Published : 10 Feb 2017 10:11 AM
Last Updated : 10 Feb 2017 10:11 AM
விழிப்புணர்வு என்ற மருந்தை அதன் கசப்பு தெரியாமல் மக்களுக்கு ஊட்டிவிடும் திறன் பெற்றவை திரைப்படங்கள். அச்செயலில் அவை அடையும் வெற்றியில் அதன் இசை, பாடல் வரிகளுக்கு அதிகப் பங்கிருக்கிறது. சமூக நீதி, மத நல்லிணக்கம், பெண் விடுதலை, பெண் கல்வி முதலான அம்சங்களை மையமாகக் கொண்டு ‘தியாக பூமி’, ‘படிக்காத மேதை’, ‘பாவ மன்னிப்பு’, ‘நானும் ஒரு பெண்’ உள்ளிட்ட பல தமிழ் படங்கள் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அம்சங்களுக்கு இணையான அந்தஸ்துடன் அவற்றின் மிகச் சிறந்த இசைக்காகவும் வெற்றிபெற்றன. அதேபோல் இந்தியிலும் இம்மாதிரிப் படங்களின் அமோக வெற்றி அதன் பாடல் வரிகளாலும் சிறந்த இசையாலும் மட்டுமே எளிதில் எட்டப்பட்டது.
அன்பை இழக்க வைக்கும் கல்வி
‘அன்பட்’ (படிக்காதவன்/படிக்காதவள்) என்ற பெயரில் 1962-ம் வருடம் வெளிவந்த இந்திப் படம், பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் படம். ஒரு செல்வந்தர் தனது சகோதரியின் விருப்பபடி அவளைப் படிக்க வைக்காமல் மணம் முடித்து வைக்கிறார். படிப்பறிவு இல்லாததால் அந்தப் பெண் படும் இன்னல்களையும் கவிஞராக விளங்கும் அவளது கணவன் மீது அவள் கொள்ளும் காதல் பயனற்றுப் பாழ்படுவதையும் இந்தப் படம் அழுத்தமாகச் சொல்லுகிறது.
இந்தப் படத்துக்காக ராஜா மெஹதி அலி கான் எழுதி மன்மோகன் இசை அமைத்திருக்கும் இரண்டு பாடல்கள், எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத, மிகச் சிறந்த இந்தித் திரைப்பாடல்களின் வரிசையில் அடங்கும். இந்தப் புகழுரைக்குச் சான்றாகக் கூறப்படும் ஒரு செய்தி சுவையானது.
‘ஆப் கீ நஜ்ரோனே சம்ஜா, பியார் கீ காபில் ஹூம் மே’ என்று தொடங்கும் ஒரு பாடலையும், ‘ஹை இஸ்ஸீ மே பியார் கீ ஆபுரூ’ என்றும் தொடங்கும் இன்னொரு பாடலையும் கேட்டு மயங்கிய இந்தித் திரையிசை உலகின் ஜாம்பவான் நௌஷாத், மன்மோகனிடம் சென்று, “நான் இசை அமைத்த எல்லாப் பாடல்களையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், அதற்கு பதிலாக இந்த இரண்டு பாடல்களை மட்டும் நீங்களும் மெஹதியும் எனக்கு விட்டுத்தாருங்கள், என் பெயரில் அவை திரையில் வர விரும்புகிறேன்” என்று கூறினாராம்.
டால்டாவை விரும்பாத மாலா
இந்தப் பாடல்களைப் பார்ப்பதற்கு முன், ‘அன்பட்’ படத்தின் வெற்றியில் முக்கியப் பங்காற்றிய அதன் நாயகி மாலா சின்ஹாவைப் பற்றிச் சிறிது குறிப்பிடுவது இங்கு பொருத்தமாக இருக்கும். ‘சோக உணர்வைச் சிறப்பாக வெளிப்படுத்தும் கவர்ச்சியான முகம் கொண்டவர்’ என்று பாராட்டப்படும் மாலா சின்ஹாவின் இயற்பெயர் ‘அல்டா சின்ஹா’. வங்காளக் கிறிஸ்தவத் தந்தைக்கும், மாதேஷ் நேபாளத் தாய்க்கும் பிறந்த இந்த அழகான பெண், நெய் போன்ற மென்மையான சருமத்தின் பொருட்டு, சக பள்ளி மாணவிகளால் ‘டால்டா’ (அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஒரு தாவர எண்ணெய்யின் பெயர்) என்று கேலி செய்யப்பட்டாள். நடிப்பிலும் படிப்பிலும் சுட்டியான அல்டா சின்ஹா, டால்டா சின்ஹா ஆகாமல் இருக்கும் பொருட்டு, தன் பெயரை மாலா சின்ஹாவாக ஆக்கிக் கொண்டார்.
‘ஆப் கீ நஜ்ரோனே’ என்று தொடங்கும் பாடலின் பொருள்:
உண்மை அன்புக்கு நான் தகுதியானவள் என்பதை
உங்களின் விழிகள் உணர்ந்து கொண்டுவிட்டன
ஓ இதயத் துடிப்பே, நில், என் இலக்கு கிட்டிவிட்டது
உங்களின் இந்த முடிவு, எனக்குப் பூரண சம்மதமே
‘ஓ நன்றி பிரபு’ என உரைக்கின்றன என் கண்கள்
மகிழ்ச்சியுடன் உங்கள் வாழ்வில்
மங்கை எனக்கு இடமளித்ததற்கு.
என் இலட்சியம் நீங்கள், உங்கள் இலட்சியம் நான்
என இருக்கும்பொழுது
எனக்கு ஏன் பயம் சூறாவளியால்
சூறாவளியிடம் சொல்லுங்கள்
என்னைக் காக்கும் கரை கிட்டிவிட்டது
நிழலாக என் நெஞ்சில் படர்ந்துவிட்டீர்கள்
மழையாக எங்கும் ஒலிக்கின்றன
மங்கல வாத்தியங்கள்
இரண்டு உலகங்களின் ஆனந்தமும்
இன்று இடம் பெற்றது என் வாழ்வில்.
மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, எழுத்தறிவற்ற ஒரு பெண், தன் கணவன் மீது பாடும் வரிகளாக மட்டும் தெரியும். ஆனால் இப்பாடல் பிறந்த பின்னணி வேறு. பாடலாசிரியர் தன் தகுதிக்கேற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற வருத்தம் மேலிட மும்பையை விட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பிவிட முடிவு செய்தார். அம்முடிவை அறிந்த அவரது குரு, ‘இனி உனக்குப் பொற்காலமே’ என்று தடுத்து, பணியில் தொடரச் செய்தார். அவர் சொல் கேட்டு, பின்னர் பெரும் புகழ் அடைந்த மெஹதி தன் குருவின் மீது எழுதியதே இப்பாடல்.
இப்பாடலைத் திரையில் இடம்பெறச் செய்வதற்குத் தொடக்கத்தில் மறுத்த மெஹதி, பின்னர் குருவின் அனுமதியுடன் அதற்கு உடன்பட்டார்.
குருவை நினைத்து எழுதப்பட்ட இந்தப் பாடல் வைணவ மரபின்படி இறைவனுடன் மனிதன் கொள்ள வேண்டிய சரணாகதித் தத்துவத்தை எடுத்துக் காட்டும்படியும் அமைந்திருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். இத்தகைய பாடல் படத்தின் சூழலுடனும் நன்கு பொருந்திப்போனது இதன் கூடுதல் சிறப்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT