Published : 06 Jan 2014 10:06 AM
Last Updated : 06 Jan 2014 10:06 AM

வேட்டி கட்டிய அஜித்.. வெளுத்து வாங்கும் விஜய்: பொங்கல் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்...

சாதாரணமாக பொங்கலுக்கு சில மாதங்களுக்கு முன்பே தீபாவளி பண்டிகை முடிந்துவிடும். ஆனால் இந்த முறை தமிழக தியேட்டர்களுக்கு பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பு தீபாவளி வருகிறது. அஜித், விஜய் இருவரின் படங்களும் இந்த மாதம் பத்தாம் தேதி அதிரடியாக ரிலீஸாவதே இதற்கு காரணம். 7 வருடங்கள் கழித்து தமிழ் திரையுலக பாக்ஸ் ஆபிஸில் அஜித் - விஜய் படங்கள் நேரடியாக மோதவிருக்கிறது. 2001ல் தீனா - ப்ரெண்ட்ஸ், 2002ல் பகவதி - வில்லன், 2003ல் திருமலை - ஆஞ்சநேயா, 2006ல் ஆதி - பரமசிவன், 2007ல் போக்கிரி - ஆழ்வார் என்று பாக்ஸ் ஆபிஸில் போட்டியிட்டவர்கள் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டுவந்துள்ள இந்தப் படங்களின் ஹைலைட்தான் என்ன என்று 'ஜில்லா' இயக்குநர் நேசனிடமும், 'வீரம்' இயக்குநர் சிவாவிடமும் கேட்டோம்.

வீரம் படத்தின் முக்கியத்துவத்தை பற்றி இயக்குநர் சிவா நம்மிடம் கூறியவை:

முதல் முறையாக அஜித் முழுப்படமும் வேஷ்டி, சட்டையில் நடித்துள்ளார். இதுவரைக்கும் வந்த அஜித் படங்களில் இல்லாத அளவிற்கு இறங்கி அடிச்சிருக் கார். இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதையில் இதற்கு முன் அஜித் நடித்த தில்லை. அதுதான் 'வீரம்' படத்தின் முதல் ஹைலைட்.

நீண்ட நாட்கள் கழித்து தமன்னா தமிழில் நடித்திருக்கிறார். அஜித், தமன்னா காம் பினேஷன் மிகவும் புதியதாக இருக்கும். டான்ஸ் காட்சிகளில் இருவரும் அசத்தியி ருக்கிறார்கள்.

படத்தோட பாடல்கள் பெரிய ப்ளஸ். ஒவ் வொரு பாடலுக்கும் அஜித் ரசிகர்களால் ஆடாமல் இருக்க முடியாது.

சந்தானம், தம்பி ராமையா சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் படத்துக்கு மற்றொரு பிளஸ். படத்தில் நிறைய நடிகர்கள் என்பதால் மிக கஷ்டப்பட்டு 110 நாட்கள் படம் பிடித்தோம்.

அண்ணன் - தம்பி பாசம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே கண்டிப்பா பேசப்படும். படத்துல மட்டும் அஜித் தம்பிகளுக்கு அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்குமே அவர் அண் ணனாக இருந்தார்.

ஒரு குடும்பத்துல சின்ன குழந்தைகள், அவங்களோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என மொத்த குடும்பமும் படத்துக்கு வந்தாங்கன்னா, எல்லாரையும் சந்தோஷப்படுத்துற படமா ‘வீரம்' இருக்கும். இதை 100% நம்பிக் கையோட சொல்றேன்.

படத்தின் முக்கிய காட்சிகளில் ஒன்று ரயிலில் நடக்கும் சண்டைக்காட்சி. இடைவேளையின்போது வரும் இந்த சண்டைக்காட்சி மிக பிரம்மாண்டமாக வந் துள்ளது. சண்டை இயக்குநர் செல்வா அதற்காக ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார். அதோடு கிளைமேக்ஸ் காட்சியிலும் ஒரு முக்கிய சண்டைக்காட்சி இருக்கிறது.

இவ்வாறு இயக்குநர் சிவா கூறினார்.

‘ஜில்லா’ படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இயக்குநர் நேசன் நம்மிடம் கூறியவை:

விஜய், மோகன்லால்னு இரண்டு மாஸ் ஸ்டார்களை வைச்சு நான் பண்ணி யிருக்கும் கமர்ஷியல் காக்டெய்ல் ‘ஜில்லா'. இரண்டு பேருமே சேர்ந்து வரும் காட்சிகள் பட்டையைக் கிளப்பும்.

ஒப்பனிங் சாங்கில் இரண்டு பேரும் சேர்ந்தே முழுப்பாட்டுக்கும் ஆடியிருக்காங்க. ரொம்ப பிரம்மாண்டமாக கலர்ஃபுல்லா எடுத்திருக்கோம். ஓப்பனிங் பாட்டுலயே பாக்குறவங்களை எல்லாம் ‘ஜில்லா’ கட்டிப் போட்டுரும்..

இதற்கு முன் விஜய்யுடன் காஜல் அகர் வால் சேர்ந்து நடித்திருந்தாலும், ‘ஜில்லா'வில் அவர்களின் காட்சிகள் பார்ப்பவர்களுக்கு புதுசா இருக்கும்.

விஜய், சூரி சேர்ந்து பண்ணியிருக்கும் காமெடி காட்சிகள் சிரிப்பு பொங்கல் தான். நிறைய காட்சிகளை படம்பிடித்த போது நானே கட் சொல்ல முடியாமல் சிரித்தேன்.

படத்தோட பாடல்கள் ஏற்கனவே ஹிட். அதுவும் விஜய் பாடியிருக்கும் ‘கண் டாங்கி' பாடலை ஜப்பானில் ஷுட் பண்ணி யிருக்கோம்.

கமர்ஷியல் படத்துக்கு பஞ்ச் வசனங்கள் தான் முக்கியம். ஆனா இதுல பஞ்ச் வசனங்கள்னு எதுவுமே கிடையாது. வசனங்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமா இருக்கும்.

விஜய்யோட சண்டைக்காட்சிகள் எல்லாம் மாஸா இருக்கும். ரோப் இல்லாம, டூப் இல்லாம நிறைய சண்டைக்காட்சிகளை இதில் விஜய் செய்திருக்கார்.

க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை 100 ஏக்கர் சோளக்காட்டில் 6 கேமரா வைத்து பிரம்மாண்டமா எடுத்திருக்கோம். விஜய், மோகன்லால் ரெண்டு பேருமே வில்லன் களுடன் மோதும் அந்த காட்சியில் தீப்பொறி பறக்கும்.

படம் பார்க்க தியேட்டர்குள்ள வந்தீங்கன்னா படம் ஆரம்பிச்சதுல இருந்து, முடியுற வரை ஒவ்வொரு சீனும் விசில் அடிச்சு, சந்தோஷப்படற மாதிரி எடுத்திருக்கோம்.

இவ்வாறு நேசன் கூறினார்.

‘வீரம்' இயக்குநர் சிவா, ‘ஜில்லா' இயக்கு நர் நேசன் இருவருமே பரீட்சையை எழுதி விட்டார்கள். மக்களின் வழங்கப் போகும் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x