Last Updated : 19 Jul, 2017 04:23 PM

 

Published : 19 Jul 2017 04:23 PM
Last Updated : 19 Jul 2017 04:23 PM

மொழி கடந்த ரசனை 40: கவிதை எனக்குக் கட்டற்று வருகிறது..

சில திரைப்படங்கள் காலம்தோறும் மாறிவரும் மக்களின் ரசனையைத் துல்லியமாக கணித்து உருவாக்கப்பட்டவை. அவை ‘ட்ரென்ட் செட்டர்கள்’ என்ற முன்னோடிகளாக விலங்கி, திரையுலகில் புதிய போக்கையே உருவாக்கக்கூடியவை.

புராண நிகழ்வுகள், ராஜா ராணி கதைகள் மட்டுமே திரைப்படமாக எடுக்கப்பட்டு வந்த கால கட்டத்தில், வங்களா மொழியில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் இந்தி, தமிழ்,தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘தேவதாஸ்’அப்படிப்பட்ட ட்ரெண்ட் செட்டர்தான்.

தமிழ்த் திரை உலகை சினிமா தோன்றிய காலம் முதல் ஆட்சி செய்து வந்த புராண, பக்தி படங்களுக்கு மாற்றாக, சமூக அவலங்களைப் படமாக்க வெகுகாலம் வரை எவரும் துணியவில்லை. அத்தருணத்தில், சிவாஜி கணேசன் எனப் பின்னர் சரித்திரத்திரத்தில் இடம் பெற்ற வி.சி கணேசன் என்ற இளைஞனின் ஆவேச நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட சமூக கதையைப் படமாக்கிய ‘பராசக்தி’, தமிழ்த் திரை உலகின் ட்ரெண்ட் செட்டராக விளங்கி , சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை துணிவுடன் பேசத்தொடங்கிய பல படங்கள் அடுத்தடுத்து வர அடிகோலியது.

இதே வரிசையில் இந்திப் படவுலகில் 1973 ல் வெளிவந்த ‘பாபி’ திரைப்படம், எதிர் காலத்தில் வெளிவந்த இந்தி மொழி படங்களுக்கு மட்டுமல்ல; தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் ஒரு புத்தம் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது எனலாம்.

ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய ‘பாபி’, அதுவரை எந்தத் திரைப்படமும் எட்டாத அளவு இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றதற்கு பல காரணங்கள் இருந்தன. மொழி, நடிப்பு கதை போன்ற அம்சங்களைத் தாண்டி இந்தியா முழுவதும் அப்படம் பெற்ற மகத்தான வெற்றியின் முக்கிய காரணங்களில் அறிமுகக் கதாநாயகியும் ஒருவர். 16 வயதே நிரம்பிய டிம்பிள் கபாடியா என்ற மும்பை குஜராத்தி வணிகரின் செல்ல மகள்தான் இந்த டிம்பிள். அவரது அழகும் இளமையும் பாபி படத்துக்கு ஈர்ப்பு மிக்க அம்சமாகத் திகழ்ந்தன.

கல்லூரி மாணவன் பாத்திரத்திற்கு பொருத்தமான உடல் மொழியுடன் கூடிய ரிஷிகபூர், சாமானிய மொழியில் ஆனந்த பக்ஷி எழுதிய பாடல் வரிகள் ,அழுத்தம் இல்லாவிடினும் எல்லோரும் ரசிக்கும் வண்ணம் அமைந்த லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசை அமைப்பு, கோவா கிறிஸ்தவ மக்களின் வட்டார வாழ்வியலை உள்ளடக்கிய காட்சி அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து, இதுவரை வெளிவந்த அனைத்து இந்தித் திரைப்படங்களிலும் தலைசிறந்த 25 படங்களில் ஒன்று என்று புகழப்படுகிறது.

அறிமுகம் ஆன முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற டிம்பிள் கபாடியா, படம் வெளிவருவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மனைவியாகி நடிப்பைத் துறந்தார். பின்னர் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த டிம்பிள், முன்பு தனக்கு இருந்த ‘இந்தியாவின் கவர்ச்சி பொம்மை’ என்ற பிம்பத்துக்கு முற்றிலும் மாறான குணசித்திர நடிப்பில் முத்திரை பதித்தார். ‘ருத்ராலி’ என்ற படத்தில் இறந்தவர்களுக்காகக் கூலிக்கு ஒப்பாரி வைக்கும் பாத்திரத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு குறிப்பிட்டு சொல்ல தக்கது.

சுமார் 6 கோடி ரஷ்ய மக்கள் பார்த்து ரசித்த இப்படம் சோவியத் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட மகத்தான 20 அயல் மொழிப்படங்களில் ஒன்றாகப் பாராட்டுப் பெற்றது.

இத்தனை சிறப்புடைய இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெற்றியடைந்தன எனினும், ‘மே ஷாயர் தோ நஹீன்’, ‘ஜூட் போலே கவ்வா காட்டே’ ‘ந மாங்கூம் பங்களா காடி’ ‘ஹம் தும் ஏக கம்ரே மே பந்த் ஹோ’ ஆகிய நான்கு பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

‘மே ஷாயர் தோ நஹீன் மகர் ஏ ஹஸ்சீ ஜப் ஸே தேக்கா மைனே துஜ்கோ முஜ்கோ ஷாயரி ஆ கயீ” என்று தொடங்கும் பாடலின் பொருள்.

நான் கவிஞன் ஒன்றும் இல்லை –ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்ததிலிருந்து

கவிதை எனக்குக் கட்டற்று வருகிறது.

நான் எவருடைய காதலனும் (இதுவரை) இல்லை- ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்தவுடன்

எனக்கும் வந்துவிட்டது எங்கிருந்தோ காதல்

காதல் என்ற பெயரை காதால் கேட்டிருக்கிறேன் –ஆனால்

காதலைப் பற்றி கடுகளவும் எனக்கு (இதுவரை) தெரியாது.

குழம்பிக்கொண்டிருந்தேன் குழப்பம் மேலிட- இப்போதுவரை

எதிரியைப் போல (நினைத்து) நண்பர்களுடன் இருந்தேன்

நான் உன் எதிரி அல்ல எழில் நகை அன்பே

புன் முறுவல் பூக்கும் அழகி உனைப் பார்த்தவுடன்

நட்பு வந்துவிட்டது உன்னுடன் எனக்கு

யோசிக்கிறேன், இறைவனிடம் யாசிப்பதாய் இருந்தால்

கையை உயர்த்தி ‘தூவா’வில்(பிரார்த்தனையில்) எதைக் கேட்பது என

எப்பொழுது உன்னைக் காதலிக்க தொடங்கி விட்டேனோ

அப்போதே இத்தகு பிராயச்சித்தங்கள் தொடங்கி விட்டன

நம்பிக்கை இல்லாதவன் என்று இல்லை நான் – ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்தவுடன்

பக்தியும் வழிபாடும் பல மடங்கு பெருகிவிட்டது

நான் கவிஞன் ஒன்றும் இல்லை –ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்ததிலிருந்து

கவிதை எனக்குக் கட்டற்று வருகிறது.

பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் மட்டுமே பாடிவந்த அச்சூழலில் இளமை குரல் வளம் மிக்க ஷேலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய இந்தப் பாட்டு பெரும் புகழ் அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x