Published : 17 Jan 2015 12:47 PM
Last Updated : 17 Jan 2015 12:47 PM
அரசியல் மற்றும் பிற கூட்டங்களுக்கு ஆள்சேர்க்கும் வேலையைச் செய்யும் விஷால் ஊட்டியில் வசிக்கிறார். அங்கே ஹன்சிகாவைப் பார்த்துக் காதல் கொள்கிறார். அவர் காதலுக்கு யாரோ வேட்டுவைக்க, மனம் ஒடிந்துபோன விஷாலுக்கு அவர் அப்பாவைப் பற்றி அம்மா சொல்கிறார்.
அப்பா பிரபுவைத் தேடி மதுரை வருகிறார். பிரபு சொல்லும் பூர்வ கதை தலையைச் சுற்ற வைக்கிறது. தங்கள் அப்பா விஜய குமாரை சகோதரர் பிரபுதான் கொன்றுவிட்டதாக அவரது மூன்று தங்கைகளும் நம்புகிறார்கள். இதனால் பிரபுவை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறார்கள். இப்படிப் பிரிந்த குடும்பத்தை தனது தம்பிகள் வைபவ், சதீஷ் ஆகிய இருவருடன் இணைந்து விஷால் ஒன்று சேர்க்கப் பாடுபடு கிறார். இதுபோக அந்த மூன்று அத்தைகளுக்கும் தலா ஒரு பெண். அவர்களில் ஒருவர்தான் ஊட்டியில் விஷால் சந்தித்தாரே... அந்த ஹன்சிகா!
முதல் காட்சியில் கூலிக்கு ஆள் கூட்டிவரும் வேலையைச் செய்வதாக அறிமுகமாகிறார் நாயகன் விஷால். அதன் பிறகு அவரது தொழில் திரைக்கதையை நகர்த்த ஊறுகாய் அளவுக்குக்கூட உதவவில்லை. ஹன்சிகாவைப் பார்த்த மாத்திரத்தில் காதலிக்கத் தொடங்கும் அவர், காதலை வளர்க்கும்போது உருவாகும் நகைச்சுவைத் தோரணத்தில் உள்ளே நுழைகிறார் இன்ஸ்பெக்டர் சந்தானம். இரண்டாவது பாதியில் மட்டுமே அவரால் கொஞ்சம் கலகலப்பு எட்டிப் பார்க்கிறது.
வில்லனின் பாத்திரப் படைப்பு, வில்லத்தனம், அதை முறியடிக்கும் நாயகனின் உத்திகள், அல்லி ராணிகளாக வலம் வரும் பெண்கள், அவர்களைத் ‘திருத்தும்’ விதம் என எல்லாமே பார்த்துப் பார்த்துச் செல்லரித்த காட்சிகள். அப்பாவைக் கண்டுபிடித்தல், சகோதரர்கள் ஒன்றுசேருதல், அத்தைகளைக் கண்டுபிடித்தல், குடும்பம் ஒன்றுசேருதல் ஆகியவற்றில் தெறிக்கும் ‘கற்பனை வள’த்துக்கு கோல்டன் குளோப், ஆஸ்கர் முதலான விருதுகளைப் பரிந்துரைக்கலாம்!
முடிந்தவரை பெண்களை இழிவாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். முக்கியமாக சாக்கு மூட்டையில் பெண்கள் கடத்தப்படும் காட்சி... சண்டைக் காட்சி என்ற பெயரில் மூட்டையைத் தூக்கிப் போட்டு விளையாடுகிறார்கள் விஷாலும் அவரது தம்பிகளும். ஹன்சிகாவின் உடலை வைத்து சந்தானம் கொச்சையாகவே கிண்டல் அடிக்கிறார். படம் முழுவதும் இப்படி பரவிக் கிடக்கும் இரட்டை அர்த்த வசனங்களை அடுக்க ஆரம்பித்தால் இடம் காணாது.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைப்பாளராக அறிமுக மாகிறார். இளைஞர்களைக் கவரக் கூடிய இசையைத் தந்திருக்கிறார். விஷால், ஹன்சிகா, சந்தானம், வைபவ், ரம்யா கிருஷ்ணன், பிரபு, கிரண், பிரதீப் ராவத், என்று பெரிய பட்டாளமே இருந்தாலும் யாருக்கும் எந்தச் சவாலும் இல்லை.
படத்துக்கு ‘ஆம்பள’ என்று ஏன் பெயர் வைத்தார்கள்? படம் முழுவதும் அவ்வப்போது ‘ஆம்பள, ஆம்பள’ என்று கூக்குரல் வருவது எதற்காக? படத்தில் அப்படி யாரும் யாருடைய ஆண்மைத்தனத்தையும் கேள்விக்கு உட்படுத்தவே இல்லையே?
"உங்க வேலையை நீங்க ஒழுங்கா செஞ்சா நான் ஏன் உங்க வேலைக்கு வரப் போறேன்?" என்று விஷால் கேட்கும்போது ‘தயாரிப்பு விஷால்’ என்னும் வார்த்தைகள் திரையில் தோன்றுகின்றன. இயக்குநரையும் தயாரிப்பாளரையும் பார்த்துக்கூட இதே கேள்வியைக் கேட்கலாம்.
குறைந்தபட்ச கண்ணியத்தையும் பேருக்காவது ஒரு கதையையும் மசாலா படங்களிலும் எதிர்பார்த்துச் செல்வது தமிழ் சினிமா ரசிகர்களின் பழக்கம். பொழுதுபோக்கு என்னும் பெயரால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் படத்தை நகர்த்திக்கொண்டு போகலாம் என்று சுந்தர்.சி நினைத்துவிட்டாரோ?!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT