Last Updated : 21 Feb, 2014 12:00 AM

 

Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

எய்ட்ஸ் நோயாளியின் உயிர்ப் போராட்டம்

1980களில் எய்ட்ஸ் என்ற உயிர் க்கொல்லி நோய் கண்டறியப் பட்டபோது உலகம் அரண்டு போனது. இதற்கு முன்னர் அறிந்திராத நோய் என்பதாலும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பாதிப்புகள் இருந்ததாலும் அதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல்கள் இருந்தன. இன்றுவரை எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து கண்டறியப்படவில்லை.

இன்று எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்களுக்கு ஆதரவான குரல்கள் எழுந்துள்ள சூழ்நிலையிலும் அந்த நோய் குறித்த தவறான புரிதல்களால் எய்ட்ஸ் நோயாளிகள் சிரமங்களை அனுபவிக்க நேர்கிறது. 1980களில் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ரோன் வுட்ரூஃப் என்ற எலெக்ட்ரீஷியனுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இன்னும் சில நாட்களில் அவர் இறந்துவிடுவார் என்று டாக்டர்கள் கூறினார்கள். அமெரிக்காவின் உணவு மருந்து நிர்வாகம் பரிந்துரைத்த AZT என்ற மருந்து எய்ட்ஸ் நோயாளிகளில் ஒரு சிலருக்கு அளிக்கப்பட்டு அதன் குணமாக்கும் திறன் ஆய்வுசெய்யப்பட்டது. எனினும் அந்த மருந்தால் தனது உடல்நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்று நினைத்த ரோன், தனக்கான மருந்தைத் தானே கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதன்படி முறையான அங்கீகாரம் பெறாத மருந்துகளை வெளிநாடுகளுக்குச் சென்று கடத்தி வந்து உட்கொண்டார். தன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதை உணர்ந்த பின்னர், அந்த மருந்துகளை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் பரிந்துரைத்தார். அவற்றைத் தானே கடத்திவந்து அவர்களுக்கு விற்றார். சட்டத்துக்குப் புறம்பான தனது நிறுவனத்துக்கு அவர் வைத்த பெயர் ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ (Dallas buyer's club). தொடக்கத்தில்

பணத்துக்காக இதைச் செய்யும் ரோன், பின்னர் அதைத் தொண்டு மனப்பான்மையுடன் செய்யத் தொடங்குகிறார். அவருடன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட திருநங்கையும் சேர்ந்துகொள்கிறார். தன் பாலினச் சேர்க்கையாளர்கள் மீது வெறுப்பு கொண்ட ரோன், பின்னர் அவர்களின் வலியை உணர்ந்துகொள்கிறார். இவர்களுக்கு ஒரு டாக்டரும் துணை நிற்கிறார். எனினும் சட்டத்தின் பார்வை இவர் மீது விழுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போராட்டத்தின் முடிவில் 1990இல் ரோன் மரணமடைந்தார். டாக்டர்கள் வைத்த கெடுவையும் தாண்டி 5 வருடங்கள் உயிர்வாழ்ந்தார் ரோன்.

நம்பிக்கை மிக்க அந்த மனிதனின் போராட்டம்தான் வரும் 28ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ள ‘டல்லாஸ் பையர்ஸ் கிளப்’ படத்தின் கதை. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ழான் மார்க் வால் (Jean Marc Valle), மார்ட்டின் ஸ்கார்சஸி தயாரித்த தி யங் விக்டோரியா (The Young Victoria) என்ற படத்தை இயக்கியவர். படத்தில் ரோனாக நடித்துள்ள மேத்யூ மெக்கானகி இதற்காக 13 கிலோ எடையைக் குறைத்துள்ளார். மெக்கானகியின் புகைப்படங்களைப் பார்த்த ரோனின் சகோதரி ஷரோன் (70), தன் சகோதரனை மீண்டும் கண் முன்னால் கொண்டுவந்துவிட்டார் என்று பாராட்டியுள்ளார். இத்தனை உழைப்புக்குப் பலன் இல்லாமல் இல்லை. இந்த வருடத்துக்கான ஆஸ்கார் அவருக்குத்தான் என்று விமர்சகர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.​​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x