Published : 20 Jan 2017 11:42 AM
Last Updated : 20 Jan 2017 11:42 AM
மொழிகளைக் கடந்த ரசனையாக இதுவரை நாம் கண்ட பாடல்கள் யாவும் ராஜேந்திர கிஷன் ஆக்கத்தில் அமைந்தவை. படித்து ரசிக்கும் வண்ணம் பல சிறந்த கவிஞர்களின் பட்டியலைக் கொண்ட இந்தித் திரை உலகில் கவி ராஜா மெஹதி அலிகான் எழுதிய சில பாடல்களை இனி நாம் பார்க்கலாம்.
பாடல்களின் ராஜா
நமது பட்டுக்கோட்டையார் போன்று, இளமையிலேயே இயற்கை எய்திவிட்ட மெஹதி தன் முன்னொட்டாக அமைந்த ‘ராஜா’என்ற அடைமொழிக்கு ஏற்பத் திரை இசைப் பாடல்களின் ராஜாவாகத் திகழ்ந்தவர். 38 வயதில் முடிவுக்கு வந்த அவரின் வாழ்க்கை இந்தித் திரை இசை ரசிகர்களின் மனதில் என்றென்றும் நீங்காத இனிய ராகமாக ஒலித்துக்கொண்டிருக்கும். தற்போது பாகிஸ்தான் பகுதியாக விளங்கும் கர்மாபாத் என்ற ஊரில் 1928-ல் பிறந்த இந்த ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை, தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார். சிறந்த உருதுக் கவிஞர்களாகத் திகழ்ந்த அவருடைய தாய் ஹெபே சாஹேபா மற்றும் குடும்ப நண்பர் ஆலாமா ஆகியோர் மெஹதியின் உருதுக் கவி ஆற்றலை ஊக்குவித்தனர்.
18 வயதில் பாடலாசிரியர்
மெஹதியின் உற்ற தோழனாக இருந்த புகழ்பெற்ற உருது எழுத்தாளர் சாதத் ஹசன் மன்ட்டோவின் ஆதரவில் இந்தித் திரை உலகில் வசனகர்த்தாவாக நுழைந்த மெஹதிக்கு, ஃபிலிமிஸ்த்தான் ஸ்டுடியோ உரிமையாளர் முகர்ஜி, தனது ‘தோ பாயி’ (இரு சகோதரர்கள்) என்ற படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பைத் தந்தார்.
1946-ம் ஆண்டு வெளியான அப்படத்தில் தனது முதல் பாடலை எழுதியபோது மெஹதியின் வயது 18. அடுத்த 20 வருடங்களில் மெஹதி எழுதிய திரை இசைப் பாடல்கள் மட்டும் 380. இது தவிர, தன் நண்பனின் நினைவில், ‘ஜன்னத் ஸே மன்ட்டோ கா ஏக் கத்’ (சொர்க்கத்திலிருந்து மன்ட்டோவின் கடிதம்) என்ற கவிதை உட்பட ஏராளமான உருது ‘திவான்’ (ஒரு வித செய்யுள் நடையில் அமைந்த) சிறுகதைகள் ஆகியவற்றையும் படைத்துவிட்டு 1966 -ம் ஆண்டு மறைந்தார் மெஹதி அலி கான்.
இந்தித் திரைப் பாடல்களில் நாயகன், நாயகியை ‘ஆப்’ (நீங்கள்) என்று விளித்துப் பாடும் பாணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தி மெஹதி எழுதிய பல பாடல்கள் மூலம் அவர் பெண்களை மதிக்கக் கற்றுக்கொடுத்த பெரிய மனிதராக ரசிகர் மனதில் இடம் பெற்றார். இப்படி ‘ஆப்’ என்று தொடங்கும் அவரது அனைத்துப் பாடல்களும் இன்றும் கேட்டு ரசிக்கக்கூடியவை.
குறைந்த வயதில் நிறைந்த சாதனை
இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் இசையில் எழுதத் தொடங்கிய மெஹதி, ஏறக்குறைய அப்போதிருந்த அனைத்து இசை அமைப்பாளர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். கேம்சந்த் பிரகாஷ், எஸ். என் திரிபாதி, ரோஷன், இவரது நெருங்கிய நண்பராக விளங்கிய மதன் மோகன், சி.ராமச்சந்திரா, ஓ.பி நய்யார், லக்ஷ்மிகாந்த் பியாரிலால் போன்ற அதிகம் அறிந்தவர்கள் மட்டுமின்றி, வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாத, இக்பால் குரோஷி, பாபுல், ராபின் பானர்ஜி, ஆர்.டி. முகர்ஜி போன்றவர்கள் இசையமைத்த திரைப்படங்களுக்கும் தன் பாடல் வரிகளால் புகழ் சேர்த்தார்.
எனினும், மதன்மோகன் இசை அமைப்பில் லதா மங்கேஷ்கர் பாடிய மெஹதியின் சில பாடல் வரிகள், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை அமைப்பில் பி.சுசிலா பாடிய கண்ணதாசனின் சில பாடல் வரிகள் போன்று இனி எக்காலத்திலும் உருவாக முடியாது என்று சொன்னால் அது மிகையல்ல. லதா மங்கேஷ்கர் பாடியுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களில் மிகச் சிறந்தவை என அவரே தெரிவு செய்த 10 பாடல்களில் ஐந்து மெஹதி அலி கான் எழுதியவை என்பது குறிப்பிடத் தகுந்தது.
குறிப்பாக, ‘வோ கோன் தி’ (யார் நீ என்ற பெயரில் தமிழில் வந்த படம்) என்ற படத்தில், ‘லக் ஜா கலே கீ ஃபிர் யே ஹஸ்ஸின் ராத்’ (‘பொன் மேனி தழுவாமலே’ என்ற கண்ணதாசனின் பொருத்தமான மொழிபெயர்ப்புப் பாடல்) ‘நயனா பர்ஸே ரிம் ஜிம்’ (நானே வருவேன் அங்கும் இங்கும்) ஆகிய பாடல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கேட்டு மட்டுமே உணர முடியும்.
பெயரில் மட்டும் ராஜாவாக இல்லாமல் தனது கொள்கையிலும் அரசனாகத் திகழ்ந்த மெஹதி, பொருளற்ற, மலிவான கருத்துடைய பாடல் எதையும் எழுதவில்லை. அப்படிப்பட்ட பாடல் வாய்ப்பை அறவே மறுத்த மெஹதி, தனது பாடல் ஒவ்வொன்றும், காதல், கோபம், தாபம், நகைச்சுவை ஆகிய மனித உணர்வுகள் மென்மையாக, கவித்துமாக, காலத்தால் அழியாத கற்சிலையாக விளங்கும்படிச் செய்தார் என ஒரு நேர்காணலில் கூறினார் இந்தித் திரைப்பட நடிகர் மெஹமூத்.
மெஹதி அலி கானிடம் கார் டிரைவராக ஒரு சமயம் வேலை பார்த்த நல்வாய்ப்பைப் பெற்றதாக அந்த நேர்காணலில் கூறிய மெஹமூத், மெஹதியின் கார் ஓட்டத்தை மட்டுமின்றி அவரின் கருத்து ஓட்டத்தையும் அறிந்த கலைஞராக இருந்தார் போலும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT