Published : 02 Feb 2014 09:21 AM
Last Updated : 02 Feb 2014 09:21 AM

இங்க என்ன சொல்லுது: தி இந்து விமர்சனம்

நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார். எதிர்பாராத அதிர்ஷ்டமாக வசதியும் அழகும் கொண்ட ஒரு பெண் அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். ஆனாலும் அவரது பேராசையும் முட்டாள்தனமும் பொறுப்பற்ற தன்மையும் அவரை விடுவதாக இல்லை. அவர் தானும் கெட்டுத் தன் மனைவியையும் நெருக்கடியில் தள்ளுகிறார். நிலைமை கை மீறிப் போவதற்குள் மீண்டும் ஒரு எதிர்பாராத உதவியின் மூலம் அவர் வாழ்க்கை சீரடைகிறது. இதுதான் ‘இங்க என்ன சொல்லுது’ படத்தின் ஆதாரமான கதை.



இதை வைத்துக் கொண்டு காவியமும் படைக்கலாம். குறட்டை விடுமளவுக்கு அலுப்பூட்டவும் செய்யலாம். விடிவி கணேஷின் திரைக்கதையும் வின்சென்ட் செல்வாவின் இயக்கமும் இரண்டாவதைச் செவ்வனே செய்கின்றன.

விடிவி கணேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி மீரா ஜாஸ்மின். கணேஷுக்குப் பக்க பலமாக சந்தானம், சிம்பு, கே.எஸ். ரவிகுமார், மயில்சாமி ஆகியோர் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஆண்ட்ரியாவும் ஒரு காட்சியில் வந்து போகிறார். ஆனால் யாரும் நம் மனதில் நிற்கவில்லை. எந்தச் சம்பவமும் கவர வில்லை. காரணம் திரைக்கதை.

கணேஷ், சொர்ணமால்யாவிடம் திருமண விண்ணப்பம் போடுவது, அதில் ஏற்படும் ‘திருப்பம்’, கணேஷும் சிம்புவும் மீரா ஜாஸ்மினைக் காப்பாற்றுவது, மீராவுக்கு சிம்புவின் மீது காதல் ஏற்படுவது, அதில் ஏமாற்றம் அடையும் மீரா அடுத்த நிமிடமே கணேஷைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்வது, கணேஷும் மயில்சாமியும் சேர்ந்து சினிமா எடுப்பது, அதற்காக கணேஷ் செய்யும் தகிடுதத்தங்கள், சறுக்கல்கள் என்று பல காட்சிகள் வந்துபோகின்றன.

சென்னைக்குக் காரில் வரும் வழியில் கார் ஓட்டும் சந்தானத்திடம் கணேஷ் தன் கதையைச் சொல்லும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நடு நடுவே சந்தானம் ஏதேதோ சொல்லிச் சிரிக்க வைக்க முயல்கிறார்.

அவ்வப்போது கணேஷ் நெகிழவைக்க முயல்கிறார். திரையரங்கில் மயான அமைதி. கணேஷின் முகத்தில் சற்றே கலவரம் எட்டிப் பார்க்கும் அப்பாவித்தனம் என்னும் ஒரே ஒரு உணர்ச்சிதான் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு நகைச்சுவைப் பாத்திரத்தில் ஒப்பேற்றிவிடலாம். குணசித்திரப் பாத்திரம் ஏற்க வேண்டுமானால் இதர உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த அவர் மெனக்கெட வேண்டும்.

சற்றே வயதான தோற்றம் கொண்ட மீரா ஜாஸ்மினின் நடிப்புத் திறனுக்குத் தீனிபோடும் காட்சி எதுவும் இல்லை. அபத்தமான ஒரு பாத்திரத்தைத் தன்னால் முடிந்த அளவு ஒப்பேற்றுகிறார். சிம்பு, ஆண்ட்ரியா சிறப்புத் தோற்றம் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. மயில்சாமி, ரவிக்குமார் பங்களிப்பும் அதே ரகம்தான்.

தரன் இசையில் பாடல்கள் அவ்வப்போது ஒலிக்கின்றன. ரசிகர்கள் நன்றியோடு எழுந்து வெளியே சென்று சிரம பரிகாரம் செய்துகொள்கிறார்கள். கதையிலோ அதைச் சொல்லும் விதத்திலோ ஏதேனும் ஒரு அம்சமாவது புதிதாக, சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். பாத்திரங்கள் கொஞ்சமாவது வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஓரிரு காட்சிகளாவது ரசிக்கும்படி இருக்க வேண்டும். திருப்பங்களாவது எதிர்பாராத விதத்தில் இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் எதற்காக ஒரு படம்? அதற்கு எதற்காக நட்சத்திரப் பட்டாளங்களின் ‘கௌரவ’த் தோற்றம்?

இங்க தூக்கம் வருதுன்னு சொல்லுது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x