Published : 26 May 2017 09:53 AM
Last Updated : 26 May 2017 09:53 AM
கடந்த 40 ஆண்டுகளில் 45 சிறுகதைகள், இரண்டு நாவல்கள் எழுதியிருக்கும் வேல.ராமமூர்த்தி அசலான தமிழ் வாழ்க்கையை எழுதியதற்காகப் பாராட்டப்படுபவர். தற்போது தமிழ் சினிமாவில் மண் மணக்கும் கதாபாத்திரங்களில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். இலக்கியம், சினிமா இரண்டைக் குறித்தும் மனம்விட்டு அவர் பேசியதிலிருந்து…
திராவிட இயக்கம் பெரும் எழுச்சியோடு இருந்த 70-களில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். ஆனால் கொள்கை ரீதியாக அதிலிருந்து வேறுபட்ட இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்கள். இருந்தும் பிரச்சாரத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டு எப்படி உங்களால் எழுத முடிந்தது?
அதற்குக் காரணம் என்னைப் பெரிதும் பாதித்த ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள். ஆனால், என்னைப் போன்ற கிராமத்து இளைஞர்களைப் பொதுவெளிக்கு இழுத்துக்கொண்டு வந்தது பேரலையாக எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான். இந்தக் காலகட்டத்தில் கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் எழுதிக்கொண்டிருந்தார்கள். திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப்பேச்சும் எழுத்தும் கவனிக்க வைத்தன. இவற்றையெல்லாம் தாண்டி இடதுசாரிச் சிந்தனை எப்படி ஈர்த்தது என்றால், எனது கிராமத்துக்கு வந்து சேர்ந்த நூலகம்.
ஒரு தினசரிப் பத்திரிகைக்குக்கூட வழியில்லாத எங்கள் பெருநாழி கிராம நூலகத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், மலையாள மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வந்து குவிந்தன. அவை என் பார்வையில் பட்டன. அந்த நேரத்தில்தான் ஜெயகாந்தனும் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தார். 9-ம் வகுப்பு படிக்கிறபோது ஜார்ஜ் புலிட்சர் எழுதிய ‘மார்க்சிய மெய்ஞானம்’ என்ற நூலைப் படித்த பின்பு, அரசியல் பற்றிய என் பார்வையே அடியோடு மாறிப்போனது. யதார்த்தப் புனைவின் பெருவெளியாகத் தமிழில் வெளியான ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களும் ‘சோவியத் நாடு’ பத்திரிகையும் ஏற்படுத்திய தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இப்படித்தான் தன்னெழுச்சியாக வாசிப்பின்
வழியே இடதுசாரிக் கொள்கை மீது காதல்கொண்டேன். இடதுசாரி இயக்கம் தெளிவையும் துணிவையும் கொடுத்தது. இடதுசாரி இயக்கத்தால் இழந்தது அதிகமாக இருக்கலாம். ஆனால், நான் பெற்றதும் அதிகம். அதில் ஒன்றுதான் பிரச்சாரம் இல்லாத யதார்த்தப் புனைவெழுத்து. டால்ஸ்டாய், செகாவ், புஷ்கின் ஆகியோரின் எழுத்துகள் எனக்குக் காட்டிய வழி இது. எனது கதாபாத்திரங்கள் அறிவாளிகள் கிடையாது. எனது கதைமாந்தர்கள் உணர்வுபூர்மானவர்கள். அவர்கள் எப்படியிருந்தார்களோ எப்படி வாழ்ந்தார்களோ அப்படியே படைத்தேன்.
நிறை, குறை, விமர்சனம் என எதுவாக இருந்தாலும் சாதீயத்தின் முகங்களை இலக்கியத்தில் பதிவதையும் எழுத்தாளன் சுயசாதிப் பெருமிதம் கொள்வதையும் தனது புனைவுக்குள் கொண்டுவருவது இலக்கியத்துக்கு அவசியம்தானா என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறதே?
இன்று இந்தியாவையே ஒரு ஆக்டோபஸ்போல் வளைத்துக்கொண்டு நிற்கிறதே மதவாதம். அந்த மதவாதத்தின் அடிப்படையே சாதிதானே. மதத்தையும் சாதியையும் இலக்கியத்துக்குள் கொண்டுவராவிட்டால் அது எப்படி இலக்கியமாகும்? இன்று சமூகத்துக்குள் இருக்கும் எல்லாச் சிக்கல்களுக்கும் இந்தச் சாதியும் மதமும்தானே வேராக நிற்கின்றன.
இவற்றை எப்படி எழுதாமல் இருக்க முடியும்? இந்தச் சாதி அடுக்கையும் மத பயங்கரவாதத்தையும் எழுதாவிட்டால், அது எப்படி நவீன இலக்கியமாக இருக்கும். இன்று எந்த எழுத்தாளன் மனதில் சாதி இல்லை? சாதியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதைப்போல எழுத்தாளர்கள் ஏமாற்றுகிறார்கள். என் எழுத்தைப் பற்றி நானே சொல்லக்கூடாது, எனது எழுத்துகளில் என்னைப்போல் சுயசாதி விமர்சனம் செய்தவன் யாருமே இருக்க முடியாது. சுயசாதிப் பெருமிதம் பேசுகிறவன் எழுத்தாளனாகவே இருக்க முடியாது. அவரவர் சாதியில் மதத்தில் உள்ள நல்லது, கெட்டதுகளை எழுதினால்தான் அது எழுத்து. பிழைப்புவாதம் எழுத்தாகாது.
ஒரு எழுத்தாளராக உங்களுக்குக் கிடைத்த புகழ், அங்கீகாரம், ஒரு திரை நடிகராக உங்களுக்குக் கிடைத்த புகழ், அங்கீகாரம் இரண்டில் எதை அதிகம் நேசிக்கிறீர்கள்?
ஒரு எழுத்தாளனாக என்னை அடையாளம் காண்பதைத்தான் நான் நேசிக்கிறேன். எழுத்தாளனாக இருந்தபோது எனது எழுத்துகளைப் படித்துவிட்டு என் முகம் எப்படியிருக்கும் என்று தெரியாமலேயே சில ஆயிரம் பேர் என்னைக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், சினிமா எனக்குப் பல லட்சக்கணக்கான ரசிகர்களை நண்பர்களாகக் கொடுத்திருக்கிறது. எங்கேயும் சுதந்திரமாக நடந்து செல்லமுடியவில்லை. தெருமுனையில் ஒரு டீ குடிக்கப் போக முடியவில்லை. ஓடிவந்து கை குலுக்கிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இலங்கையின் நுவரேலியா தேயிலைத் தோட்டங்களில் காலாற நடந்துகொண்டிருந்தேன். கூட்டமாக வந்து இஸ்லாமியத் தமிழ்ச் சொந்தங்கள் சூழ்ந்துகொண்டார்கள்.
படப்பிடிப்புக்காகக் கோவா சென்றால் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் என்னுடன் உணவருந்த வாருங்கள் என்று அழைக்கிறார். “நீங்கள் ஏற்று நடிக்கும் எதிர்மறைக் கதாபாத்திரங்கள் பார்வையாளனுக்கு பாடம் கற்றுக் கொடுக்கக்கூடியவை. வீழ்ச்சியைச் சந்திக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பது கலை ரீதியான தியாகம்” என்று கதாபாத்திர உளவியல் குறித்துப் அவர் பேச ஆரம்பித்துவிட்டார். சினிமாவின் இந்த வீச்சை நான் பெருமையாக நினைக்கவில்லை. சாதியற்றும் மதமற்றும் ஒரு திரைக்கலைஞனாக என் மக்கள் என்னைப் பார்ப்பதை கொடுப்பினையாகவும் வரமாகவும் நினைக்கிறேன். இதை நான் காப்பாற்றியே ஆகவேண்டும்.
உங்களைத் திரைக்கு அழைத்துவந்தது உங்கள் எழுத்துதான். நடித்துக்கொண்டே எழுதவும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இல்லை எழுதியது போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா?
கடந்த மூன்று ஆண்டுகளாக முழுவீச்சில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று நினைக்கிறேன். எழுத்தும் திரை நடிப்பும் இணைந்து இருந்தால் கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வது போன்ற சந்தோஷத்தை தரும் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதவேண்டும். எழுதுவேன். என் எழுத்து மொழியில் காட்சிமொழி இயல்பாக வந்து பொருத்திக்கொண்டதால் திரைக்கதைகள் எழுதவேண்டும் என்பதிலும் தீவிரமாக இருக்கிறேன்.
கதாபாத்திரங்களை வெகு இயல்பாக திரையில் உங்களால் வெளிப்படுத்த முடிவதன் பின்னணி என்ன?
முதல் சிறுகதையை எழுதியபோது என் உயிரைக் கரைத்து என்னை எப்படி முழுமையாகவும் நேர்மையாவும் அதற்கு ஒப்புக்கொடுத்து எழுதினேனோ, அப்படித்தான் திரையில் என் கதாபாத்திரங்களுக்கும் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நான் எழுதிய கதைகள் என் சமகாலத்தைச் சேராதவை. அவை அனைத்தையுமே தோரணைகளோடு உடல்மொழியோடு என் முன்னோரும் என் தாயாரும் தகப்பனும் சொல்லக் கேட்டு, அவர்களின் வழி நிஜமான கதாபாத்திரங்களை உள்வாங்கிக்கொண்டவன்.
அந்த அனுபவம்தான் என்னை இயல்பாக வெளிப்படுத்தச் செய்கிறது. எத்தனைக் கொம்பையா பாண்டியன்களை எனது எழுத்தின் வழியே ஈன்றிருக்கிறேன். நடிப்பு என வரும்போது அவற்றுக்குள் புகுந்துகொள்வது எனக்கு எளிதாகவே இருக்கிறது. இந்தக் காரணங்களைத் தவிர இடதுசாரி வீதி நாடக இயக்கத்தில் எனக்குக் கிடைத்த நீண்ட அனுபவமும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் கூற விரும்புகிறேன்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் குற்றப் பரம்பரைச் சட்டத்தை தமிழ் சினிமா படமாக்கக் காலம் தாழ்த்துவது அதன் திராணியற்றத் தன்மையைத்தானே காட்டுகிறது?
பாலா, மணி ரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்கள் நம்மிடம் இருக்கும்போது அப்படிக் கூறத் தேவையில்லை. அந்த வரலாற்றின் காலகட்டத்தை திரையில் கொண்டுவருவதுதான் பெரிய சவால். இன்று எங்கு பார்த்தாலும் நவீனத்தின் அடையாளங்கள். லொகேஷன் பார்ப்பதும் தேர்வு செய்வதும் முக்கியமான வேலைகள். எனது ‘குற்றப் பரம்பரை’ நாவலை, பாலாவுக்காக திரைக்கதையாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.
முதல் பாதி முடிந்துவிட்டது. திரைக்கதைக்கு எவையெல்லாம் தேவை, எவை தேவையில்லை என்பதை பாலா வடிகட்டிய விதமே வியக்க வைக்கிறது. ஏற்கெனவே பாதி வேலைகளை பாலா முடித்து வைத்துவிட்டார். இரண்டாம் பாதித் திரைக்கதை முடிந்ததும் படத்தை தொடங்கிவிடுவார். இதில் ஆறு பெரிய கதாநாயகர்கள் நடிக்கிறார்கள்.
எழுத்தாளர், நடிகர் வேல.ராமமூர்த்தியை, இயக்குநர் வேல.ராமமூர்த்தியாக எதிர்பார்க்கலாமா?
நிச்சயமாக எதிர்பார்க்கலாம். ஆனால் இயக்குவதற்கு இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அசலான எனது தமிழ்க் கதையை நானே இயக்குவேன். அதற்கு இன்னும் அவகாசம் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT