Published : 14 Nov 2014 03:48 PM
Last Updated : 14 Nov 2014 03:48 PM
பெரிய நடிகர்கள், இயக்குநர், டெக்னீஷியன்கள் உள்ளடங்கிய புராஜெக்டா என்று பார்த்துத்தான் ஒரு படத்துக்கு ஃபைனான்சியர் பணம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு அந்த புராஜெக்டை ஆரம்பித்திருக்கும் தயாரிப்பாளரின் சொத்து, அவர் தயாரித்த முந்தைய படங்களின் ட்ராக் ரெக்கார்ட் ஆகியவற்றையும் பார்க்கிறார்கள். கொடுத்த காசைத் திரும்ப வாங்க முடியவில்லையென்றால் படத்தின் விநியோக ஏரியாவையோ, அல்லது சாட்டிலைட் ரைட்ஸையோ ஹோல்டிங் வைத்திருப்பார்கள். இவர்களது நோக்கமே வட்டியும், முதலும்தான்.
படத்தின் தரமோ, அல்லது அதன் கதையோ எதுவும் பிரச்சினையில்லை. இந்த இரண்டு வகையில் ஏதாவது ஒரு பிடிமானம் இல்லையென்றால் படம் வெளியாகும் முன்பு, என்னிடம் இந்தத் தயாரிப்பாளர் கடன் வாங்கியிருக்கிறார். என்னைக் கேட்காமல் நீங்கள் படத்தின் பிரதியை வெளியே விடக்கூடாது என்று லேப் லெட்டர் கொடுத்துவிட்டால் படத்தை ரிலீஸே செய்ய முடியாது.
இப்படிப்பட்ட ஃபைனான்சியர்கள் தயாரிப்பாளர்களாய் உருவாகும்போது அவர்களது கண்களுக்குத் தெரிவதே படத்தின் டெக்னீஷியன், நடிகர், நடிகை, இயக்குநர் ஆகியோரால் ஆகும் வியாபாரம் மட்டுமே. கதை தெரிவதில்லை. அதனால்தான் பெரிய ஃபைனான்சியர்கள் எல்லோரும் படமெடுக்க வரும்போது தோல்வியடைகிறார்கள். ஆனால் இதே ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்கிப் படமெடுக்கும் தயாரிப்பாளர்களும் இதே போல் சிறப்பு அம்சங்களை நம்பித்தான் கடன் வாங்குகிறார்கள் என்றாலும், உடன் அப்படத்தை எப்படி பிரபலப்படுத்துவது என்பதில் ஆரம்பித்து அதை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுவரை படத்தின் இயக்குநர் உடனிருந்து வெற்றிப் படமாக்க உழைக்கிறார்.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு வியாபார நிச்சயத்தன்மையிருக்கிறது. ஆனால் சின்ன பட்ஜெட் படத்தில் வியாபாரம் என்பது ஊசலாட்டம் கொண்டதாக இருப்பதால், ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட மிகப் பெரிய தைரியம் தேவை. இங்கேதான் ஃபைனான்சியர், தயாரிப்பாளர் இருவருக்குமான வித்தியாசம் ஆரம்பிக்கிறது.
சமீபத்தில் வெற்றி கொடுத்த தயாரிப்பாளர், அவரின் முதல் படத்திலிருந்தே எனக்கு நண்பர். ஒரு கதையை அவர் தயாரிக்கிறார் என்றால் இன்றைய மார்க்கெட்டில் ஓர் எதிர்பார்ப்பு உருவாகிறது. அதற்குக் காரணம் பேக்கேஜிங். ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் அடங்கிய மொத்த ஸ்கிரிப்ட்டையும் முதலிலேயே படித்துவிடுவார். பின்பு அதில் இருக்கும் நிறை குறைகளை உடன் உட்கார்ந்து அலசிய பின், இதுதான் கதை, இவர்தான் இயக்குநர் என்று முடிவெடுப்பார்.
அடுத்த கட்டமாய் அக்கதைக்குத் தோதான ஒளிப்பதிவாளர், எடிட்டர் என எல்லா டெக்னீஷியன்களையும் இயக்குநரோடு விவாதித்து, இல்லை சமயங்களில் இது சரியா வரும் என் அனுபவத்தில் சொல்கிறேன் என்று இயக்குநரை கன்வின்ஸ் செய்து, நல்ல டெக்னிக்கல் டீமை அமைத்துக் கொடுப்பார்.
பின்பு கதையின், பட்ஜெட்டுக்கு ஏற்ற நாயகர்கள், நாயகிகளைத் தெரிவு செய்து, அப்படத்தின் பூஜையில் ஆரம்பித்தால் தொடர்ந்து நாற்பது நாட்களோ, ஐம்பது நாட்களோ தொடர் படப்பிடிப்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய புரொடக்ஷன் டீமை, அமைத்துக் கொடுத்துவிடுவார். லாடம் கட்டிய குதிரை போவது போல ஷூட்டிங் போய்க் கொண்டேயிருக்கும். படப்பிடிப்பு நடக்கும் அதேநேரம், எடுத்து முடிக்கப்பட்ட பகுதிகளுக்கான எடிட்டிங், சிஜி, பின்னணி இசை என போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் இன்னொரு பக்கம் முடுக்கிவிட்டு மேற்பார்வையிடுவார்.
படம் தயாராகிக்கொண்டிருக்கும்போதே அதற்கான புரோமோஷன் விஷயங்கள், வியாபார விஷயங்களையும் பார்த்துக்கொண்டிருப்பார். படம் தயாரான ஒரு மாதத்தில் படத்தை வெளியிட என்ன வேலைகள் செய்ய வேண்டுமோ, அத்தனை வேலைகளையும் செய்து வைத்திருப்பார். இப்படி ஓர் இயக்குநரோடு பயணித்து மொத்த புராஜெக்ட்டையும் மேற்பார்வையிட்டு, அதைச் சரியாய்க் கொண்டுவர வேண்டிய உழைப்பையும் போட்டுத்தான் இந்த வெற்றியைப் புதுமுக இயக்குநர்களை வைத்துப் பெற்றிருக்கிறார். வெற்றி சும்மா வராது.
ஒரு ஃபைனான்சியர் தயாரித்து நடித்து இயக்கிய (?) படத்தில் நான் இணை இயக்குநராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவசர அவசரமாய் நாலு வரிக் கதையொன்றைச் சொன்னவர் “முழு ஸ்கிரிப்ட்டை முடிச்சதுக்கு அப்புறம் ஷூட் போவோம் சார்” என்றார். சந்தோஷமாய் இருந்தது. அந்த சந்தோஷம் ஆபீஸ் போய் ஒரு வாரத்தில் புஸ்வாணமாகியது.
கதை விவாதம் நடந்துகொண்டிருக்க, தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான அந்த ஃபைனான்சியர். “இன்னும் எத்தனை நாள்தான் சார் ஸ்கிரிப்ட்டுக்குப் பேசுவீங்க?” என்று கடித்துகொண்டேயிருக்க, ஒரு நாள் பொறுக்காமல் “சார்... கதை என்ன ரஜினிக்கா பண்றோம்... உங்களுக்கு ஏற்ற மாதிரி பொறுமையா யோசிச்சுத்தான் பண்ணணும்” என்றேன். நான் சொன்ன பதிலில் உள்ள கிண்டலைக்கூடக் கண்டுகொள்ளாத அவர், அடுத்த ஒருவாரத்தில் கதை, திரைக்கதை என்ற வஸ்தே தயாராகாமல் படப்பிடிப்புக்குக் கிளம்புங்கள் என்று வலுக்கட்டாயமாக அழைத்துப் போனார்.
எதுக்கு சார் இவ்வளவு அவசரம் என்றதற்கு “சார்.. ஒரு எழுபது ஏக்கர் நம்ம மூலமா விக்க வந்திருக்கு, மூணு மாசம் டைம். அதுக்குள்ள ஒரு ரொட்டேஷன் விட்டுப் படத்த எடுத்துட்டா. படம் பண்ணுற பிஸ்னெஸ்ல அசலைச் செட்டில் பண்ணிரலாம்” என்றார். எனக்கு மூச்சு முட்டியது. நான் தலைதெறிக்க ஓடிவந்தேன். சில வருடங்களுக்கு பிறகு ஏகப்பட்ட குழப்படிகளுடன் படம் முடிந்தது.
ஒரு தீபாவளி நன்னாளில் வெளியாகி யாருக்கும் தெரியாமல் போனது. சுமார் ஒன்றரைக் கோடியில் முடிக்கத் திட்டமிட்டுத் தொடங்கிய படம் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் செலவாகி, அவருடைய வீடு, நிலம், கார் எல்லாம் போனதுதான் மிச்சம். துல்லியமாகத் திட்டமிடாத படம், குசேலன் யானையைக் கட்டி வைத்துத் தீனி போடுவதுபோலத்தான்.
சமீபத்தில் வடபழனியில் அவரைச் சந்தித்தேன். பொலிவிழந்து காணப்பட்டார். “எப்படி இருக்கீங்க சார்?” என்றேன்.
“ஒரு லோக்கல் சப்ஜெக்ட் விஜய் சேதுபதிகிட்டே பேசிட்டிருக்கேன். புரோடியூசர் ரியல் எஸ்டேட் பார்ட்டி. பிக்ஸ் ஆனதும் சொல்றேன், மீட் பண்ணுவோம்” என்றார். விடாது கருப்பு.
மினி ரிவ்யூ- அயோபிண்டே புஸ்தகம்
பகத் பாசிலின் தயாரிப்பில் அமல் நீரட்டின் ஒளிப்பதிவு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். 1900களில் பயணிக்கும் பீரியட் பிலிம். மூணாறு என்ற பகுதியை உருவாக்கிய வெள்ளைக்காரன், அவனது அல்லக்கை அடிமையான லால், அவனின் மூன்று பிள்ளைகள், அவன் செய்யும் துரோகம். வெள்ளைக்காரனின் மகள் மார்த்தா, லாலின் மூன்றாவது பிள்ளை பகத், இவர்களது வில்லனான தமிழ் பேசும் ராவுத்தர், பேசவே பேசாமல் கண்களாலும், நடிப்பாலும் செடியூஸ் செய்யும் பத்மபிரியா, என கேரக்டர்களும், அதற்கான பின் கதைகளும் வழிந்தோடும் திரைக்கதை.
ஒரு ஐரோப்பிய படத்தைப் பார்த்த உணர்வு. கொஞ்சம் கேங்ஸ்டர் டைப் கதைதான், அதிகாரம், துரோகம், வன்மம், காதல், காமம், பாசம் எனப்போகிறது. இடைவேளை வரை படம் அட்டகாசம். அதன் பிறகு பகத்தை ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்துவிடக்கூடிய அத்தனை காரணங்களையும் முன்னமே யோசிக்க கூடிய ரேஞ்சில் காட்சிகள் இருப்பதால் டெம்போ மிஸ்ஸிங். ஆனால் பின்னணி இசைக்காகவும், மிக அற்புதமான ஒளிப்பதிவுக்காவும் டோண்ட் மிஸ். தூக்கத்தில் கூட விஷுவல்கள் துரத்தும்.
தொடர்புக்கு sankara4@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT