Published : 12 Nov 2015 09:03 AM
Last Updated : 12 Nov 2015 09:03 AM

திரை விமர்சனம்: தூங்காவனம்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் காவல் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் கமல். அதிரடி நடவடிக்கையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் கொண்ட பை ஒன்றைக் கைப்பற்று கிறார். போதைப் பொருளுக்கு உரியவரான பிரகாஷ்ராஜ் கமலின் மகனைக் கடத்திவிடுகிறார். போதைப் பொருள் பையைக் கொடுத்துவிட்டு மகனை அழைத் துச் செல்லும்படி கூறுகிறார். இதற்கிடையில் கமலின் துறையைச் சேர்ந்த கிஷோரும் த்ரிஷாவும் கமலைப் பின்தொடர்கிறார்கள். மகனை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கமல் என்ன செய்தார்? கமலைப் பின்தொடர்ந்த அணியின் நோக்கம் என்ன என்பதே மீதிக் கதை.

கமல் தனது சக ஊழியரான யூகிசேதுவுடன் இணைந்து போதைப் பொருளைக் கைப்பற்றும் அதிகாலை அதிரடி ஆபரேஷனில் ஆரம்பிக்கும் கதை இடையில் எங்கேயும் நிற்காமல் பயணிக்க வைக்கிறது. படத்துக்கு ஆதாரமான ‘Sleepless Night’-ன் திரைக் கதையுடன் அப்படியே அடியொற்றி இருப்பதால் தொய்வு எங்கும் இல்லை.

இரவு விடுதி ஒன்றில் அந்த இரவில் வெவ்வேறு தரப்பினர் வெவ்வேறு நோக்கங்களுடன் நடமாடும் காட்சிகளைக் கச்சித மாகக் கட்டமைத்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது திரைக்கதை.

பிரகாஷ்ராஜ், கிஷோர், த்ரிஷா, சம்பத் ராஜ், யூகி சேது ஆகியோருக்கும் வலுவான பாத்திரங்களும் திறமையை வெளிப் படுத்துவதற்கான வாய்ப்பும் தரப் பட்டுள்ளன. கிஷோர், த்ரிஷாவுடன் தனித்தனியே கமல் போடும் சண்டைகளில் திரையை தாண்டி அடி விழுகிறது. யூகி சேது, கிஷோர் முதலான பாத்திரங்களின் முகம் மாறுவது வெளிப்படும் விதம் படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கிறது.

கமலுக்கு நடிப்பைக் கொட்டும் கதாபாத்திரம் அல்ல. என்ன தேவையோ அதை அனாயாசமாகச் செய்திருக்கிறார். முதல் காட்சியில் வாங்கிய கத்திக் குத்தின் வலி யுடன் முனகலான தொனியில் அவர் பேசுவதும் அந்த வலியை ஒவ்வொரு நடமாட்டத்தின்போதும் உணர்த்துவதும் ஹாலிவுட் ஸ்டைல்.

சீருடை அணிய அவசியமில்லாத போலீஸாக வரும் த்ரிஷாவுக்கு கமலோடு டூயட் பாடுவதற்குப் பதிலாகச் சண்டை போடும் வாய்ப்பு. சீரியஸான பாத்திரத்தில் த்ரிஷா அழகாகத் தன்னைப் பொருத்திக்கொள்கிறார். சண்டைக் காட்சியில் சோபிக்கிறார்.

தாதா நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டு போய்விடுகிறார் பிரகாஷ் ராஜ். கிஷோரின் பார்வையே அவர் பாத்திரத்துக்கு வலிமை சேர்த்து விடுகிறது. கமலின் மகனாக நடித்திருக்கும் அமன் அப்துல்லா வின் நடிப்பும் கவர்கிறது. “எல்லாத் தையும் விட எனக்கு நீதாண்டா முக்கியம்” என்று கமல் சொல்ல, “ஏம்ப்பா இத்தனை நாள் இதைச் சொல்லல?” என்று மகன் கேட்க? இயல்பை மீறாத அந்த ஒரு காட்சியே தந்தைக்கும் மகனுக்கு மான பிணைப்பை உணர வைக்கிறது.

யூகிசேது, ஜெகன் ஆகியோர் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள். அபாரமான திறமைகள் கொண்ட ‘ஆரண்ய காண்டம்’ சோமசுந்தரம், ‘த்ரிஷ்யம்’ ஆஷா சரத் இருவரையும் ஊறு காய் அளவுக்கு மட்டுமே பயன் படுத்தியிருப்பது ஏமாற்றமளிக் கிறது.

இரவு விடுதியின் சூழலைச் சித்தரிக்க ஒளிப்பதிவாளர் சானு வர்க்கீஸ் அமைத்திருக்கும் ஒளியமைப்பு பார்வையாளர் களைக் கதைக் களத்துக்குள் இழுக்கும் மாயம் செய்து விடுகிறது. சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதமும், கழி வறைகளின் மேற்சுவரில் போதைப் பொருள் பையைத் தேடும் கேமரா வின் முனைப்பும் அபாரம். எந்தக் காட்சியிலும் உபரியாக ஒரு ஷாட்டைக்கூட விட்டுவைக்காத கூர்மையுடன் செதுக்கித் தள்ளி யிருக்கிறார் படத் தொகுப்பாளர் ஷான் முகமது. வாசித்துத்தள்ள நிறைய வாய்ப்பிருந்தும் அடக்கி வாசித்து காட்சிகளின் அழுத்தத் தைக் கூட்டியிருக்கிறார் இசை யமைப்பாளர் ஜிப்ரான்.

காட்சிகளைக் கையாண்டுள்ள விதம் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் ஆளுமையைப் பறைசாற்றுகிறது. தனியாகத் துருத்தாமல் சம்பவங்களினூடே இழையோடும் நகைச்சுவை படத்தின் தீவிரத்தைக் குறைக்காமல் ரசிக்கவைக்கிறது.

தன் மகன் கடத்தப்பட்டது தெரிந்ததும், மாற்றுத் திட்டம் எதையும் யோசிக்காமல் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளைக் கொடுத்துவிட கமல் முடிவுசெய்வது நம்பும்படி இல்லை. இரண்டாம் பாதியின் நடுவே ஏற்படும் தொய்வைக் களைந்திருக்கலாம். தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தேவைப்படும் சமயங்களில் மது ஷாலினியை கமல் முத்தமிடுவதும் ஒரு கட்டத்தில் மதுஷாலினி கமலை முத்தமிடுவதும் அசல் கமல் க்ளிஷே. விவாகரத்தான கமலின் மன நெருக்கடிகளைக் காட்டி அவர் மீது அனுதாபம் ஏற்படவைக்கும் திரைக்கதை, அவரை விட்டுப் பிரிந்த மனைவியின் தரப்பைப் பற்றியும் லேசாகச் சொல்லியிருக்கலாம்.

வலுவான கதையையும் விறு விறுப்பான திரைக்கதையையும் நம்பிப் பயணிக்கும் ‘தூங்காவனம்’ போன்ற பொழுதுபோக்குப் படங்கள், ரசிகர்களைத் திணற வைக்கும் மசாலா நெடியின் போக்கை சற்றேனும் மாற்ற உதவக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x