Published : 19 Jul 2017 04:21 PM
Last Updated : 19 Jul 2017 04:21 PM
வகுப்பில் இன்று ஆவணப்படத் திரையிடல். ‘லெஃப்ட்சைடு மீடியா சென்ட்டர்’ யூடியூப் சேனலில் இருந்து ‘கக்கூஸ்’ ஓடத் தொடங்கியது.
மூக்கில் கர்ச்சீஃப் வைத்தல், தலையைக் கவிழ்த்தல், கொள்ளுதல், வாந்தி அடக்குதல், இமைக்காது இருத்தல், மொபைலை நோண்டுதல்... இவை எல்லாம் அவ்வப்போது தென்பட்டன. அத்துடன், சிலருக்கு விழிகளில் கண்ணீர்த்துளிகள் அடிக்கடி பொத்துக்கொண்டும் வந்தன.
படம் முடிந்தபின் ஒருவித பேரமைதி. சலீம் சார் மவுனத்தை உடைத்தார்.
“இரண்டு மணி நேரத் திரைப்படத்தையே உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கான நம்ம சினிமா சூழலில் இருக்குறவங்க நீங்க. உங்களையே ஒண்ணே முக்கால் மணி நேரம் இந்த ஆவணப்படம் கட்டுப்போட்டிருக்கு. இதுக்குத் தொழில்நுட்ப அம்சங்களோ அழகியலோ கேமரா கோணங்களோ எதுவுமே காரணம் இல்லை. நம்மை ‘கக்கூஸ்’ கலங்கடிச்சதுக்குப் பின்னாடி மூணு சிம்பிளான, அதேநேரம் ரொம்ப கடினமான விஷயங்கள் பின்னணியில இருக்கு. அவை: நெருக்கம், நேர்மை, நோக்கம். திவ்யாவும், அவரது குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.”
“தமிழில் ஆவணப் படங்களுக்கான தளமே சரியா இல்லாத நிலையில், இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டதும், அது சமூக ஊடகங்கள் மூலமாகப் பரவலாக்கிப் பேசப்பட்டதும் ஆரோக்கியமான விஷயம். தமிழகம் முழுக்கப் பல இடங்களில் திரையிடப்பட்ட பிறகும் யூடியூபில் ஒன்றரை லட்சம் வியூஸ் வந்திருக்குன்னா சும்மா இல்லை” என்று வாய் பிளந்தான் பார்த்தான்.
கொந்தளிப்புக் கவிதா தன் மோடுக்கு மாறினாள். “மனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளும் சமூகத்துக்குப் பின்னால் இருக்கும் சாதி அரசியல் பிற்போக்குகள், சமூக அவலங்கள், சுரண்டல்கள், தீண்டாமைக் கொடுமைகள் முதலான ஒட்டுமொத்த உண்மைகளையும் பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள் வாயிலாகவும், உண்மைக் காட்சிகள் மூலமாகவும் பகிரங்கமாகப் பதிவுசெய்யப்பட்ட விதத்தில் இது மிக முக்கியமான ஆக்கம்.
நாம் தினம் தினம் கடக்கும் மனிதர்களும் குழந்தைகளும் நவீன அடிமைகளாக நாம் வாழும் சமூகத்திலேயே புழுங்கிச் சாகிறார்கள் என்பது தெரியாமலேயே நம்மில் பலரும் இயல்பு வாழ்க்கையை ரசித்து வாழ்கிறோம் எனும்போது குற்ற உணர்வு பொங்குகிறது.”
“கவிதா இப்படித்தான். உணர்வுபூர்வமா ஆயிட்டான்னா தமிழ் வாக்கியமும் பொங்கிடும்” என்று கொந்தளிப்புக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டான் ப்ரேம்.
“இந்த மாதிரி சமகாலப் பிரச்சினைகளை மூஞ்சியில குத்துற மாதிரியான ஆவணப்படங்களின் தேவை அதிகமா இருக்கு. குறிப்பாக, நம்மளோட பாரம்பரியத்தை வேரறுக்குற நடவடிக்கைகள் நிறையவே நடந்துட்டு இருக்கு. இந்த நிலை அப்படியே நீடிச்சுன்னா, எதிர்காலத் தமிழர்களுக்கு நம் பாரம்பரியம் குறித்த எந்த விஷயத்தையும் பார்க்க முடியாமல் போயிடும். முடிந்த வரைக்கும் முக்கியமான எல்லாத்தையும் ஆவணப்படமாக உருவாக்கணும்” என்று ஆவேசமாக அரசியல் கலந்தான் ஜிப்ஸி.
“நீ சொல்றது ஓகே தான். இப்போதைக்கு ‘கக்கூஸ்’ பத்திப் பேசுவோம். ஆவணப்படம் எடுக்கத் தொழில்நுட்ப அறிவோ அனுபவமோ ஒரு மேட்டரே இல்லை. முழுக்க முழுக்க சரியான தகவல்களைத் திரட்டி, உள்ளதை உள்ளபடி நேர்த்தியா காட்டினா போதும்னு இளம் படைப்பாளிகளுக்கு எவ்ளோ ஈஸியா இந்தப் படம் பாடம் எடுத்திருக்கு. இதைவிட நமக்கு வேற என்ன வேணும்? ஒரு மொபைல் கேமராகூடப் போதும், உருப்படியான ஆவணத்தைப் பதிவுபண்ண ஒரு மொபைல் கேமராகூடப் போதும்னு தோணுது” என்றாள் ப்ரியா.
“ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்குச் சாதி அடிப்படையில் இழைக்கப்படும் கொடுமையை கக்கூஸ் நாறடிச்சிருக்கு. சாதிதான் இங்கே வேர்க் காரணம்னு சொல்லப்படுறதையும் ஏத்துக்கணும். ஆனா, நிரந்தரத் தீர்வோடு சேர்த்து, பாதிக்கப்பட்டோரின் தற்காலிகப் பிரச்சினைகளையும் அதிகம் பேச வேண்டியிருக்கு. ஏன்னா, அது நமக்குதான் தற்காலிகம்; அவங்களுக்கு வாழ்நாள் சோதனை” என்று லாஜிக் பேச முயன்றான் பார்த்தா.
“இந்த விஷயத்துல பார்த்தாவோட பார்வையில் நான் உடன்படுறேன். கக்கூஸ் திரையிடல் ஒன்றுக்கு நானும் போயிருந்தேன். படம் முடிஞ்சி டிஸ்கஷன் நடந்துச்சு. படத்தில் காட்டப்பட்ட மக்கள் அன்றாடம் சந்திக்கும் பாதிப்புகளுக்குப் பார்வையாளர்கள் தனித்தனித் தீர்வுகளை முன்வெச்சாங்க. தூய்மைப் பணியில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தணும், அவங்களோட பொருளாதார நிலையை உயர்த்தணும், கல்வி அறிவுக்கு வழிவகுக்கணும், எல்லாத்துக்கும் மேல அவங்க நேரடியா பாதிக்காத அளவுக்கு நாம எப்படி நாம வெளியேற்றுற - கொட்டுற கழிவுகளை நாமே நிர்வகிக்கணும்னு பலரும் பல கருத்துகளை முன்வைச்சாங்க.
இவற்றில் பெரும்பாலானவை மக்களின் முழுமையான பங்களிப்பு இருந்தாலே பக்க விளைவு பாதிப்புகள் அனைத்தையும் அகற்ற முடியும்ன்ற அளவுலதான் இருந்துச்சு. ஆனா, திரையிடல் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர், இந்தப் பிரச்சினையில சாதியோட ரோலை மட்டும் பேசுவோம்னு பகிரங்கமா அறிவிச்சு, விவாதத்தைத் தங்கள் வசதிக்கு ஏற்ப திசைதிருப்பி விட்டது எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு”என்று அனுபவக் கவலையைப் பகிர்ந்தான் ரகு.
“அதெப்படி? தீராத பிரச்சினை என்னென்னு தெரிஞ்சுட்டு, அது தீராத மாதிரி பார்த்துகிட்டு, அதுக்காகப் போராடியே கவன ஈர்ப்பில் காலத்தை ஓட்டணும்ங்கிற சிலரோட பொழப்புல மண்ணைப் போடக் கூடாதாச்சே. மக்களின் மனமாற்றத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்க வேண்டும் என்பது அந்தப் படத்தில் இடம்பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குரல்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடியுது. அதேபோல சாதி ஒழிப்புதான் நிரந்தரத் தீர்வு என்பதையும் மக்கள் உணர வேண்டும். ஆவணப்படக் களத்தில் இதற்கான முக்கியப் புள்ளியாக ‘கக்கூஸ்’ இருக்கும்னு நம்புறேன்” என்றான் மூர்த்தி.
“ஒரு பிரச்சினை சார்ந்த ஆவணப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பின் கோணங்களும் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். கக்கூஸில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும், பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தரப்பும் முழுமையாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அரசு தரப்பையும் கேட்டுப் பதிவு பண்ணியிருக்கணும்னு தோணுது” என்றான் ப்ரேம்.
“பார்றா... அரசு தரப்பில் கேட்டா சொல்லிடுவாங்களா? போப்பு... நீ போயி வேலையைப் பாரு" என்று நக்கலாகக் கடிந்தான் ரகு.
“ஆனா, ஆவணப் படம் இவ்ளோ நீளமா இருக்குறது ரொம்ப டயர்டு ஆக்குது.”
“ஒரு சமூகத்தோட வாழ்க்கையை ஒன்றரை மணி நேரம்கூட உன்னால பார்க்க முடியல. அப்படிப்பட்ட சூழலிலேயே அவங்க தன் வாழ்நாள் முழுக்க சாகுறாங்கன்றதை யோசிச்சுப் பாரு. மேட்டர் புரியும்” என்று சற்றே உக்கிரம் காட்டினான் பார்த்தா.
“நீங்க சொல்றது சரிதான். திவ்யாக்களின் தேவை இங்கே அதிகமாவே இருக்கு” என்று முடித்தாள் கவிதா.
தொடர்புக்கு: siravanan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT