Published : 17 Sep 2013 06:27 PM
Last Updated : 17 Sep 2013 06:27 PM

மூடர் கூடம்: விமர்சனம் - அனுபவமாக மாறும் படம்

இயக்கம்: நவீன்

ஒளிப்பதிவு: டோனி சான்

இசை: நடராஜன் சங்கரன்

நடிப்பு: ஓவியா, ஜெயப்பிரகாஷ், நவீன், சென்ராயன், ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா

தமிழ் சினிமாவில் அற்புதங்கள் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கின்றன. மூடர் கூடம் அதுபோன்ற ஒரு அற்புதம்.

சொந்த ஊரில் பெற்றோரை இழந்து, சென்னையில் இருக்கும் பணக்கார மாமா குடும்பத்தைத் தேடிவரும் வெள்ளைச்சாமி, அநாதைப் பள்ளியில் படித்து, சென்னையில் கஞ்சா விற்கும் சேரி வாலிபன் சென்ராயன், உதவாக்கரை, முட்டாள் என்று வசை வாங்கி விரக்தியில் அநாதையாகச் சுற்றும் குபேரன், தங்கைக்கு மருத்துவம் செய்யப் பணம் கேட்கும் டாக்டரைக் கொன்றுவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்த பின்னணியால் வேலை கிடைக்காமல் தவிக்கும் நவீன்.

இந்த நால்வரும் சந்திக்கும் இடம் காவல் நிலையத்தின் லாக் அப். அடுத்து தமிழ் சினிமா வழக்கம்போல டாஸ்மாக். நால்வரும் வெள்ளையின் அப்பாவை ஏமாற்றிப் பணக்காரராக இருக்கும் மாமா பக்தவத்சலத்தின் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். அதனால் ஏற்படும் அபத்தங்களும் திருப்பங்களும்தான் மூடர் கூடம்.

படத்தில் கதை என்று எதிர்பார்த்துச் செல்வதை விட ஓர் அனுபவத்தை எதிர்பார்த்துச் செல்வதே பொருத்தமானது. தனித்து விடப்பட்ட இளைஞர்கள் மாறுபட்ட சூழலில் எப்படித் தங்கள் வாழ்க்கையை கண்டெடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அருகிலிருந்து பார்ப்பதுபோல உணர்ந்துகொள்ளலாம்.

வாழ்க்கையை எல்லாரும் தீவிரமாகவும், புத்திசாலித்தனத்துடனும் வாழ்வதாகவே நினைக்கின்றனர். ஆனால் மற்றவர்களுக்கு அது முட்டாள்தனமாகவும் அபத்தமாகவும் தெரிகிறது. பணக்காரர்-ஏழை பாகுபாடு, குழந்தைகளுக்கு அன்பு கிடைக்காத நிலை, ஆங்கில மோகம் போன்ற தீவிரமான பிரச்னைகள் படம் முழுவதும் தொடப்பட்டிருந்தாலும், அனைத்தையும் அடுத்த காட்சியிலேயே கவிழ்த்து சாமர்த்தியமாக நமது நெகிழ்ச்சியிலிருந்து விடுவித்துவிடுகிறார்.

முட்டாள்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல, சாமர்த்தியசாலிகள் எந்நேரமும் சாமர்த்தியசாலிகள் அல்ல, புத்திசாலிகள் அனைவரும் புத்திசாலிகளும் அல்ல. மோசமானவர்கள் எப்போதும் மோசமானவர்களும் அல்ல. வாழ்க்கையும் தேவைகளும் சந்தர்ப்பங்களும்தான் நம் நடத்தையைத் தீர்மானிக்கின்றன என்பதை நகைச்சுவை இனிப்புத் தடவி ஒரு க்ரைம் படக்கதை பாணியில், சொல்லியிருக்கும் விதம் மிகவும் புதிது.

மும்பையிலிருந்து இடமாற்றம் செய்து, சென்னையில் தனது கிளையைத் தொடங்கியிருக்கும் தாவூத் இப்ராகிமும் அவரது அப்ரெண்டிஸ் உதவியாளர்களும் செய்யும் கூத்துகளும் களைகட்டுகின்றன.

சின்னச் சின்னத் துணுக்குகள், நாய் உட்பட அனைத்துக்கும் நெகிழ்ச்சியான பின்கதைகள், கதையின் போக்கிற்கேற்ப சித்தர், பாரதி பாடல்கள் ஆகியவை பொருத்தமான இசையுடன் தூவப்பட்டுள்ளன. நடராஜன் சங்கரின் பின்னணி இசை கதையுடன் இணைந்து அழகாகப் பயணிக்கிறது.

பரமார்த்த குருவும் அவர் சீடர்களும் நவீன சென்னையில் ஒரு குற்றச் செயலைப் புரிந்தால் என்னவெல்லாம் நடக்குமோ, அவை அனைத்தும் மூடர் கூடத்தில் நடக்கின்றன. சிடி திருட வரும் ஒற்றைத் திருடன் மைக்கிலிருந்து, டான் தாவூத் இப்ராகிம்வரை படம் முடியும்போது, பரிதாபமான மூடர்களாகிறார்கள். படம் நீயும் பொம்மை, நானும் பொம்மை என்ற தத்துவப் பாடலுடன் முடிகிறது.

தமிழ்ப் படங்களின் க்ளீஷே காட்சிகளைக் கிண்டல் செய்த தமிழ் படத்தில் தொடங்கி பீட்சா, சூது கவ்வும்வரை ஒருவகையான ஸ்பூஃப் வகை திரைக்கதை வடிவின் உச்சகட்ட சாத்தியம் மூடர் கூடம்.

எடிட்டிங்தான் படத்தின் குறை. இடைவேளை வரை விறுவிறுவென்று சென்று பிறகு மிகவும் நீ….ள…மா..கப் போகிறது. கிளைமாக்ஸில் எல்லா உபகதைகளையும் தொகுக்க முடியாத குழப்பமும் ஏற்படுகிறது.

ஓவியா ஒரே உடையில் வந்து திருடர்களுக்குப் பயந்து, கடைசியில் காதலனுடன் சேர்த்து வைத்த சென்ட்ரியானை கட்டிப்பிடித்து பாசமலராகி விடைபெறுகிறார். சென்ராயனுக்கு இது முக்கியமான படம். ஜாங்கோவை நினைவுபடுத்தும் பாத்திரத்தில் நடிப்பின் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறார். நால்வரில் ஒருவனாக வரும் இயக்குநர் நவீன் அதிகம் பேசினாலும் நிறைவாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாசைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

தமிழ் ரசனையை ஒருபடி உயர்த்தக்கூடிய இந்தப் படத்தை நீங்கள் தவறவிட்டால் உங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றை தவறவிடுகிறீர்கள் என்று அர்த்தம்!

இந்து டாக்கீஸ் தீர்ப்பு:

கிளாஸ் என்றும் மாஸ் என்றும் படங்களை வகைப்படுத்துவதுண்டு. மாஸ் படம் போன்ற தோற்றத்துடன் கிளாஸ் படத்தைத் தந்திருக்கிறார் புது இயக்குநர் நவீன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x