Last Updated : 28 Nov, 2014 02:18 PM

 

Published : 28 Nov 2014 02:18 PM
Last Updated : 28 Nov 2014 02:18 PM

ஹாலிவுட் ஷோ: அதிர்ஷ்ட தேவதை வருகிறாள்

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்று பெயர் பெற்றாலும் வால்ட் டிஸ்னியைப் போல ஜெயித்துக்கொண்டே இருந்தவரும் எவருமில்லை. அவரது வெற்றிக் கதையை எழுதினால் ஐரோப்பிய தேவதைக் கதைகளில் ஒன்றான ‘சிண்ட்ரெல்லா’வைத் தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அனிமேஷன் உலகில் அவர் கோட்டை கட்டியபிறகு, குழந்தைகளை மேலும் சந்தோஷப்படுத்த விரும்பினார். இதற்காக உலகின் பிரம்மாண்ட தீம் பார்க்கான ‘டிஸ்னிலேண்டை’ உருவாக்க, தனது ஒட்டுமொத்த சொத்தையும் கொட்டி மீண்டும் வறுமையை வலியப்போய் அழைத்துக்கொண்டார். கலிபோர்னியாவில் 1955-ம் ஆண்டு அமைந்த அவரது தீம் பார்க்கில் ‘மேஜிக் கேஸில்’ என்ற கோட்டைக்கு முதன்மையான இடம்கொடுக்கப்பட்டது. குழந்தைகளால் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டுவரும் சிண்ட்ரெல்லா, தனது சித்தியின் கொடுமைகள் தன்னைத் தீண்டாமல் நிம்மதியாக ஒரு ராஜ குமாரியைப்போல் வாழும் இடம்தான் மேஜிக் கேஸில் கோட்டை.

“நீங்கள் கனவுகள் கண்டால் அதை விடாமல் துரத்துங்கள். கார்ட்டூன் கதாபாத்திரங்களால் உலகையே என்னால் முற்றுகையிட முடிந்தபொழுது உங்களால் முடியாதா?” என்று சிரித்தபடியே சொன்ன டிஸ்னியிடம் எப்படி எப்போதுமே சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, “குழந்தைகளின் உலகில் குழந்தையாகவே வாழ்கிறேன். அதனால்தான்!” என்றார். அப்படிப்பட்டவர் குழந்தைகளின் உலகில் நீங்கா இடம்பிடித்த ‘சிண்ட்ரெல்லா’ கதையை 1950-ம் ஆண்டு முதல்முறையாக இரு பரிமாண அனிமேஷன் படமாகத் தயாரித்தார். டிஸ்னியின் 12-வது அனிமேஷன் படத் தயாரிப்பாக உருவான அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

அதன்பிறகு 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2002-ம் ஆண்டில் சிண்ட்ரெல்லாவின் இரண்டாம் பாகமும், 2007-ல் முன்றாம் பாகமும் தயாரிக்கப்பட்டு அனிமேஷன் உலகில் பலமுறை பவனி வந்தாள் சிண்ட்ரெல்லா. தற்போது டிஸ்னி நிறுவனமே சிண்ட்ரெல்லாவை லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் படமாக உருவாக்கிவருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சிண்ட்ரெல்லா உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், 19-ம் தேதி படத்தின் டிரைலரை வெளியிட்டது வால்ட் டிஸ்னி. கடந்த 9 நாட்களில் 12 கோடிப் பேர் இந்த டிரைலரைப் பார்த்திருப்பதிலிருந்தே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை புரிந்து கொள்ள முடியும்.

சிண்ட்ரெல்லாவின் கதை ஐரோப்பாவைக் கடந்து உலகம் முழுவதும் பரவி அனைவராலும் அறியப்பட்ட பாரம்பரியம் மிக்க நாட்டுப்புறக் கதை. நாயகி எலா எனும் சிண்ட்ரெல்லா ஒரு இளம் பெண். தாயை இழந்து சித்தியின் அன்றாட அவமதிப்புகளே வாழ்க்கை என்ற சூழ்நிலையில் வாழும் அவள் வாழ்வில் ஏற்படும் திடீர் அதிர்ஷ்டத்தைப் பற்றியதே கதை. பெரும் துன்பங்களைச் சந்தித்த ஒருவர் அதையெல்லாம் வெற்றிகொண்டு மீண்டு வந்ததை குறிக்கும் ஒரு பாரம்பரிய அழகியல் படிமமாக புகழ்பெற்றுவிட்டாள் சிண்ட்ரெல்லா. ஒரு முழுமையான கதைக்கு உண்டான அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமையப்பெற்ற நாடக வகைக் கதையாக சிண்ட்ரெல்லாவைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான லில்லி ஜேம்ஸ் சிண்ட்ரெல்லாவாக நடிக்க, அவரைக் கொடுமைப்படுத்தும் சித்தியாக இரண்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற ஆஸ்த்ரேலிய நடிகையான கோட் பிளான்சிட் நடிக்கிறார். சிண்ட்ரெல்லாவை விரும்பும் ராஜகுமாரனாக ரிச்சர்ட் மேட்டன் நடிக்கிறார். படத்தை இயக்குபவர் கென்ன பிரானா. ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுத்துப் பலமுறை சிறந்த இயக்குநருக்காக ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர். சிண்ட்ரெல்லாவை எப்படி ரசித்து உருவாக்கியிருப்பார் என்பதைக் காண மார்ச் மாதம்வரை காத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x