Last Updated : 31 Jan, 2014 12:00 AM

 

Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM

ஹாலிவுட் ஷோ: எதிரி மண்ணில் கருணை மனிதர்கள்

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானை முகாமிட்ட அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப் படையினரால் பின்லேடனை அங்கு வைத்துப் பிடிக்க முடியவில்லை. கடைசியில் பாகிஸ்தானில் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகிலேயே ஒரு மாளிகையில் குடும்பத்துடன் வசித்துவந்த பின்லேடனை அமெரிக்காவின் கடற்படையின் சிறப்புப் பிரிவான நேவி சீல் வீரர்கள் சுட்டு கொன்றனர். ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாக ’பயங்கரவாதத்துக்கு எதிரான’ அமெரிக்கப் படைகளின் போரும் பதிலுக்குத் தாலிபன்கள் அனுதினம் நடத்திக்கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளும் ஆப்கன் மக்களின் வாழ்வில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த ஆண்டின் இறுதியில் ஆப்கனை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறவுள்ள நிலையில், தாலிபன் தலைவரைப் பிடிக்கச் சென்று எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்ட ஒரு சீல் குழுவைப் பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படமான ‘லோன் சர்வைவர்’ (Lone Survivor) வரும் 31ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இப்படத்தை இயக்கியிருப்பவர் ‘Hancock', 'The Kingdom' போன்ற படங்களை இயக்கிய பீட்டர் பெர்க். தாலிபன்களின் வெறித்தனமான தாக்குதலில் தனியாளாக மாட்டிக்கொண்ட மார்கஸ் லட்ரெல் என்பவர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மார்கஸ் லட்ரெல் பாத்திரத்தில் ‘Fear', ‘Planet of the Apes' போன்ற படங்கள் மூலம் அறியப்பட்ட மார்க் வால்பெர் நடித்திருக்கிறார்.

போர்க் களத்தில் எதிரிகள் மீது தாக்குதல் நடத்த அல்லது பிடிக்கச் செல்லும் முன்னர் எதிர்ப்படும் குடியானவர்கள், விவசாயிகளைக் கொல்வதா வேண்டாமா என்பதுதான் இப்படத்தின் முக்கியக் கரு. தாலிபன் தலைவர் ஒருவரைப் பிடிக்கச் செல்லும் சீல் படையினர் காட்டுப் பாதையில் எதிர்ப்படும் ஆடு மேய்ப்பவர்கள் நான்கு பேரைப் பிடித்து விசாரிக்கின்றனர். அவர்களைக் கொல்வது பற்றி முடிவெடுக்கக் குழுவினரிடையே பலத்த விவாதம் நடக்கிறது, முடிவில் அவர்களை விடுவிப்பது என்று குழுவின் தலைவர் முடிவெடுக்கிறார்.

மேய்ப்பர்கள் அங்கிருந்து சென்ற ஒரு மணிநேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தாலிபன்கள் அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்குகின்றனர். லட்ரெலைத் தவிர மற்ற மூவரும் கொல்லப்படுகின்றனர். அவர்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டரில் வரும் பாதுகாப்புப் படையினரும் தாலிபன்களால் சுட்டுத்தள்ளப்படுகின்றனர். அப்போது ஆப்கானிஸ்தான் மண்ணின் பழமை வாய்ந்த மக்களான பஷ்டூன் இன மக்கள் லட்ரெலுக்கு அடைக்கலம் கொடுக்கின்றனர். எதிரி மண்ணில் மனிதாபிமானம் மிகுந்த மக்கள் தரும் தஞ்சத்தால் நெகிழ்கிறார் லட்ரெல். துப்பாக்கிச் சத்தம், வெடிகுண்டுகளின் அதிர்வுகள் மத்தியில் படத்தின் அடிநாதமாக மனிதாபிமானம் இழையோடுகிறது.

லட்ரெல் எழுதிய புத்தகம் பல பிரதிகள் விற்றுத் தீர்ந்தது போல அமெரிக்காவில் கடந்த 10ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முக்கியமாக மார்க் வால்பெர்க்கின் நடிப்பை ரசிகர்களும் விமர்சகர்களும் கொண்டாடுகின்றனர்.

கொல்லப்பட்ட சீல் குழு வீரர் மேத்யூ ஆக்செல்ஸனாக நடித்த பென் போஸ்டர் சொல்கிறார்: “ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் லட்ரெலிடம் போனில் பேசினேன். ‘மேத்யூ பாத்திரத்தில் ஏனோதானோ என்று நடிக்கக் கூடாது. அவர் பெயரை என் மகனுக்கு வைத்திருக்கிறேன்’ என்று கண்டிப்பான குரலில் சொன்னார்”.

அண்மையில் வெளியான போர் பற்றிய படங்களில் மிகச் சிறப்பான படம் என்று விமர்சகர்கள் கூறியுள்ளது, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x