Published : 06 Jul 2017 03:57 PM
Last Updated : 06 Jul 2017 03:57 PM

ஜப்பானிடம் கற்றுக்கொள்வோம்!

“பா

குபலி என்ற தென்னிந்தியப் படத்தைப் பற்றி உலகளவில் பேசுகிறார்கள். மும்பையில் நான் வசிக்கும் பகுதியில் பிராந்திய மொழிப் படங்களை இந்தி பேசுகிற மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். நல்ல படங்களில் நடித்தால் மக்கள் மத்தியில் எப்போதும் மரியாதை உண்டு. நடிப்புக்கு மொழி எப்போதுமே தடையில்லை" என்று பேசத் தொடங்கினார் மாதவன். 'இறுதிச்சுற்று' படத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 'விக்ரம் வேதா' படத்தில் விக்ரம் என்கிற காவல்துறை என்கவுண்டர் அதிகாரியாக நடித்திருப்பவரிடம் பேசியதிலிருந்து...

நான்கு வருடங்கள் இடைவெளி எடுத்தாலும், உங்கள் மீதிருக்கும் எதிர்பார்ப்பு குறையவே இல்லையே?

இதுவரை செய்த படங்கள் நன்றாக இல்லை என்றால், மக்கள் எப்போதோ மறந்திருப்பார்கள். நல்ல படமாகச் செய்திருக்கும் போது அதிக இடைவெளி எடுத்துக் கொண்டால்கூட மறக்க மாட்டார்கள். இந்த விஷயத்தை எனக்கு ஆமிர்கான் சொல்லிக் கொடுத்தார். நான்கு வருடங்கள் இடைவெளி எடுத்துத்தான் 'லகான்' படம் செய்தார் ஆமிர்கான். சொந்தமாகக் கதை எழுதி, அடுத்த கட்டத்துக்குப் போகிற மாதிரி ஒரு படம் செய்தார். அது மிகவும் முக்கியம். ஜாலியாக ஊர் சுற்றுவதற்காக நான் இடைவெளி எடுக்கவில்லை. என்ன படம் செய்தாலும் ஓடுகிறது என்பதற்காக அதிக படங்களில் இயந்திரம்போல் நடிக்க முடிவு செய்துவிட்டால், படப்பிடிப்புக்குப் போகும்போது நடிப்பு மீதான பசி இருக்காது. நடிப்பு மீது பசி இருக்க வேண்டும். நடிப்பு மீது பசியிருந்தால் மட்டுமே, வெறியோடு பணிபுரிய முடியும்.

முன்னணி நடிகராக இருக்க, தொடர்ச்சியான பட அறிவிப்புகளை வெளியிட வேண்டியுள்ளது. ஆனால் உங்கள் விஷயத்தில் அப்படியில்லையே?

முன்பு தொடர்ச்சியாகப் பட அறிவிப்பு இருந்தால் மட்டுமே நமக்கு மார்க்கெட் இருப்பதாக நடிகர்கள் நினைத்தார்கள். எனக்கு அப்படி அல்ல. நான்கு வருடங்கள் கழித்துப் படத்தில் நடித்தால்கூட ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அக்கதை சரியாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். தொடர்ச்சியாக இந்தப் படம் முடித்துவிட்டு, அடுத்து இது என்று வரிசைப்படுத்த தைரியமில்லை. நிறையக் கதைகள் வரும் பட்சத்தில், கேமரா முன்னால் நடித்துப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு படத்தின் மூலம் வரும் மரியாதையையும், நம்பிக்கையும்தான் முக்கியமாகப் பார்க்கிறேன்.

உங்களிடம் வரும் கதைகளில், இது வெற்றியடையும் என்று எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்?

இன்றைய காலகட்டத்தில் அனைத்துக் கதைகளுக்கும் வெள்ளித்திரையில் வரக்கூடிய தகுதியிருக்கிறதா என்று பார்க்க வேண்டியதுள்ளது. சில கதைகள் தொலைக்காட்சி நாடகங்கள், இணையத் தொடர்களுக்குச் சரியாக இருக்கும். சில கதைகள் குறும்படத்துக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். அதற்கு மேல் இரண்டரை மணிநேரப் படமாக இழுக்க முடியாது. சினிமாவுக்காக வரும் கதைகளில் தலைநிமிர்ந்து பார்க்கக்கூடிய விஷயங்கள் என்ன இருக்கிறது என்று பார்ப்பேன். ட்ரெய்லர் உள்ளிட்டவற்றைப் பார்த்து, வெள்ளிக்கிழமை இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற வெறி யோடு மக்கள் இருக்க வேண்டும். சில சமயங்களில் நல்ல கதை வரும், ஆனால் அதற்கு நான் பொருத்தமாக இருக்க மாட்டேன்.

நடிகர் என்பதைத் தாண்டி வீட்டின் மாடியில் சொந்தமாகத் தோட்டம் வைக்கும் ஆர்வம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

ஒரு நடிகனாக இருப்பதால், என்னால் ஜாலியாக வெளியே போய் கடற்கரை, பூங்கா எல்லாம் சுற்ற முடியாது. பார்ட்டி செல்வது எல்லாம் ரொம்பவே போரடித்துவிட்டது. மூளையை இன்னும் வளர்த்துக்கொள்ள நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியதுள்ளது. வீட்டில் செடி, கொடிகள் வளர்த்து அதில் புழு வரும்போது ஒரு விவசாயி எவ்வளவு தவிக்கிறான் என்பது புரிந்துகொள்ள முடிகிறது. தன்னுடைய நிலம் கெட்டுப் போய்விட்டது என்றால் ஏன் தற்கொலை செய்து கொள்கிறான் என்பது புரிகிறது. ஆகையால் தினமும் ஏதாவது புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வெறித்தனமாக பின்பற்றி வருகிறேன். அது என்னுடைய திரையுலக வாழ்க்கைக்கும் உதவியாக இருக்கிறது.

தமிழகத்தில் இன்று விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்கிறீர்களா?

ஒரு வாய் சோறு சாப்பிடும்போது, அதில் எவ்வளவு ரத்தம், கண்ணீர் இருக்கிறது என்பது தெரிந்தால் அந்தச்சோறு கூட நமக்குள் போகாது. நம் நாட்டில் விவசாயிகள் அந்தளவுக்கு ஒரு கொடூரமான நிலையில் இருக்கிறார்கள். அது நம் மக்களுக்குப் புரியவில்லை. ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஏதாவது ஒரு வியாபார ஒப்பந்தம் செய்தால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி "இதில் நம் நாட்டுக்கு ஏதாவது தவறு நடக்குமா, நாட்டுக்கு நல்லதா?" என்பதுதான். நீங்கள் எவ்வளவு பெரிய தொகை கொடுத்தாலும் நாட்டுக்குக் கெடுதல் என்றால் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். அந்த மாதிரியான ஒரு உணர்வு நம் மக்களுக்கு வருவதற்கு, எவ்வளவு தூரம் போராட வேண்டும் என்று தெரியவில்லை.

அந்த உணர்வு நம் மக்களிடம் எப்போது வரும் என நினைக்கிறீர்கள்?

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா ஜப்பான் மீது பயங்கரமாகத் தாக்குதல் நடத்திவிட்டது. ஆனால், அவர்கள் பயப்படவே இல்லை. ஏனென்றால் அவர்கள் வாழும் விதமே வேறு. ஹிரோஷிமா - நாகசாகி தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் யோசிக்கும் விதமே மாறிவிட்டது. இப்போது உலகத்தில் மிகவும் வெற்றிகரமான ஒரு நாடாக இருக்கிறார்கள். இப்படிப் பல நாடுகள் சுதந்திரத்தின் அருமையை உணர்ந்து, யோசித்துப் பல நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரியான மிகப்பெரிய பாதிப்பு நம் நாட்டுக்கு வந்தது கிடையாது. அதனால், நாம் யார் வந்தாலும் அமைதியாக இருந்துவிடுகிறோம். நம்மை யார் ஆண்டாலும் சோறு வருகிறதா, நாம் நன்றாக இருக்கிறோமா, கலாச்சாரத்தில் சரியாக இருக்கிறோமா என்று சரிபார்த்துக்கொள்வதோடு தேங்கிவிடுகிறோம். உழைக்கும் வழியும் பிழைக்கும் வழியும் கட்டாயமாக இல்லை. நம் நாட்டுக்குச் சுதந்திரமே அகிம்சை வழியில்தான் வந்தது. அது நல்ல விஷயம். நாம் நினைத்தால் முடியும் என்ற நம்பிக்கையை அது கொடுக்கிறதே தவிர, இதையெல்லாம் நாம் பண்ண வேண்டும், மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிட்டது என்று புரிந்தால் மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.

முன்னணிக் கதாநாயகராக இருந்து கொண்டு 'விக்ரம் வேதா' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடிக்க ஒப்புக் கொண்டது ஏன்?

இந்தியில் நிறைய நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடித்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் கதைக்கு நியாயமாக இருக்க வேண்டும். கதையில் சரியான கதாபாத்திரமாகத் தேர்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் ரசிப்பார்கள். இதில் அனைத்து கதாபாத்திரங்களுமே சரியாகப் பொருந்தியுள்ளன. விஜய் சேதுபதியின் ‘வேதா' கதாபாத்திரத்தை என்னால் செய்ய இயலாது. அவருடைய நடிப்பைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ரொம்ப இயல்பாக நடிக்கிறார், புத்திசாலியான நடிகர். சில வசனங்களைக் கண்கள் மூலமாக வெளிப்படுத்து கிறார். அவரை ஏன் ‘மக்கள் செல்வன்’ என்று தமிழகத்தில் அழைக்கிறார்கள் எனப் புரிந்துகொண்டேன். ரசிகர்களுடன் அவரின் அணுகுறை ஆச்சரியமாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x