதா, உன் சக்தி ஈடு இணையற்றது
நீ கங்கையை பூமியில்
இறக்கிக் கொண்டுவந்தவன்
தைரியத்தை இழக்காமல் தனியாகச் செல்
உன் அழைப்பை ஏற்று உன்னுடன் செல்ல
எவரும் முன்வந்தாலும் வராவிட்டாலும்
சென்றுகொண்டே இரு ஃபக்கீரா, செல்.
1976-ல் வெளியான இப்படப் பாடலின் அதே உணர்வு, 1957-ல் வெளிவந்த நீலமலைத் திருடன் என்ற தமிழ்ப் படப் பாடலில், (நிஜமாகவே நன்றாகக் குதிரை ஓட்டத் தெரிந்த கதாநாயகன் ரஞ்சன் பாடுவதாக) மிக அழகாக வெளிப்பட்டுள்ளது. ரஞ்சன்-அஞ்சலிதேவி நடித்து கே.வி. மகாதேவன் இசையில் அமைந்த இப்பாடலின் ஆசிரியர் மருதகாசி.
சுவையான விஷயம் என்னவென்றால் இந்தியில் மத்வாலா என்ற பெயரில் இது மொழியாக்கம் செய்யப்பட்டது. அதிலும் ரஞ்சன்-அஞ்சலிதேவியே நடித்ததுடன், மருதகாசியின் இப்பாடலும் ஹர்கோவிந்த் என்பவரால் வரிக்கு வரி மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆனால் நாம் கண்ட ஃபக்கிரா படப் பாடல் ஏற்படுத்திய பாட்டின் உணர்வை அது அளிக்கவில்லை.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகே அந்தத் தமிழ்க் கவி வெளிப்படுத்திய எழுச்சி உணர்வை ஒரு இந்திக் கவி அளிக்க முடிந்தது.
இனி தமிழ்ப் பாடல்:
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே உன்னை
இடற வைக்கும் தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வெய்யடா நீ
அஞ்சாமல் கடமையில் கண் வெய்யடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா
குள்ள நரிக் கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் –நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
அவற்றை
எமனுலகுக்கு அனுப்பிவைக்கத் தயங்காதேடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா செல்லடா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT