Published : 10 Mar 2017 10:31 AM
Last Updated : 10 Mar 2017 10:31 AM
இலக்கின்றிப் பாயும் வெள்ளம் போன்றது இசை. அது மொழி என்ற கரைகள் மூலம் ஆற்றுப்படுத்தப்படும்போது, அது செல்லும் தடத்தில் உள்ள இடங்களுக்கு உரிய பயன்பாட்டை அளிக்கும்.
‘வோ கோன் தீ’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ் கோஸ்லாவின் மற்றொரு திகில் படம் ‘மேரே சாயா’ (என் நிழல்). அதுவும் வெற்றிப்படமே. இசை, பின்னணிப் பாடகரின் குரலினிமை, பாடலின் கருத்துக்கள் ஆகிய மூன்று அம்சங்களிலும் சிறந்து விளங்குகின்றன இப்படத்தின் நான்கு பாடல்கள். அவற்றில் இரண்டு சோக உணர்விலும் இரண்டு மகிழ்ச்சி உணர்விலும் அமைந்தவை.
ஏங்க வைக்கும் பாடல்
ராஜா மெஹதி அலி கான் — மன்மோகன் — சாதனா கூட்டணியில் வெளிவந்த இப்படத்தின் நாயகன் சுனில் தத். மேல்தட்டு வர்க்கத்தின் கம்பீர உடல் மொழியை நன்றாக வெளிப்படுத்தும் திறன் பெற்றவர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய சமயத்தில் மர்மமான சூழ்நிலையில் இறந்த தன் மனைவியை நினைத்துக் கலங்கும் நாயகனுக்கு ஆறுதல் தரும் விதமாக, இறந்துபோன அவன் மனைவி பாடுவதாக அமைந்த இந்தப் பாடல், ‘து ஜஹான் ஜஹான் சலேகா மேரா சாயா சாத் ஹோஹா’ என்று தொடங்குகிறது. லதா மங்கேஷ்கர் பாடிய தலை சிறந்த பாடல்களில் ஒன்று இது. அன்புக்குரியவர்கள் திடீரென இறந்துவிட்டால் அவர்களை எண்ணிக் கலங்கும் அனைவரும், ‘உண்மையில் அது மாதிரி நடக்கக் கூடாதா’ என ஏங்க வைக்கும் பாடல் வரிகளைக் கொண்டது.
அந்தப் பாடலின் பொருள்:
நீ எங்கு எங்கு சென்றாலும் என் நிழல் அங்கிருக்கும்
என்னை எப்பொழுது நினைத்து உன் கண்களில்
நீர் பெருகினாலும், அங்கு உடனே வந்து
என் கண்ணீர் அதை நிறுத்திவிடும்.
நீ மனம் சோர்ந்து போய்விட்டால்
என் மனமும் சோர்ந்துவிடும்
உன் பார்வையில் தெரிகிறேனோ இல்லையோ,
நான் உன் கூடவேதான் இருப்பேன்.
நீ எங்கு சென்றாலும் நிழலாகத் தொடர்வேன்
ஒரு வேளை நான் ஒரேடியாக விலகிச் சென்றுவிட்டாலும்
நீ வேதனைப்படாதே,
என் மீதான அன்பை நினைத்து
உன் கண்களை ஈரமாக்கிக்கொள்ளாதே.
அப்பொழுது திரும்பிப் பார்த்தால் நான்
உன் நிழலாக அங்கு நிற்பேன்
உன் துக்கத்திலும் வேதனையிலும்
என் துக்கமும் வேதனையும் கலந்து இருக்கும்
அது உன் ஒவ்வொரு பிறவியிலும்
ஒளிவிடும் அகல் விளக்காக விளங்கும்.
நீ எதுவாகப் பிறவி எடுத்தாலும் அதன் நிழலாக
நான் உன்னுடன் இருப்பேன்.
‘பத்லாக்’ என்ற மராட்டியப் படத்தின் தழுவலான இந்த இந்திப் படம், பின்பு ‘இதய கமலம்’ என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்தது. இசை, பாடல் வரிகள், சூழல், என மூன்று மொழிகளுக்கும் எதுவும் பொதுவாக இல்லாவிடினும் வலுவான கதை அமைப்பாலும் பாடல்களாலும் மூன்று மொழிப் படங்களுமே வெற்றிபெற்றன.
முந்திக்கொண்ட வாலி
கடந்த வாரங்களில் நாம் பார்த்த ‘வோ கோன் தீ’ படத்தின் பாடல் வரிகளின் உணர்வு சிதையாமல் அப்படியே, ஏறக்குறைய ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு போல ‘யார் நீ’ படத்துக்காகத் தமிழாக்கியிருந்தார் கண்ணதாசன். ஆனால், ‘மேரா சாயா’ என்னும் படத்தின் பாடல்களை, அப்படத்தின் தமிழ் வடிவமான ‘இதய கமலம்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் எழுதினார். இந்திப் படச் சூழலுடன் இணையாத, ஆனால் என்றும் கேட்கத் தகுந்த அழகான பாடல்களாக மறுவடிவம் செய்தார்.
இறந்த தன் மனைவியை நினைத்துக் கலங்கி, அவள் இடத்திற்கு வந்த பெண்ணைப் புறக்கணிக்கும் நாயகன். ‘கற்பகம்’ படத்தில் இதே போன்ற சூழல் உள்ள காட்சிக்கு, வாலி ‘மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா, உன் உயிராய் நான் இருக்க என் உயிராய் நீ இருக்க’ என்ற பாடலை எழுதினார். ‘மேரா சாயா’ படப் பாடலைக் கேட்கும்போது ‘மன்னவனே அழலாமா’ பாடலும் அதற்கான காட்சியும் உடனே நம் நினைவுக்கு வரும். இப்படம் வெளிவருவதற்கு சில ஆண்டுகள் முன்பே வாலி எழுதிய வரிகள், இப்பாடலின் அச்சு அசலான தமிழ் வடிவமாக விளங்குவது வியப்புக்குரியது.
சோக உணர்வின் மற்றொரு பாடல், நாயகன் சுனில் தத் தன் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்து ‘ஆப்கர் பஹலு மே ஆக்கர் ரோ தியே’ என்று கலங்கும் பாடல். பாடியவர் முகமது ரஃபி.
பொருள்:
உன் அருகில் வந்து அழுகிறேன்
என் துக்கத்தின் கதையைச் சொல்லி அழுகிறேன்
வாழ்க்கை என்னைச் சோர்வடையச் செய்யும்போதெல்லாம்
அச்சத்துடன் உன் இலக்கை நோக்கி ஓடி வந்து
மண்டியிட்டு அழுகிறேன்
கண்ணீர் பெருகும் மாலைப்பொழுதில்
எங்கும் வேதனையின் நிழல் படரும் பொழுதில்
நம் நினைவு என்ற தீபத்தை ஏற்றி வைத்து அழுகிறேன்
பிரிவுடன் துக்கம் உடன் செல்வதில்லை
நீ இல்லாமல் நான் வாழ முடிவதில்லை
உன் மீதான அன்பினால் நான்
இழந்து அழுகிறேன், என் துக்கத்தின் கதையை
சொல்லிச் சொல்லி உன்னிடம் அழுகிறேன்.
மூல வடிவான மராட்டியப் படத்தில் இடம்பெறாத இந்த பாடலும் காட்சியும் இந்திப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT