Published : 16 Jul 2017 09:13 AM
Last Updated : 16 Jul 2017 09:13 AM
எல்லோரும் மதிக்கும் அளவுக்கு பணம் சம்பாதித்து வாழ நினைக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் சூதாட்டம் சூழ்ந்தால் என்ன நடக்கும்? அதுதான் இந்த ‘பண்டிகை’.
நேர்மையாக உழைத்து தனக்கொரு நல்ல வாழ்வு அமைத்துக்கொள்ள முயல்கிறான் வேலு (கிருஷ்ணா). குடும்பத்தை நிம்மதியாக வைத்துக்கொள்ள, சூதாடினாலும் தப்பில்லை என்று எண்ணுகிறான் முனி (சரவணன்). சமூகம் எக்கேடு கெட்டாலும் தன் கருவூலம் நிரம்பினால் போதும் என்று செயல்படுபவன் தாதா (மதுசூதனன் ராவ்). சூதாட்ட சூழ்ச்சி காரணமாக தாதாவிடம் தான் இழந்த பணத்தை வேலு உதவியுடன் பெற்றுவிட ஒரு திட்டம் தீட்டுகிறான் முனி. இதில் வென்றது யார் என்பதே படம்.
கதை பழசு என்றாலும், வலுவான திரைக்கதை ஓட்டம் படத்தை தாங்கிப் பிடிக்கிறது. சூதாட்டத்தின் உள்ளே நடக்கும் சகுனியாட்டத்தையும் விறுப்பாகச் சொல்கிறது 2-ம் பாதி. ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியே நடத்தப்படும் சூதாட்டம், பலசாலிகளை மோதவிட்டு அதில் பந்தயம் கட்டி பணம் குவிக்கும் ‘ஃபைட்டிங் கிளப்’ சூதாட்டம் என்று திரைக்கதையை வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஃபெரோஸ். திரைமறைவு கேங்கை விவரித்த விதம், காட்சியமைப்புகளின் நேர்த்தி, திரைக்கதை நகர்வுகள் அழகு!
சூதாட்டத்தில் ஒருவர் எப்படி சிக்குகிறார்? அவரை உள்ளே கொண்டுவர எதிரிகள் வகுக்கும் வியூகம், அதில் புழங்கும் பண பேரம் உள்ளிட்டவை தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வன்முறைதான் சற்று தூக்கல்!
சூதாட்டத்தின் பின்னணியில் காவல் துறை இருப்பதை பால்ராஜ் (சண்முகராஜா) கதாபாத்திரம் வழியே சொல்லியிருக்கிறார்கள்.
‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ திரைப்படங்களுக்குப் பிறகு, திரையில் ரசிகர்களை நன்கு வசீகரிக்கிறார் கிருஷ்ணா. காதல் காட்சிகளிலும், காதலியின் செல்போன் எண்ணை மறந்துவிட்டு, அலையும் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளில் அசத்துகிறார். காவ்யாவாக வரும் நாயகி ஆனந்திக்கு பெரிதாக வேலையில்லை. அவ்வப்போது தலைகாட்டுகிறார். தாதா வீட்டில் வேலு, முனி குழுவினர் கொள்ளையடிக்கப் போகும்போது, வந்து செல்ஃபி எடுக்கிறார். அந்த காட்சிகள் எதற்கு என்றே தெரியவில்லை. அதன் பின்னர் படத்தில் இருந்தே காணாமல் போய்விடுகிறார் நாயகி.
சூதாட்டத்தால் அனைத்தையும் இழக்கும் சரவணன், தான் இழந்ததை தாதா வீட்டில் இருந்து கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகளில் துளியும் நியாயம் இல்லை. ஆனால், அவர் மாட்டிக்கொள்ளும் காட்சிகளில் ரசிகர்கள் ‘அய்யோ பாவம்’ என சொல்லும் அளவுக்கு குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார்.
தாதா கதாபாத்திரத்தில் மதுசூதனன் ராவ் கச்சிதம். வேலுவுடன் மோதும் விக்டர், மாலிக், முந்திரியாக வரும் நிதின் சத்யா, கிளைமாக்ஸில் மோதும் இரட்டையர்கள் என அனைவரும் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர். கருணாஸ் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வருகிறார். எம்எல்ஏ என்பதாலா? தெரியவில்லை.
வேலுவிடம் காவ்யா பீர் கேட்பதும், குடித்துவிட்டு போன் பேசுவதும் அபத்தம். கொள்ளையைத் துப்பு துலக்க வருபவர் பயன்படுத்தும் அந்த ஆயுதம், பார்வையாளரையே கிழிப்பதுபோல இருக்கிறது. தவிர்த்திருக்கலாம்.
சண்டைக்காட்சிகள், முத்தாய்ப்பான சில வசனங்கள் சிறப்பு. ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை வலு சேர்க்கிறது. பாடல்கள் சுமார் ரகம். காதல் காட்சிகளில் அதிகம் செயற்கைத்தனம்! படத்தின் ஓட்டத்தில் இருந்து காதல், பாடல் காட்சிகள் விலகியே நிற்கின்றன.
படத்தின் 2-ம் பாதியில், சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதிலும், அதற்காக திட்டமிடுவதையும் காமெடியாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதனாலேயே நேர்த்தியான கிளைமாக்ஸ் அமைந்தும், வேலைநாளில் வந்த பண்டிகைபோல... பாதி கொண்டாட்டம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT