Published : 23 Nov 2014 12:46 PM
Last Updated : 23 Nov 2014 12:46 PM
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்ட தருமபுரி மாவட்டத்தின் மலைகிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. வேலுவும்(விதார்த்) அவனது கிராமத்தின் சாகாக்களும் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே வரும் ஒரு மரக் கடத்தல் மாஃபியா தலைவன் வேலுவை அழைத்து, “நான் சொல்றபடி செஞ்சா... இந்தக் காட்டுல வாழ்ந்து கஷ்டப்படாம கார், பங்களான்னு சொகுசா வாழலாம்” எனத் தூண்டில் போடுகிறான்.
வெகுண்டெழும் வேலு, “உயிர் வாழ்றதுக்காக காட்டுலேர்ந்து எதை வேணும்னாலும் எடுத்துக்குவோம். ஆனால் வசதியா வாழறதுக்காக ஒரு செடியைக் கூட பிடுங்க மாட்டோம். போய்யா.. நீயும் உன் பணமும்” என்று முகத்தில் அறைந்தார்போல பேசிவிட்டு விறுவிறுவென்று நடக்கிறான்.
இந்தக் காட்சி சொல்லும் செய்திதான் படத்தின் மையம். கதையின் நாயகன் வேலுவுக்கு கல்வி அறிவு இல்லாவிட்டாலும், அனுபவ அறிவு காரணமாக தான் பிறந்து வளர்ந்த காட்டையும், அதனோடு இணைந்த தன் வாழ்வையும் நேசிக்கிறான். வேலுவின் நண்பனான கருணாவோ (முத்துக்குமார்) நன்கு படித்தவன். வாழ்வாதாரம் இல்லாத மலைகிராமத்து வாழ்வை வெறுப்பவன். எப்படியாவது வனத்துறையில் ‘ஃபாரஸ்ட் கார்டாக’ வேலைக்குச் சேர்ந்து, அரசு ஊழியன் ஆகி வசதியாக வாழ வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால் வேலையில் சேர இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், அதைத் திரட்ட சந்தன மரங்களைக் கடத்தி பிடிபடுகிறான்.
தன் மீது வழக்கு பதிவானால் அரசு வேலை பெறமுடியாது என்று தனது நண்பன் வேலுவைக் கட்டாயப்படுத்தி தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள வைக் கிறான். நண்பனுக்காக பழியை ஏற்று வேலு சிறை சென்ற பிறகு கருணாவுக்கு வனக்காவலர் வேலை கிடைக்கிறது. அவனது சுயநலம் மற்றும் பணவெறியால் மரக் கொள்ளையர்களுக்கு துணைபோகி றான். நண்பனையும் சிறையிலிருந்து வெளியே வரமுடியாதவாறு பார்த்துக் கொள்கிறான். மரக் கடத்தலுக்கு கிரா மத்து மக்களால் பிரச்சினை வரக்கூடாது என்று அவர்களை மலையிலிருந்து துரத்தியடிக்கும் திட்டத்தைச் செயல் படுத்துகிறான்.
கருணா நண்பன் அல்ல துரோகி என்பதைத் தெரிந்துகொள்ளும் வேலுவுக்கு சிறையில் உத்வேகம் கொடுக்கிறார் புரட்சிகர எழுத்தாளரான நந்தா (சமுத்திரகனி). “காடு உன் வீடு மட்டுமில்ல அது உன் ஆன்மா, அதை வெட்டுபவனை திரும்ப வெட்டு” என வன்முறை வழியை போதிக்கிறார் நந்தா. சிறையிலிருந்து விடுதலையாகும் வேலு என்ன செய்தான்? தங்கள் பூர்வீக வாழ்விடத்தை விட்டு வெளியேறும் தனது கிராம மக்களை அவனால் தடுத்து நிறுத்த முடிந்ததா? துரோகியான நண்பன் கருணாவையும், மரக் கடத்தல் மாஃபியா கும்பலையும் என்ன செய்தான் என்பதுதான் மீதிக் கதை.
சமூக விரோதிகளால் காடு அழிவ தையும், காலம் காலமாக அங்கே வாழும் மக்களை துரத்தியடிக்கத் துடிக்கும் அரசு இயந்திரத்தையும் காய்ச்சி எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்டாலின் ராஜாங்கம். ஆனால், திரைக்கதை அதற்கு ஒத்துழைக்கவில்லை.
பள்ளிக்கூட மாணவியை காதலிப்பதற் கும், அவளை மிதிவண்டியில் அமர வைத்து ஓட்டிக்கொண்டே சலிக்கச் சலிக்க முத்தமிடுவதற்கும், டூயட் பாடுவதற்குமே கதாநாயகனுக்கு நேரம் போதுமானதாக இருக்கிறது. அவர்களின் காதல் ஈர்க்கும்படியாக சொல்லப்படவில்லை.அதேபோல ஒரு தனி டிராக்காக இணைக்கப்பட்டிருக்கும் தம்பி ராமையா – சிங்கம்புலி நகைச்சுவை பார்த்துச் சலித்த அபத்தக் களஞ்சியம். இரண்டாம் பாதியில் பிரச்சினையை பேசவரும் இயக்குநர் இதற்காக வசனங்களையே அதிகம் சார்ந்திருக்கிறார்.
புரட்சிகர எழுத்தாளராக வரும் நந்தாவின் (சமுத்திரக்கனி) கதாபாத்திரம் சமூக அரசியலைச் சாட்டை அடி வசனங்கள் மூலம் குறுக்கு விசாரணை செய்கிறது. கனமான குரலும், நிலைகுத்தி நிற்கும் பார்வையுமாக அலட்டிக் கொள்ளாத நடிப்புடன் நந்தாவை நம் மனதில் நிற்க செய்கிறார் சமுத்திரக்கனி.
‘ஜன்னலோரம்’ படத்தில் கதாபாத்திர மாக நடிக்கத் தெரிந்த விதார்த் இந்தப் படத்தில் வேலுவாக உருமாறாமல் ‘மைனா’வை நினைவுபடுத்தும் தனது டெம்பிளேட் நடிப்பால் நம்மை கவர தவறிவிடுகிறார். நீண்ட வசனங்களைப் பேச அவரது குரல் பெரும் தடை யாக இருக்கிறது. வேலுவின் நண்பன் கருணாவாக நடித்திருக்கும் முத்துக்குமாரின் நடிப்பும் அந்தக் கதா பாத்திரத்துக்கு அவரது தோற்றமும் கச்சிதமாக பொருந்திவிடுகிறது. புது முக நாயகி சமஸ்கிருதி அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். அவருக்கு காதலிப்பதைத் தவிர கதையில் வேறு எந்த வேலையும் இல்லை.
இயக்குநர் கட்டுப்படுத்திய எல்லைக் குள்ளேயே சுழன்றாலும் மகேந்திரன் ஜயராஜூவின் ஒளிப்பதிவும், கேயின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்ப்பவை. ‘உன்னை பத்தி நினைச்சாலே’ பாடலும், படத்தின் முடிவுப் பகுதியில் வரும் புரட்சி பாடலும் கவர்கின்றன.
படத்தில் சறுக்கல்களும் ஓட்டைகளும் இருந்தாலும், ‘காட்டிலும் மலையிலும் வாழும் மக்களால் மட்டுமே காட்டை பாதுகாக்க முடியும், அதனால் காட்டை பாதுகாக்கும் பணியை எங்களிடமே அரசு கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தை முன்வைத்தமைக்காக காட்டுக்கும் ஒருமுறை வனநடை சென்று வரலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT