Published : 28 Aug 2016 08:51 AM
Last Updated : 28 Aug 2016 08:51 AM
பேய்ப் படங்களின் பிடியில் இருக்கும் கோடம் பாக்கத்தில் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையைச் சொல்ல முனைகிறது இயக்குநர் மித்ரன் ஜவஹரின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.
துடுக்குத்தனமும் சேட்டைகளு மாக உலா வரும் நாயகன் வால்டர் பிலிப்ஸ் (வினோத்), கல்லூரியில் படிக்கிறார். நண்பரின் திருமணத்தில் நாயகி இஷா தல்வாரைப் (ஆயிஷா) பார்த்ததும் அவர் அழகில் மயங்கிக் காதலில் விழுகிறார். ஆயிஷாவின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடான இஸ்லாமியக் குடும்பம். கட்டுப்பாடுகளை மீறி வினோத்தும் ஆயிஷாவும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.
தலைப்புக்கு ஏற்றபடி பல முறை பார்த்த கதையையே மீண்டும் படமாக்கியிருக்கிறார்கள். ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ என ரீமேக் படங்களை எடுத்த மித்ரன் ஜவஹர் ‘தட்டத்தின் மறயத்து’ என்ற மலையாளப் படத்தை ரீமேக் செய்திருக்கிறார். காதலின் வலிமையால் மதங்களைத் தாண்டி இரு மனங்கள் கலக்கும் கதையைச் சொல்லும் ஒரு படத்தில் காதலுக்கான எதிர்ப்பையும் காதலின் வலியையும் கொஞ்சமும் காட்டாமல் விட்டது பெருங்குறை.
காதல் உருவாகி வளரும் விதம், காதலுக்கான நெருக்கடிகள், காதலர்களின் போராட்டம் என எதுவுமே போதிய அளவு சொல்லப்படவில்லை. காதலியை நினைத்துக் காதலன் உருகுவது, காதலியைச் சந்திக்க முட்டாள்தனமாகத் திட்டம் தீட்டி மாட்டிக்கொள்வது, காதலர்களைச் சேர்த்துவைக்க நண்பர்களும் காவலர்களும் சேர்ந்து திட்டம் தீட்டுவது என்று உப்புச் சப்பற்ற காட்சிகளாக நகர்கிறது படம். இடையில் தொழிலாளர் பிரச்சினையைக் கொண்டுவந்து பரபரப்பூட்டும் பரிதாபகரமான முயற்சியும் உண்டு.
சமய சம்பிரதாயங்களில் ஆழமாக வேரூன்றிய ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், முடிவெடுக்கும் உரிமை இல்லாமை ஆகியவற்றைக் காட்டியிருக்கும் விதம் வலுவாக இருக்கிறது. மதங்களைக் கடந்து சொல்லப்படும் காதல் கதைகளில் வழக்கமாக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்திருப்பது ஆறுதல். பிரச்சினை எங்கே இருக்கிறதோ அங்கேதான் தீர்வும் இருக்கும் என்பதற்கு ஏற்ப, பெண்ணின் குடும்பத்திலிருந்தே மாற்றம் வருவதாகக் காட்டியிருப்பது ஆரோக்கியமனது.
‘கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளரும் பெண்களுக்கும் தனியாக ஆசை இருக்கும். நம் கவுரவத்துக்காக அவர்களைப் பகடையாக்கக் கூடாது’ என்பன போன்ற வசனங்கள் சுளீரென்று இருக்கின்றன. ஒட்டுமொத்தக் கதையையும் கடைசியில் வரும் சில வசனங்கள்தான் காப்பாற்றுகின்றன. காவல் அதிகாரியாக வரும் மனோஜ் கே. ஜெயன், சிங்கமுத்து ஆகியோருக்குக் காதலைச் சேர்த்து வைப்பதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை.
கதைக்குப் பொருத்தமான நாயகன் வால்டர் பிலிப்ஸ். காதலியின் பார்வையைப் பார்த்து உருகுவது, பிரிவால் பரிதவிப்பது என நடிப்பதற்கான வாய்ப்புகளை ஓரளவுக்கு நன்றாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். பல இடங்களிலும் ஒரே முக பாவனையைக் காட்டுவது நடிகரின் தவறு இல்லை. காட்சியமைப்புகளின் தவறு,
கட்டுப்பாடான முஸ்லிம் குடும்பத்துப் பெண்ணாக வரும் இஷா தல்வாரின் முகம் திரையை ஒளிரச்செய்கிறது. படம் முழுவதும் புத்துணர்வோடு இருக்கிறார். கண்களாலும் புன்னகையாலும் மட்டுமே நடித்து நம் மனதில் இடம் பிடிக்கிறார். கட்டுப்பாடான குடும்பத்தில் உள்ள ஒரு பெண் எப்படி இருப்பார் என்பதை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்.
நாசர் அவ்வப்போது வந்துபோகிறார். தலைவாசல் விஜய்க்கு கிளைமாக்ஸில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அழுத்தமாகச் செய்திருக்கிறார். காமெடியனாக வரும் அர்ஜுன் நந்தகுமாரின் முயற்சிகள் எடுபடவில்லை. மனோஜ் கே. ஜெயன், சிங்கமுத்து கோஷ்டியின் காமெடி எரிச்சலைத் தான் வரவழைக்கிறது.
விவேகானந்தர் பாறை, திருவள்ளூர் சிலையைக் காட்டாமலேயே கன்னியாகுமரி மாவட்டத்தின் அழகைப் படம் பிடித்துக் கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா.
இஷா தல்வாரைப் பார்த்ததும் கேமராவுக்குத் தனி உற்சாகம் பிறக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை படத்தைத் தூக்கிப் பிடிக்கிறது. பாடல்கள் திரைக்கதையில் பொருத்தமற்று இருந்தாலும் கேட்டு ரசிக்கும்படி இருக்கின்றன.
வலிமையும் வலியும் நிறைந்த காதலின் போராட்டத்தைக் கவித்துவமாகச் சொல்வதற்கான வாய்ப்பு இருந்தும், பலவீனமான திரைக்கதை, காட்சி அமைப்பால் தடுமாறி நிற்கிறது மீண்டும் ஒரு காதல் கதை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT