Published : 17 Aug 2016 10:35 AM
Last Updated : 17 Aug 2016 10:35 AM
உப்புப் பெறாத காரணத்துக்காக எல்லைக் காவல் படையில் சேரும் வாசு (விக்ரம் பிரபு), எல்லைப் பகுதியான வாகா என்னும் இடத்தில் வேண்டா வெறுப்பாக வேலை செய்துகொண்டிருக்கும்போது ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறார். பெயரே தெரியாத அந்தப் பெண்ணுக்கு காஜல் (ரன்யா ராவ்) எனப் பெயரிட்டு மகிழ்கிறார். அந்தப் பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவள் என்பது தெரியும்போது அதிர்ச்சிக்கு ஆளாகும் விக்ரம் பிரபு, அவளைக் காப்பாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொள்கிறார். தன் உயிரையும் காதலையும் அவர் எப்படிக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.
தேசப் பற்றுடன் கலந்த காதல் கதை என்ற களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கும் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலன், அதைச் சொன்ன விதத்தில் நம்மைச் சோதித்திருக்கிறார். நாயகனின் காதலும் தேசப் பற்றும் அழுத்தமும் சுவாரசியமும் இன்றி அடுத்தடுத்த காட்சிகளாக மட்டும் வந்து போகின்றன. ‘ஹரிதாஸ்’ எடுத்த இயக்குநரின் படம்தானா இது என யோசிக்க வைக்கிறது படம் எடுக்கப்பட்டுள்ள விதம்.
நாயகன் ராணுவத்தில் சேருவதற்கான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. வாகாவில் நடக்கும் நிகழ்வுகள், காதல் அரும்புவது, எல்லைப் பகுதியின் நிலவரம் ஆகியவற்றைச் சித்தரித்திருக்கும் விதம் ஏமாற்றம் அளிக்கிறது. தேசப் பற்று வசனங்கள் மட்டும் போதும், மக்கள் புல்லரித்துப் போவார்கள் என இயக்குநர் நம்பியிருப்பார் போல.
கடுமையான துப்பாக்கிச் சண்டையில் நாயகன் தப்பு வதைப் பார்த்திருக்கும் நமக்கு, ராக்கெட் லாஞ்ச்சர் தாக்குதலில் இருந்து தப்புவது புதுமையாக இருக்கலாம்.
இந்திய ராணுவ வீரர்கள் காணாமல்போவது குறித்த தொலைக்காட்சி விவாதம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் பல பிரச்சினைகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இவற்றுக்கான பதில்களாகத் திரைக்கதை விரியும் என்னும் எதிர்பார்ப்பை அடுத் தடுத்த காட்சிகளில் குலைத்துவிடுகிறார் இயக்குநர். எல்லை விவகாரங்களில் பொதுப் புத்தியில் படிந்த வாதங்களே முன்வைக்கப் படுகின்றன. இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தினரின் போக்குகள் குறித்த சித்தரிப்பிலும் இதே தன்மைதான் தெரிகிறது.
விக்ரம் பிரபு நடனம், சண்டைக் காட்சிகளில் குறை வைக்காமல் பரிமளித்தாலும், அவர் உணர்ச்சிபூர்வமான காட்சிகளைச் சிறப்பாகக் கையாள்வதைப் பார்க்க இன்னும் சில படங்கள் நாம் காத்திருக்க வேண்டும். கதாநாயகி ரன்யா ராவுக்கு நடிக்கவெல்லாம் பெரிய வாய்ப்பு இல்லை. தன் கண்ணெதிரில் குடும்பமே சுட்டுக் கொல்லப்படும்போது அவர் வெடித்து அழும் காட்சி மட்டும் மனதில் நிற்கிறது. சத்யன், கருணாஸ் ‘நகைச்சுவை’ முயற்சிகள் புன்சிரிப்பை வரவழைக்கவும் கஷ்டப்படுகின்றன.
டி.இமான் இசையில், பாடல்கள் தனியாகக் கேட்டால் நன்றாக இருக்கலாம். பின்னணி இசை இரைச்சல். சதீஷ்குமார் ஒளிப்பதிவு, ராஜா முகமது படத் தொகுப்பு இரண்டும் தம்மால் முடிந்தவரை படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.
படம் ஆரம்பித்த 10 நிமிடங் களில், ‘ஆணியே புடுங்க வேணாம்’ என்ற பாடலைப் பாடிக்கொண்டு நாயகன் நடனமாடுகிறார். படம் முடிந்த பிறகு அந்த மூன்று வார்த்தைகளே நம்முள் தங்கி விடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT