Published : 16 Mar 2014 10:41 AM
Last Updated : 16 Mar 2014 10:41 AM

தோ.. தோ.. தோ.. கூச்சு.. கூச்சு.. கூச்சு..: ஃப்ளாஷ்பேக் - இயக்குநர் பாண்டிராஜ்

ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டிகள், நாக்கால் நக்கி எச்சில் படுத்திய தன் ஈர நினைவுகள் இன்னும் பலர் மனங்களில் காயாமல் இருக்கும்.

நமக்கு வரும் ஆபத்துக்களை தனக் காக்கி, நம்மைக் காப்பவை செல்லப் பிராணிகள். என்னுடைய அம்மா, கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு விழித்தபோது, கிடாப்பு உள்ளே சேவல் இறந்து கிடந்தது. அம்மா சொன்னாங்க, “இதுகவெல்லாம் நம்ம குலதெய்வந்தேன்... கூடவே இருந்து காக்க பொறந்ததுங்க.. நமக்கு வரவேண்டிய துன்பத்த இது ஏந்திகிச்சு பாருங்க.”

எங்கள் வீட்டிலிருந்த செவலைப் பசுவான ‘லெட்சுமி’, வெள்ளையும் செவலையுமாக புதுநிறத்தில் கிடேரி கன்று போட்டிருந்தது. அதற்கு அக்கா வைத்த பெயர், ‘குஷ்பு’. அதேபோல எங்களின் ஆட்டுக்குட்டி ஒன்று, பார்ப்பதற்கு மான் குட்டி போலவே இருக்கும். எல்லோருமே அதன் அழகை கண்ணு வைத்தார்கள். எப்போதும், இவையோடுதான் விளையாடிக்கொண்டிருப்பேன். ஆனால் இது அனைத்தையும் மீறி, வீட்டில் ஒரு நாய் இல்லையென்ற ஏக்கம் எனக்குள் இருந்தது.

எங்கள் ஊரில் ‘பக்கடா’ அடைக்கலங்காத்தான் வீட்டிலி ருந்து நாய்க்குட்டி எடுத்தால், சூரமாக இருக்குமென நம்பிக்கை. ஒருமுறை, தெரி யாமல் அந்த பக்கம் போன என்னை எங்கிருந்தோ பாய்ந்த நாய், பின்பக்கம் கவ்வி விட்டது. இப்படி நாய் கடித்துவிட்டால், அவர்கள் வீட்டிலிருந்து தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு, கடித்த இடத்தில் அவர்கள் வீட்டு விளக்குமாத்தாலோ, செருப்பாலோ தேய்த்து தண்ணீரில் அலசி சுண்ணாம்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த சாங்கியம் செய்யா விட்டால், தொப்புளை சுத்தி ஊசி போடு வார்கள். அதற்கு பயந்தே, இத்தோடு முடித்துக்கொள்வோம்.

‘பக்கடா’ வீட்டு நாய்க்குட்டிகளுக்கு, பயங்கர டிமாண்ட் இருந்ததால் அட்வான்ஸ் புக்கிங் நடக்கும். எனக்கு உனக்கென, எல்லோரும் கடுவன் (ஆண்) குட்டிகளுக்கு அடித்துக்கொள்வர். அந்த முறை, ஐந்து பேர் புக்கிங் செய்திருந்தோம். ஆனால், நாயோ நான்கு குட்டிகள் மட்டும் போட, கடைசியாக புக் செய்த நாங்கள் வெயிட்டிங் லிஸ்டில் போடப்பட்டு, மறுபடியும் நாய் சினையாகி குட்டி போடும்வரை காத்திருந்தோம். நாய்க்குட்டிக்காக போகும்போதெல்லாம், இன்னும் கண்ணு திறக்கலை, தாய்ப்பால் குடிக்கணும், தள்ளாடாம நடக்கணும்னு ரூல்சாக போட்டு, கடைசியில் மூன்று வார குட்டியை கையில் கொடுத்தார்கள். அதற்கு, ‘வெள்ளையன்’ என, அப்பா பெயரிட, கழுத்தில் ஒரு சலங்கைமணியை கட்டிவிட்டது அம்மா.

என்னை கடிச்ச நாயோட குட்டி என்பதால் வெள்ளையன் மேல் ஆரம்பத் தில் பயமிருந்தது. ஆனால், வீட்டுக்கு வந்த நாளிலிருந்தே அவன் எங்கள் குடும்பத்தில் ஒருத்தன் ஆகிட்டான். எப்போ பள்ளிக்கூடம் விட்டு வந்தாலும், கால்களை சுற்றிக்கொண்டு, நாக்கால் நக்கி வாலாட்டி ஆட்டம் போட்டால்தான் அவனுக்கு சந்தோஷமே. மாட்டில் பால் பீய்ச்சும் போதே வெள்ளையனுக்கு ஒரு காம்பு பாலை ஒதுக்கிடுவார் அப்பா. அவனுக்கு சாப்பாடு வைக்கும் தட்டில், நாம் சாப்பிட்ட மீதியை அள்ளி வைத் தாலோ, தட்டை கழுவாமல் வைத்தாலோ, சீண்டக்கூட மாட்டான். அம்மா, ‘தோ...தோ...தோ...கூச்சு...கூச்சு...கூச்சு’ என்றால் போதும், எங்கிருந்தாலும் சிட்டாய் பறந்து வந்து நிற்பான்.

மத்தவங்க வீட்டு ஆடு, மாடு, கோழி எதுவும் வெள்ளையனை மீறி எங்கள் வீட்டுக்குள் நுழைய முடியாது. எதிர் வீடான, தொப்புளாத் தேவர் வீட்டிலிருந்து கன்னுக்குட்டி ஒன்று எப்பவும் கயிற்றை இழுத்துக்கொண்டு வந்து எங்கள் வைக்கோல் போரில் மேயும். இதை வெள்ளையன் பார்த்துவிட்டால், அழகாக அந்த கன்னுக்குட்டியின் கயிறை கடித்து அழைத்துக்கொண்டு போய், அவர்கள் வீட்டில் விட்டுவிடுவான். அறிவென்றால், அப்படி ஒரு அறிவு.

எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், குரைப்பான். நாங்க உடனே, ‘டேய் வெள் ளையா, அவங்க நம்மாளுங்கதான்.. அங்கிட்டு போ’, என சொன்னால்போதும் உடனே நட்பாகி, அவனும் வாலாட்ட ஆரம்பித்துவிடுவான். கட்டிலில் படுத்து தூங்க வெள்ளையனுக்கு அவ்வளவு ஆசை. அம்மா எவ்வளவு விரட்டினாலும், குறைந்த பட்சம் திண்ணையிலோ, வைக் கோல் போரை மெத்தையாக்கியோ சொகுசாக தூங்குவான்.

ஒருமுறை வெள்ளையனுக்கு காலில் முள்ளடித்துவிட்டது. வலி தாங்காமல் வீட்டுக்குள் நுழைந்து, அம்மாவை காலால் சீண்டி சீண்டி முனகவே, ‘என்னடா வெள்ளையா... என்னாச்சு?’னு அம்மா பார்த்தால், காலில் ரத்தம். பதறிப்போய், மஞ்சள் அரைத்து கொதிக்க வைத்து கட்டுப்போட்டது. இப்படி, வெள்ளையன் எங்கள் வீட்டில் இன்னொரு குழந்தை மாதிரி. வயக்காட்டுக்கு போகும்போது, வெள்ளையன் முதலில் போவான், அடுத்து மான்குட்டி போகும், அதன்பின் லெட்சுமியும், குஷ்புவும், நானும் போவோம். இந்த காட்சியே ஒரு ரசனை யாக இருக்கும்.

திடீரென ஒருநாள், என்னுடைய மான் குட்டி காணாமல் போய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவேயில்லை. கடைசியில் வெள்ளையன் ஒரு புதரைப் பார்த்து வெறித்தபடி குரைக்க, என்னவென்று பார்த்தால் மலைப்பாம்பு. ஊர் ஆட்கள் திரண்டு வந்து, குச்சியால் மலைப்பாம்பின் வயிற்றில் குத்தினால், எனது மான்குட்டி வெளியில் வந்து விழுந்தது, பிணமாக. அம்மா, அக்கா எல்லோரும் அழுது நிற்க, நானும் அப்பாவும்தான் அதை தூக்கிக் கொண்டு போய் புதைத்தோம்.

அடுத்த சில மாதத்தில், ஏதோ ஒரு பண முடைக்காக பசுவையும் விற்றுவிட்டோம். அப்படி விற்கும்போது, அதன் கழுத்தில் இருக்கும் கம்பளி கயிறை கொடுக்காமல், தனது ரத்தத்தை பாலாக்கி குழந்தைகளையும் குடும்பத்தையும் காப்பாற்றிய மாட்டின் நினைவாக அதை அவிழ்த்து பத்திரமாக, வீட்டின் முகப்பில் கட்டி வைத்தோம். லெட்சுமிக்கு வீட்டை விட்டு போக மனசே இல்லை. ஈனமாக கத்திக்கொண்டே எங்கள் வீட்டிலிருந்து சென்று சேரும் வரை சாணம் போட்டபடி போக, பதிலுக்கு வெள்ளையனும் கத்திக் கொண்டேயிருந்த போது, ஒரு பெண்ணை வேறொரு வீட்டுக்கு அனுப்பும் வலியை உணர்ந்தோம்.

சில வருடங்களில் வெள்ளையனும் வயசானதால் சுணங்கிப் போய்விட்டது. சுகவாசியாய் மெத்தை தேடி படுத்துறங் கும் வெள்ளையன், நெல் அவிச்ச அடுப்பு சாம்பலில் சென்று படுக்க ஆரம்பித்தான். ‘என்னாச்சு வெள்ளையா உனக்கு? இங்கிட்டு வா’, என்றாலும் வராது. திடீரென, ஒரு காலையில் வெள்ளையனை காணவில்லை. நானும் அக்காவும் எல்லா இடங்களிலும் தேடுகி றோம். அப்போதுதான் அக்கம்பக்கத்தில் சொன்னார்கள், ‘நல்ல வளர்ப்பு நாய்ங்க எப்போதும் நம்ம கண்ணுல படுற மாதிரி சாகாது... அதுங்களுக்கு ஒண்ணுன்னா கண்காணாம எங்கயோ போயிதான் உசுரவிடும்” என்று. ஆனாலும், வெள்ளை யன் என்னைக்காவது ஒருநாள் வாசலில் வந்து நிற்பான் என்று காத்திருந்தோம். ஆனால், அவன் வரவேயில்லை. அதற்கு பிறகு, நாய் வளர்க்க வேண்டுமென்று தோன்றவேயில்லை.

ஒருநாள் அப்பாவோடு, ஆத்து மேட்டு பக்கம் நடந்து போய் கொண்டி ருக்கும்போது, தூரத்தில் நாய் செத்துக் கிடக்கும் வீச்சம் அடித்தது. அப்பா சொன்னார், “எங்கயோ நம்ம வெள்ளை யன் போல நல்லா வாழ்ந்த நாய் போல, அவங்க கண்ணுல பட கூடாதுன்னு இங்க வந்து செத்திருக்கு.”

யாருக்குத் தெரியும், அது வெள்ளை யனாகக் கூட இருந்திருக்க லாம். ஆனால் அவனாக இருந்துவிடக்கூடா தென மனசு விசுக்... விசுக்... என அடித்துக்கொள்ள, உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட் டேன். இன்றும் என்னிடம் சினேகமாய் வாலாட்டும் எல்லா நாய்களின் முகத்தி லும், வெள்ளையனின் சாயல் இருக்கத்தான், செய்கிறது.

தொடர்புக்கு : pandirajfb@gmail. com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x