Published : 06 Jan 2017 10:26 AM
Last Updated : 06 Jan 2017 10:26 AM
இந்தியத் திரை வரலாற்றில் மகத்தான பாடகர்களுள் ஒருவரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் கலைப் பயணத்தில் வெற்றிகரமாக ஐம்பது ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறார். பல்வேறு மொழிகளிலும் சேர்த்து நாற்பதாயிரத்துக்கும் மேலான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை, ஆறு முறை தேசிய விருது, ‘கோண்டு’ என்ற பழங்குடி இன மக்களின் மொழியில் பாடியது என்று இவர் செய்த சாதனைகள் ஏராளம். இருபது வயதில் ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா’என்றத் தெலுங்குப் படத்தில் முதன்முதலாகப் பின்னணி பாடினார். தற்போது எழுபதைக் கடந்திருக்கும் எஸ்.பி.பி-யின் குரலில் அதே இளமையும் உற்சாகமும் குறையவில்லை.
எஸ்.பி.பி.யின் ஐம்பதாண்டு காலக் கலை வாழ்வைக் கொண்டாடும் விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. உண்மையில், அந்த நிகழ்வு ஒரு சீடன் தன் குருவுக்குச் செய்யும் மரியாதையாக அமைந்தது; ஒரு கலைஞனின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பாக எளிமையாகவும், அதே சமயம் நெகிழ்ச்சிகரமாகவும் அமைந்தது.
குருவைப் போற்றிய சாதனையாளர்
இந்த விழாவின் முதல் நிகழ்வாக, தனது குருவான பாடகர் யேசுதாஸுக்கு எஸ்.பி.பி., பாத பூஜை செய்தார். பாத பூஜையைத் தொடர்ந்து பேசிய யேசுதாஸ் “பாலு எனக்குத் தம்பி மாதிரி. சமீபத்தில் நாங்கள் உலகச் சுற்றுலா சென்றேபோது, பாரீஸில் கச்சேரி முடித்துத் தங்கியிருந்தோம். கவனக்குறைவால் எங்களுக்கு இரவு சாப்பாடு தர மறந்துவிட்டார்கள். இருந்த ஒரே ஒரு ஆப்பிளை மட்டுமே சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டேன். அப்போது வெய்ட்டர் வந்து அழைக்க, கதவைத் திறந்தேன். அது பாலு! வெய்ட்டர் போல் மிமிக்ரி செய்து, கையில் எனக்காக நம்மூர் சாப்பாடும் செய்து கொண்டுவந்திருந்தான். அதுதான் பாலு. எங்களுக்குள் எப்போதும் நல்ல புரிதல் உள்ளது. அவன் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார்.
முதல் வாய்ப்பைப் பெற்றுத் தந்த நண்பன்
அதன் பின் பேசிய எஸ்.பி.பி., “முகம்மது ரஃபி பாடல்கள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவருக்குப் பிறகு யேசுதாஸ் அண்ணா மேல் பெரிய மரியாதை உண்டு. சிறு வயது முதலே பாடுவதில் எனக்கு ஆர்வம் இருந்தது. பாட்டுப் போட்டி ஒன்றில் நான் கலந்துகொண்டு பாடியதைக் கேட்டு, நடுவராக வந்த ஜானகி அம்மா ‘நல்லா பாடறேப்பா, சினிமாவுக்கு முயற்சி பண்ணு, நல்லா வருவே’ என்று முதல் விதையைப் போட்டார். அதன் பிறகுதான் சினிமாவில் வாய்ப்பு தேடத் தொடங்கினேன்.
1966 டிசம்பர் 15 அன்று என்னுடைய முதல் பாடலைப் பாடி, ஒரு பாடகனாக ஆனேன் என்றால் அதற்குக் காரணம் இவர்தான்” என்று தன் நண்பர் ஒருவரை அறிமுகப்படுத்தினார். “இவர் முரளி. இன்ஜினியரிங் படிக்கும்போது நாங்கள் இருவரும் அறைத் தோழர்கள். அன்று ரெக்கார்டிங்குக்கு என்னை அழைத்துச் செல்ல வேண்டிய கார் நீண்ட நேரமாகியும் வராததால் மிகுந்த வருத்தமடைந்திருந்த என்னைத் தேற்றி, அழைத்துச் சென்று எனக்காகப் பரிந்துபேசிப் பாட வைத்தது இந்த முரளிதான்” என்று அவருக்கு நன்றி கூறினார்.
‘இயற்கை என்னும் இளைய கன்னி’
“நான் தெலுங்கில் அறிமுகமானாலும் எனக்குத் தமிழில் ‘ஸ்வரப் பிச்சை’ போட்டது எனது தந்தைக்கும் மேலான எம்.எஸ்.விஸ்வநாதன்தான். அவரது இசையில் 1969-ல் வெளியான ‘சாந்தி நிலையம்’ படத்தின் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடல்தான் என்னுடைய முதல் தமிழ் பாடல். அதன்பின் எம்.ஜி.ஆர். தன்னுடைய படத்தில் என்னைப் பாட வைப்பதற்காக என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார்; இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அந்தச் சமயத்தில் எனக்கு டைபாய்டு வந்து படுக்கையில் இருந்தேன். எம்.ஜி.ஆர். எனக்காகப் படப்பிடிப்பையே தள்ளிப்போட்டுக் காத்திருந்தார். “நான் உன்னைப் பாடக் கேட்டது எல்லோருக்கும் தெரியும். இப்போது வேறு ஆளைப் பாட வைத்தால் நீ பாடியது பிடிக்காமல்தான் ஆளை மாற்றியதாக ஆகிவிடும். அது உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல” என்றார் எம்.ஜி.ஆர். அப்படி நான் பாடியதுதான் ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்.
முதல் தேசிய விருது
இந்தியில் நான் பாடிய முதல் பாடல் கே. பாலசந்தர் இயக்கிய ‘ஏக் துஜே கே லியே’ படத்தில் வரும் ‘தேரே மேரே பீச்சுமே’ என்ற பாடல். என் இந்தி உச்சரிப்பில் இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்துக்கு திருப்தி இல்லை. ‘பாலு இந்தப் பாடலைப் பாடாவிட்டால் நான் இந்தப் படத்தை இயக்கப்போவதில்லை’ என்று கே. பாலசந்தர் விடாப்பிடியாகச் சொல்லிவிட்டார். அதன் பின்பு அந்தப் பாடலை நான் பாடினேன். அந்தப் பாடல் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை எனக்குப் பெற்றுத் தந்தது.இப்படிப் பலரும் எனக்குப் பெரிய அளவில் உதவிசெய்து, என்னை வளர்த்துவிட்டார்கள்.
பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியிருக்கிறேன். எனினும் இசைதான் எனக்குத் தாய்மொழி. இத்தனை வருடங்களாக எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர்கள், பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பத்திரிக்கைத் துறையினர் என எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்த சந்திப்பு” என்று பேசி நெகிழ வைத்தார் எஸ்.பி.பி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment