Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

யாருக்கும் கிடைக்காத பரிசு!: தமிழில் உருகும் நானி

மணிரத்னம் பற்றி கேட்டா நான் மணிக்கணக்குல பேசிக்கிட்டே இருப்பேன். எனக்கு ரொம்ப பிடிச்ச இயக்குநர். அவரோட படங்களை நான் எத்தனை தடவை பார்த்தேன்னு எனக்கே தெரியாது. அவரை நேர்ல பார்த்து பேசணும்னு ஆசையா இருக்கு. அவரோட படத்துல ஒரு சின்ன ரோல்லயாச்சும் நடிச்சுரணும். அதுதான் என்னோட ஆசை, லட்சியம் எல்லாமே என்று ஆரம்பத்திலேயே அசரடிக்கிறார் 'நான் ஈ' நானி.

‘மெளன ராகம்' படத்தில் சின்னக் கதாபாத்திரத்தில் வந்தாலும், கார்த்திக்கின் பாத்திரப் படைப்பு ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது. அதைப் போலத்தான் ‘நான் ஈ' படத்தில் சில காட்சிகளே வந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை யடித்திருக்கிறார் நானி. ‘ஆஹா கல்யாணம்’ இசை வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அவரிடம் பேசியதிலிருந்து....

‘ஆஹா கல்யாணம்’ படத்துல உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க?

இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். என்னோட கேரக்டர் பேரு சக்தி. படம் பாக்கறவங்க எல்லாருமே சக்தியோட ஒன்றிடுவாங்க. ஏன்னா ரொம்ப துருதுருன்னு எல்லா விஷயத்தையும் பண்ற கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இந்தியில் வெற்றி பெற்ற ‘பேண்ட் பஜா பராத்' படத்தோட ரீமேக் இது. படத்தைப் பார்த்தேன் அவ்வளவு சூப்பரான கதை. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். பாலிவுட்ல பிரபலமா இருக்க யாஷ்ராஜ் நிறுவனம் முதன் முதலா என்னோட படம் மூலமா தென்னிந்தியா சினிமாவுக்கு வந்துருக்காங்க.

அதனால ஒரு பயம் கலந்த சந்தோஷம் இருக்கு. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் எல்லா ரையும் வைச்சு படமெடுக்கறவங்க. இவங்க தயாரிச்ச ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' படத்தை தியேட்டர்ல க்யூல நின்னு சண்டை போட்டு டிக்கெட் வாங்கி பார்த்திருக்கேன். அவங்க எடுக்குற படங்கள் அவ்ளோ க்யூட்டா இருக்கும்.

விஜய் சேதுபதி உங்களோட நெருங்கிய நண்பராமே. உங்களோட நட்பு எப்படி தொடங்கிச்சு?

என்னோட படங்கள் அவருக்குப் பிடிக்கும். அவரோட படங்கள் எனக்குப் பிடிக்கும். நாங்க சந்திச்சு ரொம்ப நேரம் பேசுற நண்பர்கள் கிடையாது. ஏதாவது நிகழ்ச்சிகள்ல சந்திச்சுக்குவோம். அப்போ பேசிக்கிட்டே இருப்போம். சினிமா மீது எங்களோட பார்வை ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கிறேன். ரொம்ப வித்தியாசமான கதைகளை எல்லாம் தேர்வு செஞ்சு நடிக்கிறார். இப்போகூட அவரோட நடிப்பில வர இருக்கிற ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தோட தெலுங்கு ரீமேக் ரைட்ஸ் நான் வாங்கியிருக்கேன்.

‘நான் ஈ’ வெளியீட்டுக்கு பிறகு ரசிகர்கள் உங்களை எப்படிப் பார்க்கறாங்க?

தமிழ், தெலுங்கு, இந்தின்னு என எல்லா மொழிகளிலும் படம் ரிலீஸாச்சு. ராஜமெளலி சாரோட படங்கள்ல நடிக்கிறது அவ்வளவு சுலபம் கிடையாது. ரொம்ப கறாரான பர்ஃபெக்‌ஷனிஸ்ட். ஒரு சீனை எடுக்கறதுக்கு முன்னாடி, அந்த சீனில் வரப்போற சின்னப் பொருட்கள்ல இருந்து, நடிகர்கள் வரைக்கும் சரியா இருக்கானு பார்த்துதான் ஆக்‌ஷனே சொல்லுவார். நான் இப்போ இருக்குற அப்பார்ட்மெண்ட்ல சின்ன குழந்தைகள் எல்லாருமே என்னை ‘ஈ மாமா'னு கூப்பிடுற அளவுக்கு ரொம்ப பாப்புலர் ஆயிட்டேன்! ஆனா `நான் ஈ'க்கு முன்னாலயே நான் நடிச்ச `வெப்பம்' எனக்கு ரொம்ப பிடிச்ச தமிழ்ப்படம், அந்தப் படத்தோட டயலாக்ஸ் பேசிப்பேசி தமிழ்ப்பேசக் கத்துக்கிட்டேன். தமிழ்ரசிகர்கள் அவங்கள்ல ஒருத்தனா என்னை எத்துகிட்டு இருக்காங்க. தெலுங்கு நடிகர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டுல கிடைக்காத கிப்ட் இது. இந்த அன்பை கடைசிவரைக்கும் காப்பாத்துவேன்.

அடுத்த நேரடி தமிழ்ப் படம் எப்போ?

நான் நடிக்கிறேன்ன உடனே ‘ஆஹா கல்யாணம்' படத்தை தெலுங்கு படத்தோட டப்பிங் அப்படினு சிலர் நினைச்சுட்டாங்க. நான் நடிச்சு முடிச்சுருக்க இரண்டாவது தமிழ்படம் ‘ஆஹா கல்யாணம்'தான். அதைதான் தெலுங்குல டப் பண்றாங்க. நல்ல கதைகள் வந்தா தமிழ்ல தொடர்ந்து படங்கள் பண்ற திட்டமிருக்கு.

உங்களோட படங்களைப் பார்த்து காதல் மனைவி என்ன கமெண்ட் கொடுக்குறாங்க?

நான் படங்கள்ல நடிக்கிறதுக்கு முன்னாடியே அவங்களை எனக்குத் தெரியும். நிறைய உதவி பண்ணியிருக்காங்க. இப்போ கூட என்னோட படங்களைப் பார்த்து, இதைப் இப்படி பண்ணியிருக்கலாம்ல அப்படினு கமெண்ட் சொல்லுவாங்க. என்னோட இந்த வளர்ச்சில என்னோட மனைவிக்குக் கணிசமான பங்கு இருக்கு.

உதவி இயக்குநர், ஆர்.ஜே, எப்படி ஹீரோவாகும் வாய்ப்பு கிடைச்சது?

யதேயச்சையானதுதான். உதவி இயக்குநரா இருக்கும்போதுகூட, நான் நடிகன் ஆவேன்னு நினைச்சதில்லை. இயக்குநரா ஆயிருக்க வேண்டியவன், இப்போ ஹீரோ. எல்லாமே நல்லதாவே நடந்துட்டு இருக்கு. அப்போ விரை வில் நானி படம் இயக்குவார்னு நினைக்க லாம். இப்போ ஹீரோவா தொடர்ச்சியா படங்கள் பண்ணிட்டு இருக்கேன். பின்னாடி நடக்கப் போறதை இப்பவே என்னால சொல்ல முடியாதே. முதல்ல நானி ஒரு நல்ல நடிகன்னு ரசிர்கள்கள், விமர்சகர்கள்கிட்ட பேர் வாங்கணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x