Last Updated : 29 Jul, 2016 11:36 AM

 

Published : 29 Jul 2016 11:36 AM
Last Updated : 29 Jul 2016 11:36 AM

கபாலி டிக்கெட் பிரச்சினை: யாருக்குப் பொறுப்பு அதிகம்?

ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்திருக்கிறது. பல முக்கிய சமூக நிகழ்வுகளை மக்கள் தங்கள் கவனத்தில் நிறுத்த முடியாமல் செய்துவிட்டதாக வருணிக்கப்படும் ‘கபாலி’ பட வெளியீடுதான் அது. சேலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் கைது, கல்விக்கடனைக் கட்டச்சொல்லி, தரப்பட்ட மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பொறியியல் பட்டதாரி லெனின் மரணம் எனக் கண்டுகொள்ளப்பட வேண்டிய பலவும் கபாலி அலையில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இவை ஒருபுறம் இருக்க, கபாலி படத்துக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் டிக்கெட் விலை தமிழகத்தின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சினை போலவே விவாதிக்கப்பட்டுவருகிறது.

எப்போதும் இல்லாமல் இப்போது

அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட முன்னணிக் கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் ‘ஃபிளாட் ரேட்’ பிரச்சினை எழாமல் இல்லை. அஜித் நடித்த ‘வேதாளம்’, விஜய் நடித்த ‘தெறி’ படங்களின் வெளியீடு சமயத்தில் வணிக வரித்துறையினர் பல திரையரங்குகளில் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் தியேட்டர் லைசென்ஸ் பறிக்கப்படும் எனவும், அதிகாலை சிறப்புக் காட்சி நடத்தவும் அனுமதியில்லை என்றும் திட்டவட்டமாக எச்சரித்ததாகவும் கூறப்பட்டது.

காய்ச்சலால் எகிறிய விலை

கபாலி படத்தின் பட்ஜெட் ஒருபுறம் இருக்க, “இந்தப் படத்தைக் கொண்டாடாத ஊடகங்களே இல்லை. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே கொண்டாடிவிட்டார்கள். ரஜினி முதல்முறையாக ஓர் இளம் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க முன்வந்தது, ஒரு இடைவெளிக்குப் பிறகு நேரடியான டான் கதாபாத்திரத்தில் நடித்தது எல்லாமே ‘கபாலி’ காய்ச்சலை அதிகப்படுத்தின. இதனால் கபாலி படத்தின் வியாபாரம் இதுவரை இல்லாத அளவுக்கு ஏரியா வாரியாக அதிக விலைக்கு விற்கப்பட்டது. இந்த விலைக்கெல்லாம் வாங்கத் தமிழ்நாட்டில் ஆள் இருக்க மாட்டார்கள் என்று முதலில் பின்வாங்கிய பலரே கபாலியை வாங்கினார்கள். அதனால் முதல் மூன்று நாட்கள் படம் வெளியாகும் ஊர்களைப் பொறுத்து 300 முதல் 1200 வரை ஃப்ளாட் ரேட்டுக்கு டிக்கெட் விற்றால்தான் லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில், விலையைக் குறிப்பிடாத டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டுப் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டது” என்கிறார் ரஜினி படத்தை விநியோகித்த பெயர் வெளியிட விரும்பாத விநியோகஸ்தர் ஒருவர்.

டிக்கெட் விலை விஷயத்தில் ரஜினி ரசிகர்களின் புலம்பலே பெரிதாக இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர், “தலைவர் படம் வெளியாகிற அன்று அதிகாலை 4 மணி , பிறகு 7 மணி அப்புறம் 10 மணி இந்த மூணு காட்சிகளும் ரசிகர் மன்றதுக்கான ஷோவாத்தான் எப்போதும் நடக்கும். விடிய விடிய தோரணமும் கட்டி, தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷகம் பண்ணிட்டு படம் பார்ப்போம். முதல் நாளே மொத்த ஷோவை புக் பண்ணிட்டு பணத்தைக் கட்டிடுவோம். ஆனால் இந்த முறை அது நடக்கல. ஐடி கம்பெனிகாரங்க, மார்க்கெட்டிங் கம்பெனிக்காரங்க வந்து நிக்கறாங்க. கேட்டா எல்லார் கையிலயும் ப்ரீமியம் டிக்கெட் இருக்குன்னு சொன்னாங்க. வெறுத்துப்போன ரசிகர்கள் சிலர் தலைவர் படத்தைப் பார்த்தே ஆகணும்னு 1200 டிக்கெட்டை 300 ரூபாய் அதிகமா கொடுத்து 1500 ரூபாய்க்கு வாங்கிப் பார்த்தாங்க. என்னை மாதிரி பலபேர் நொந்துபோய் விட்டுக்கு வந்துட்டோம். அப்புறம் விசாரிச்ச பிறகுதான் தெரியுது, முதல் இரண்டு நாட்களுக்கு பல கார்ப்பரேட் கம்பெனி ஊழியர்களுக்கு டிக்கெட்டை ‘பல்க் புங்கிங்’கிற பேர்ல மொத்தமா வித்துருக்காங்கன்னு” என்கிறார் அவர்.

ரசிகர்களின் ஏமாற்றம்!

எல்லா இடங்களிலும் இதே கதைதான். திருப்பூரில் இயங்கிவரும் பூம்புகார் கலைத்தென்றல் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினர் ஊரெங்கும் அடித்து ஒட்டிய போஸ்டர் ரசிகர்களின் இந்த மனக் குமுறலைத் தெளிவாகச் சொல்கிறது.

பல திரையரங்குகளில் முதல் நாளில் 120 ரூபாய் டிக்கெட் 1000 முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இத்தனை பெரிய வசூல் நடந்திருப்பதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், வணிகவரித் துறை சார்பில் என்னென்ன நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பது ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.

சில விதிவிலக்குகளும் உள்ளன. திருச்சியை அடுத்த பெரம்பலூர் நகரில் உள்ள கிருஷ்ணா, சுவாமி, ராம் ஆகிய மூன்று திரையரங்குகளில் கடந்த புதன் கிழமை வரை கபாலி திரைப்படம் வெளியாகவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட ஐம்பது பைசா அதிகம் விலை வைத்து விற்றாலும் தியேட்டருக்கு சீல் வைத்துவிடுவோம் என வருவாய் வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்ததாகவும் அதன் பொருட்டே கபாலி இதுவரை அங்கே வெளியாகவில்லை எனவும் தெரிகிறது. கபாலி வெளியான தினத்தில் தமிழகம் முழுவதும் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டு, அதிக கட்டணம் வசூலித்த சில திரையரங்குகளுக்கு அபராதம் விதித்ததாகவும் தெரியவருகிறது.

திரையரங்குகளுக்கும் ஆன் லைன் டிக்கெட் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை முறைப்படுத்தினால் சென்னை போன்ற நகரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஓரளவு தடுக்க முடியும். “புக்கிங் கட்டணமாக நீங்கள் 13 ரூபாய் ஐம்பது பைசா மட்டும் வாங்கிக்கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்துவிடுங்கள். நாங்கள் இங்கே கவுண்டரில் டிக்கெட்டுக்கான பணத்தை வாங்கிக்கொள்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்கள். ரசிகர்களும் நமக்கு இருக்கை உறுதியாகிவிட்டது என்று திரையரங்குக்குப் போனால் அங்கே அதிகக் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்” என்கிறார் ஆன்லைன் புக்கிங் நிறுவன ஊழியர் ஒருவர். இத்தனை புகார்களுக்கு மத்தியிலும் 10% திரையரங்குகள் நேர்மையாக நடந்துகொண்டன என்றும் அவர் சொல்கிறார்.

என்னதான் தீர்வு?

அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக ரசிகனே கொடுக்க முன்வந்தாலும் அதை வசூலிப்பது ஊழலாகக் கருதப்படாதவரை இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியாது என்பதுதான் திரையுலகைச் சேர்ந்த பலரது கருத்து.

“பெரிய படங்களில் நடிக்கும் நடிகர்களும் அவர்கள் நடிக்கும் படத்தைத் தயாரிப்பவர்களும் மனசாட்சியுடன் இதில் தலையிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது நற்பெயருக்கு இழுக்கு வந்துசேரும். ரசிகர்களின் கோபத்துக்கும் ஒருநாள் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று சமூக ஆர்வலர்கள் எழுப்பும் குரல் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் விழுமா, இதுபோன்ற முறைகேடுகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற ரசிகர்களின் ஆதங்கம் அலட்சியப்படுத்தப்படுவது திரைத் துறைக்கு நல்லதல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x