Last Updated : 18 Apr, 2014 12:22 PM

 

Published : 18 Apr 2014 12:22 PM
Last Updated : 18 Apr 2014 12:22 PM

நகைச்சுவை வறட்சி: ஜோக்கெல்லாம் நகைச்சுவை ஆகாது

காவேரி திரைப்படம். அதில் கலைவாணரின் வயிற்று வழியாகக் கத்தி பாய்ந்து முதுகு வழியாக வெளிவந்ததுபோல் ஒரு காட்சி. ராஜ தர்பார் உடையில் நின்று கொண்டிருப்பார் கலைவாணர். துணை நடிகர் அதைப் பார்த்து “ஐயோ..என்னண்ணே கத்தி குத்தி முதுகுப் பக்கமா வந்துடுச்சேன்னு பதறுவார். பார்வையாளர்களிடமும் அப்பதற்றம் உண்டாகும். கலைவாணர் சிரித்துக்கொண்டே, “கத்தி குத்தி முதுகுப் பக்கம் வரல்லைபா. இப்படி சுத்தி வந்திருக்கு” என்று அரை வட்ட வடிவில் இடுப்பைச் சுற்றி வளைந்து வந்த கத்தியை வெளியில் எடுப்பார்.

சர்வர் சுந்தரத்தில் ஓட்டை பாக்கெட் வழியாகக் கீழே விழுந்த நாணயத்தை வேறு யாரோ போட்டுவிட்டதாக நினைத்து அக்கம்பக்கம் யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டமிட்டபடி எடுத்துச் சட்டைப் பையில் போட்டுக்கொள்ளும் நாகேஷின் நடிப்பு…

மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆரை வெட்டப்போகிறேன் என வாளை உருவிய டி.எஸ். பாலையா, “இன்னிக்கு என்ன கிழமை” என்று கேட்க, உதவியாளர், “வெள்ளிக்கிழமை” என்று சொல்ல, “ஆஹா இன்னிக்கு நான் கத்தியைத் தொடக் கூடாத நாள்” என்று வாளை மீண்டும் உறையில் தள்ளும் முகபாவம்…

இன்னும் இதுபோலப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதி நாட்கள் வரை தமிழ்த்திரை வழங்கிய நிஜமான நகைச்சுவைக் காட்சிகள் இவைதாம். நகைச்சுவை என்பது உள்ளார்ந்த அனுபவத்தைக் கிளறக்கூடிய தன்மை கொண்டது. நவில்தொறும் நூல் நயம் போல் நினைத்து நினைத்து மகிழக்கூடியதாக நகைச்சுவை அமைய வேண்டும்.

ஆனால் இன்றைய திரைப்படங்களில் அவ்வாறான காட்சிகள் அமையப்பெறவில்லை. நையாண்டி, கேலி, கிண்டல் இவைதான் நகைச்சுவையாகச் சித்தரிக்கப்படுகின்றன. உண்மையில் இதனை ஜோக் என்று சொல்லலாமே தவிர நகைச்சுவை என்று சொல்ல முடியாது. ஜோக் அடித்தால் அப்போது மட்டும் சிரிக்கலாம். அதன் பிறகு அதைப் பற்றிப் பேசவோ ரசிக்கவோ வாய்ப்பிருக்காது. எனவே நகைச்சுவைக்கான இடம் தற்போது திரையுலகில் வெற்றிடமாகியிருப்பது உண்மைதான். அதை உள்கால்சட்டை தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, வார்த்தையை வெறுமனே நீட்டி நீட்டிப் பேசுவதாலோ. “அடப்பாவிகளா” என்று பேச்சுக்குப் பேச்சு அங்கலாய்ப்பதாலோ நிரப்ப முடியாது. அதேபோல இதழ்களில் வெளியாகும் நகைச்சுவைத் துணுக்குகள், ஜோக்குகளை இன்றைய நகைச்சுவை நடிகர்கள் உதிர்ப்பதும் நகைச்சுவை ஆகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x