Published : 08 Nov 2014 11:59 AM
Last Updated : 08 Nov 2014 11:59 AM

‘நற்பணி இயக்கமாக மட்டுமே ரசிகர் மன்றம் இயங்க வேண்டும்’ - 60-வது பிறந்தநாளில் கமல்ஹாசன் வேண்டுகோள்

அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் நமக்கு பின்னும் நற்பணி இயக்கமாகவே இயங்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமல்ஹாசனின் 60-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கமல்ஹாசன் பேசியதாவது:

நான் எனது ரசிகர்களிடம் நாட்டுக்கு நற்பணிகளை செய்யுங்கள், தெருக்களை சுத்தப்படுத்துங்கள் என்று 36 ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன். ரசிகர்களும் அவ்வாறே செய்தார்கள். மருத்துவ முகாம்களையும், ரத்த தான முகாம்களையும் நடத்தினர். அது அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா என்று அப்போது பலர் விமர்சித்தனர்.

பிறகு நம்மைப் பார்துத்தான் பல ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றங்களாக மாறின. நம்மைப்பார்த்துதான் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களின் போது மருத்துவ மற்றும் ரத்த தான முகாம்களை அரசியல்வாதிகள் நடத்தத் தொடங்கினர்.

இப்போது எனது ரசிகர்கள், என்னைப் பார்த்து ‘தயவு செய்து அரசியலுக்கு வந்து விடாதீர்கள்’ என்று அறிவுரை கூறும் அளவுக்கு தெளிவு பெற்றுவிட்டார்கள். நாம் நடத்தி வரும் இந்த இயக்கம் நற்பணி இயக்கம் மட்டுமே. நமக்கு பிறகும் நற்பணி இயக்கமாகவே இயங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்ட நலத்திட்டங்களில் எனது தொகை மிகக் குறைந்த அளவுதான். பெரும்பான்மையான தொகை ரசிகர்களின் வியர்வையால் கிடைத்த பணம்.

நற்பணிதான் காரணம்

இந்த பயனாளிகள் யாரும் அவசரத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல. எனது ரசிகர்கள் ஆண்டு முழுவதும் ஆய்வு செய்து தேர்வு செய்தவர்கள். இப்பணிக்கு எனது கலையும் பயன்பட்டுள்ளது என்பது எனக்கு பெருமை. ஜெயகாந்தன் சினிமாக்காரர்களை கடுமையாக விமர்சிப்பவர். அவர்கூட இவ்விழாவில் பங்கேற்று நம்மை வாழ்த்தியுள்ளார். இதற்கு நாம் செய்த நற்பணிதான் காரணம். இதற்கான அங்கீகாரமாகத் தான் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தூய்மை இந்தியா முயற்சியின் தென்னக தூதுவராக என்னை அறிவித்துள்ளார். இது நமது 36 ஆண்டு தூய்மை பணிக்கு கிடைத்த பரிசு.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் தேசிய பொறுப்பாளர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூய்மை இந்தியா திட்டம்

முன்னதாக தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையோடு இணைந்து தென் சென்னையில் உள்ள மாடம்பாக்கம் ஏரியை தூய்மைப்படுத்தினர். இதில் கமல்ஹாசன் பங்கேற்றார். அவருடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x