Published : 14 Jul 2017 10:56 AM
Last Updated : 14 Jul 2017 10:56 AM
கேரளத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நான்கு மாத விசாரணைக்குப் பிறகு மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் நடந்த நாளிலிருந்து மலையாளத்தின் பத்திரிகைகள், செய்தித் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் சந்தேகிக்கப்பட்ட ஒரு பெயர் திலீப்.
ஆனால், திலீபின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் திட்டமிட்ட சதி இது என திலீப் தரப்பிலிருந்து இதற்கு விளக்கம் தரப்பட்டது. அவரே மலையாளத்தின் முன்னணித் தொலைக்காட்சிகளில் தோன்றி இதற்கு விளக்கம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கூடிய மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’, பாதிக்கப்பட்ட அதன் உறுப்பினரான நடிகைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாக, அதன் தலைமகனைப் போல் செயல்பட்ட திலீப்புக்காகப் பத்திரிகையாளர்களை விமர்சித்ததன் விளைவாகச் சங்கம் பிளவுபட்டது.
யார் இந்த திலீப்?
1990-களில் மிமிக்ரி மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்த திலீப், உதவி இயக்குநர், நகைச்சுவை நடிகர் எனப் படிப்படியாக முன்னேறி ‘ஜனப்பிரிய நாயகனாக’ ஆனவர். மோகன்லாலும் மம்மூட்டியும் கோலோச்சிக்கொண்டிருந்த மலையாளத் திரையுலகில் அவர்களுடன் நடித்து அவர்களையே மிஞ்சிய திரு உருவாகத் தன்னை மாற்றிக்கொண்டார். மம்மூட்டி, மோகன்லால் ஆகியோரைப் போல் ஒரு ‘நடிக’ராகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டதோடு நில்லாமல், அதிகார மையமாக ஆக முயன்றவர் திலீப்.
‘அம்மா’ சங்கம் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு ‘டுவண்டி டுவண்டி’ என்னும் படத்தைத் தயாரித்து, தேவைக்கு அதிகமாக அம்மாவுக்கு நிதி திரட்டித் தந்தார். அதன் மூலம் அம்மாவின் பொருளாளரானார். மலையாள சினிமாவை நெருக்கடிக்குள்ளாக்கிய திரையரங்க வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தனது முயற்சியால் முடிவுக்குக் கொண்டுவந்து, 64 திரையரங்க உரிமையாளர்களை ஒன்றுதிரட்டிப் புதிய சங்கம் ஒன்றைத் தொடங்கி அதன் தலைவரானார்.
மலையாளத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்தையும் மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் கூடத் தனக்குச் சாதகமாகத் திருப்பினார் என்ற முணுமுணுப்பு எழுந்தது. இந்த நடவடிக்கைகள் மூலம் ஒரு ராஜாவைப் போல மலையாள சினிமாவின் சகலத் துறைகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ‘கொச்சிராஜா’ ஆனார் என்று கூறப்பட்டது. இதனால் திலீப்பின் தயவு இல்லாமல் மலையாள சினிமாவில் யாரும் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டதாக பத்திரிகைகள் எழுதின. என்றாலும் மோகன்லாலும் மம்மூட்டியும்கூட திலீப்பை எதிர்த்துக் கருத்துகூறத் தயங்கியதாகச் சொல்லப்பட்டது. இந்த மிதமிஞ்சிய செல்வாக்கு காரணமாக, தனக்குப் பிடிக்காத நடிகரை, நடிகையை, இயக்குநரை, தயாரிப்பாளரை, விநியோகஸ்தரை அவரால் எளிதாக வீழ்த்த முடிந்ததாக மலையாளப் படவுலகில் புலம்பல்கள் கேட்கத் தொடங்கின.
அதிகார துஷ்பிரயோகமா?
“இந்தப் படத்தை வாங்குங்கள், இதை வாங்காதீர்கள்” என, விநியோகஸ்தர்களிடம் திலீப் நெருக்கடி கொடுத்தாகவும் ஆசிக் அபு உள்ளிட்ட மலையாளத்தின் இளம் இயக்குநர்கள் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார்கள். மலையாளத்தின் மூத்த நடிகரான மறைந்த திலகன், திலீப்பின் உத்தரவால் வாய்ப்புகளை இழந்ததாகப் பகிரங்கமாக அறிவித்தார். ‘திலீப் தனது எதிரி’ என அவர் ஒரு நேர்காணலில் சொன்னார். நடிகை பாவனாவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். ரீமா கலிங்கல் உள்ளிட்ட வேறு சில நடிகைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தேசிய விருதுபெற்ற இயக்குநர் வினயனும் திலீப்பால் மலையாள சினிமாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாகத் தெரிகிறது.
திலீப் தனது ராஜாங்கத்தை நடத்திவந்த சமயத்தில், ‘அம்மா’ சங்கம் இதை வேடிக்கை பார்த்துவந்தது. அதன் உறுப்பினர்களான அஜூ வர்கீஸ், சலீம்குமார், திலீப் உள்ளிட்ட நடிகர்கள், குறிப்பிட்ட நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்துச் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்திருந்தனர். மேலும், ‘அம்மா’வில் பிரதான அங்கம் வகிக்கும் இடது முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான இன்னசண்ட், இடது முன்னணி சட்டமன்ற உறுப்பினர்களான முகேஷ், கணேஷ்குமார் உள்ளிட்ட பலரும் திலீப்புக்கு ஆதரவாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெகுண்டெழுந்தனர். ஆனால் சூப்பர் ஸ்டார்களான மோகன்லாலும் மம்மூட்டியும் மவுனம் சாதித்தனர்.
‘அஞ்சு பைசா ஜனநாயகம் ’
இந்தப் பின்னணியில்தான் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் நடவடிக்கைகள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளானது. அதுவரை தனிப்பட்ட ஒரு சங்கத்தின் நடவடிக்கையாகப் பார்க்கப்பட்ட ‘அம்மா’வின் செயல்பாட்டை அரசியல் தலைவர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். அம்மாவைக் கலைக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார். ‘அம்மா’ செயல்பாட்டுக்கு எதிராகப் பல பெண்கள் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. மலையாள மக்களின் அபிமான நட்சத்திரங்கள் அவமானங்களாகப் பார்க்கப்பட்டனர்.
இவ்வளவுக்குப் பிறகும் மலையாள நடிகர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட அம்மா தனது உறுப்பினரான, பாதிக்கப்பட்ட நடிகைக்கு எதிராகக் கருத்துச் சொன்ன உறுப்பினர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை தங்கள் சொந்த நலன் பாதிக்கப்படும் என்பதால் வாய் திறக்காமல் இருந்த திரைத் துறையினரும் தங்கள் மவுனம் கலைத்தனர். “அஞ்சு பைசா ஜனநாயகம்கூட ‘அம்மா’வில் கிடையாது” என ஆசிக் அபு வெளிப்படையாக விமர்சித்தார். ஆசிப் அலி, ரீமா கலிங்கல், பிருத்விராஜ், ரம்யா நம்பீசன் போன்ற பலரும் வெளிப்படையாக ‘அம்மா’வின் நடவடிக்கைகளை விமர்சித்தனர். மக்கள் பிரதிநிதிகளான முகேஷ், இன்னசண்ட் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் வலுவடைந்துவருகிறது. “மாற்று சினிமா முயற்சிகளுக்கு இந்த நட்சத்திர அதிகாரம் பெரும் தடை” என நடிகர் பிரகாஷ் பேர் கூறியிருக்கிறார்.
கடத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தொடங்கிய இந்தப் பன்முனைப் போராட்டம் இன்று அதையும் தாண்டி மலையாள சினிமாவில் நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக மாறியுள்ளது. இப்போது கைது செய்யப்பட்டுள்ள திலீபை, எந்த விளக்கமும் கேட்காமல் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே விலக்கியுள்ளது ‘அம்மா'. இழந்த தனது பெயரை அவசர அவசரமாக நிலைநாட்டிக்கொள்ளும் அம்மாவின் முயற்சி இது. ஆனால், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு மலையாள சினிமாவில் ஜனநாயகம் வலுவடைய இந்த வழக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT