Published : 19 Aug 2016 11:05 AM
Last Updated : 19 Aug 2016 11:05 AM
நாள்பட்டபல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முனைப்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இறங்கியிருக்கிறது. தொலைக்காட்சி உரிமை, நடிகர்களின் சம்பளம் எனத் தமிழ்த் திரையுலகை வாட்டிவரும் பல பிரச்சினைகள் குறித்து அவர்கள் திட்டவட்டமான சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் தொடர்ச்சியாகப் பல்வேறு முன்னணித் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தயாரிப்பை நிறுத்திவருகிறார்கள். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள உயர்வு, படப்பிடிப்பு செலவு உயர்வு, தொலைக்காட்சி உரிமையிலும், இசை உரிமை விற்பனையிலும் பெரும் சரிவு எனப் பல்வேறு பிரச்சினைகளைத் தற்போது தமிழ்த் திரையுலகம் சந்தித்துவருவதுதான் இதற்குக் காரணம்.
தற்போது பெரிய நாயகர்களின் படங்களைத் தயாரிக்கத் தயாரிப்பாளர்கள் இல்லை என்பதுதான் நிலவரம். மிகச் சிலர் மட்டுமே தயாரிக்கிறார்கள். அனைவருக்கும் சம்பளம் கொடுத்து, அதைத் தயாரித்து முடித்து வெளியிடுவதற்குள் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதவை. பெரிய நடிகர் ஒருவரின் படம் நஷ்டமடைந்தாலும் அதை வெளியே சொல்ல முடியாது. பிறகு அந்த நடிகரின் கால்ஷீட் கிடைக்காமல் போய்விடுமோ என்னும் அச்சம்தான் காரணம்.
தொலைக்காட்சி உரிமையும் இசை உரிமையும்
ஒரு படத்தின் முதல் வியாபாரமான இசை உரிமையைத் தற்போது யாரும் வாங்குவதே இல்லை. “பெரும் விலை கொடுத்து வாங்கினால், எங்களுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது” என்று இசை உரிமை நிறுவனத்தினர் கூறுகிறார்கள்.
தொலைக்காட்சி உரிமை என்பதைக் கணக்கில் கொள்ளாமலே தற்போது பல தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் தயாரிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று படத்தின் விலை என்ன என்பதைக் கேட்பதே இல்லை. படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றவுடன்தான் தொலைக்காட்சி உரிமை என்ன விலை என்று கேட்கிறார்கள். பெரிய நடிகர்களின் படங்களும் தற்போது இந்த நிலையில் சிக்கியிருக்கிறது. சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பெரிய நடிகரின் படம் இன்னும் விற்பனையாகவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானம்
இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் இதைக் கையில் எடுத்திருக்கிறது. முன்பு தொலைக்காட்சி உரிமை வாங்கும்போது 99 வருடத்துக்கு ஒப்பந்தம் போட்டு அளிப்பார்கள். தற்போது இதை மாற்றச் சங்கம் முன்வந்திருக்கிறது. தொலைக்காட்சி நிறுவனம் ஒரு முறை மட்டும் படத்தை ஒளிபரப்ப உரிமை வாங்கிக்கொள்ளலாம். எத்தனை முறை ஒளிபரப்புகிறார்களோ அதற்குப் பணம் என்ற புதிய முறையைக் கொண்டுவந்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
மேலும், 50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருமே அவர்களுடைய சம்பளத்தில் சுமார் 30% குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை அள்ளிக் கொடுத்து கால்ஷீட் தேதிகளைப் பெற்றுக்கொள்வதும் இதே தயாரிப்பாளர்கள்தான் என்பதால் இது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை.
இந்தத் தீர்மானங்களைப் பல்வேறு தயாரிப்பாளர்களும் வரவேற்றிருக்கிறார்கள். விரைவில் இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ் சினிமாவின் வியாபாரம் மற்றும் தொலைக்காட்சி உரிமை பிரச்சினை சீராக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT