Published : 19 Jul 2017 04:20 PM
Last Updated : 19 Jul 2017 04:20 PM
ரெட் ஒன்’ உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களில் படமெடுக்கும் காலமிது. ‘இன்னைக்கெல்லாம் யார் சார் ஃபிலிம் யூஸ் பண்றா?’ என்று கேட்கும் அளவுக்கு, ஸ்டில் கேமராவில்கூட ஒளிப்படச் சுருளைப் பயன்படுத்தும் போக்கு, குறைந்துவரும் காலகட்டத்தில் இருக்கிறோம். என்றேனும் ஒருநாள் நமக்கு, நாஸ்டால்ஜியா உணர்வுகள் பீறிட்டு எழும்போது, ‘அடடா... ஃபிலிம் காலங்கள் எவ்வளவு அழகானவை’ என்று சொல்லத் தோன்றும்.
அப்படியான படச் சுருள்களை எல்லாம் பாதுகாக்கும் மாபெரும் பணியைச் செய்துவருகிறது புனேவில் உள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் (NFAI-National Film Archive of India ). மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தக் காப்பகத்தில், மிகவும் அரிதான திரைப்படங்கள், லூமியர் சகோதரர்கள் எடுத்த காட்சிகள், திரைப்பட போஸ்டர்கள், கறுப்பு வெள்ளை திரைப்படக் காலத்தின் ‘வொர்க்கிங் ஸ்டில்’கள் எனத் தகவல் புதையலாக இந்தக் காப்பகம் செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் 1940 மற்றும் 50-களில் மராத்தி திரையுலகில் ஸ்டில் போட்டோகிராஃபராகப் பணியாற்றிய எஸ்.எம்.அஜ்ரேக்கர் எடுத்த சுமார் ஆயிரம் ஒளிப்படங்களை, அவருடைய மகள் சாம்பவி பால் இந்தக் காப்பகத்துக்கு ஒப்படைத்திருக்கிறார்.
புனேவில் உள்ள நவ்யுக் மற்றும் பிரபலத் திரைப்பட நிறுவனங்களில் ஒளிப்படக்காரராகப் பணியாற்றியவர் அஜ்ரேக்கர். இவர் பல்வேறு மராத்தித் திரைப்படங்களில் ஸ்டில் போட்டோகிராஃபராகப் பணியாற்றியிருக்கிறார். ஜகா பத்யானே தேனே ஆஹே (1949), வர் பஹிஜே (1950), சாரதா (1951), நர்வீர் தனாஜி (1952), ஈன் மீன் சாதேதீன் (1954) மற்றும் தீன் முலே (1954) ஆகியவை இவர் பணியாற்றிய முக்கியத் திரைப்படங்கள்.
இந்தப் படங்களின் ஸ்டில் படங்கள் இதுவரை யாருக்கும் கிடைக்காமல் இருந்தன. தற்போது, இந்தக் காப்பகத்தில் ஒப்படைத்ததன் மூலம், திரைப்பட ஆய்வாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள், அந்தக் காப்பகத்தின் அலுவலர்கள்.
இந்தப் படங்களின் சிறப்பம்சம் என்னவெனில், அஜ்ரேக்கர் பயன்படுத்தியிருக்கும் ஒளி. இருளையும் ஒளியையும் இரண்டு வண்ணக் கலவைகள் போலப் பயன்படுத்தியிருக்கும் அவரின் நேர்த்தியைப் பாருங்கள். தவிர, இந்தப் படங்கள் அனைத்தும் ‘மேட் ஃபினிஷிங்’ எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரிண்ட் செய்யப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. அந்தப் படங்களில் சில உங்கள் பார்வைக்கு...
படங்கள் உதவி: தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT