Published : 12 Aug 2016 11:46 AM
Last Updated : 12 Aug 2016 11:46 AM

இயக்குநர் ஆகவே ஆசைப்படுகிறேன்: எடிட்டர் ப்ரவீன் நேர்காணல்

ஒவ்வொரு எடிட்டரும் ஒவ்வொரு கதைக் களத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள். ஆனால் கிராமம், நகரம் என அனைத்து விதமான படங்களிலும் சிறப்பாகப் பணிபுரிபவர் எடிட்டர் ப்ரவீன். தான் எடிட் செய்த ‘கபாலி’ வெற்றியடைந்த மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது...

ட்ரெய்லர் என்பதைத் தாண்டி டீஸர், மோஷன் போஸ்டர் என நிறைய வந்துவிட்டதே...

வீடியோ வடிவில் படத்தோட ஃபர்ஸ்ட் லுக்தான் டீஸர். ட்ரெய்லரில்தான் படத்தோட கதைக் களம் என்ன என்பது தெரியவரும். படத்தில் என்ன இருக்கிறது என்பதை ட்ரெய்லர் சொல்ல வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.

உங்களுடைய எடிட்டிங் பணி என்பது எப்போது தொடங்கும்?

நான் கதையைக் கேட்டவுடனே வாங்கிப் படித்து, இதெல்லாம் படத்தில் வராது என்று முதலிலேயே சொல்லிவிடுவேன். படப்பிடிப்புக்குச் செல்லும் முன்பே சில பாடல்களும் காட்சிகளும் குறைந்துவிடும். இயக்குநர்கள் ரஞ்சித், வெங்கட்பிரபு போன்றோரின் படங்களுக்கு, முதலிலேயே இப்படியெல்லாம் படப்பிடிப்பு பண்ணலாம் என்று சொல்வேன்.

‘சென்னை 28’ படத்திலிருந்து வெங்கட்பிரபுவிடம் பணியாற்றிவருகிறீர்கள். அவருடான நட்பு பற்றிச் சொல்லுங்கள்?

வெங்கட்பிரபு, ஒரு இயக்குநர் என்பதைத் தாண்டி எனக்கு ஒரு சகோதரர் மாதிரிதான். அவருக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியும். உங்களுடைய வெர்ஷனை முடியுங்கள், அப்புறமா வந்து படத்தைப் பார்க்கிறேன் என்று என் கையில் விட்டுவிடுவார். அந்த அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்.

அவருடைய முந்தைய இரண்டு படங்கள் சரியாகப் போகாததால்தான் ‘சென்னை 28’ 2-ம் பாகம் பண்ணச் சொன்னோம். ஏனென்றால் அவருடைய முகவரியே ‘சென்னை 28’ தான். ‘பிரியாணி’ படத்துக்கு முன்பே ‘சென்னை 28’ 2-ம் பாகம் பண்ண விரும்பினார். பெரிய நாயகர்களின் படங்கள் பண்ணும்போது அனைத்து இயக்குநர்களுக்குமே ஒரு ப்ரஷர் இருக்கும்.

உங்களுடைய எடிட்டிங்கில் மிகவும் கவனிக்கப்பட்ட படம் ‘ஆரண்ய காண்டம்’. அப்படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

‘சென்னை 28’ முடித்த பிறகு, கேட்ட இரண்டாவது கதைதான் ‘ஆரண்ய காண்டம்’. நீங்கள் பார்ப்பதைவிட நிறைய வசனங்கள், சண்டைக் காட்சிகள் முதலில் இருந்தன. மக்கள் இப்படத்தை ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது. எஸ்.பி.பி. சரண் இக்கதையை நம்பினார். சில சண்டைக் காட்சிகளைத் தணிக்கைக்காக மட்டுமே குறைத்தார். அப்படியிருந்தும் படம் தணிக்கை பிரச்சினையில் சிக்கியது.

முதல் 4 நாட்கள் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்த்தவுடன், தியாகராஜன் குமாரராஜா மீது மிகப் பெரிய மரியாதை ஏற்பட்டது. ஒவ்வொரு காட்சியையும் ஒரு ஓவியம் மாதிரி பண்ணியிருந்தார். அக்கதையை அவர் படப்பிடிப்பில் அணுகிய விதமே வித்தியாசமாக இருந்தது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் அப்படத்தை எடிட் பண்ணினேன். என்னிடம் நியூயார்க் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சென்சார் செய்யப்படாத வடிவம் இருக்கிறது. அது மிகவும் அற்புதமானது.

முன்பெல்லாம் கேமிராவுக்குப் பின்னால் பணியாற்றுபவர்கள் தெரிந்ததில்லை. இப்போதும் அதே சூழல் இருப்பதாக உணர்கிறீர்களா?

முன்பு நான் ஒரு எடிட்டர் என்று கூறும்போது எந்தப் பத்திரிகைக்கு என்றுதான் கேட்க ஆரம்பித்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. சமூக வலைத்தளம் வந்தவுடன் அனைவருடனும் நேரடியாகப் பேச முடிகிறது. விஜய் சார் படம் பண்ண ஒப்பந்தமானவுடன் அவருடைய ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கவனிக்கப்படுவதில்லை என்று சொல்ல முடியாது, 100 % கவனிக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது.

எடிட்டிங்கில் உதவியாளர்கள்தான் எடிட் செய்து கொடுப்பார்கள். அதனை எடிட்டர் சரி பார்ப்பார் என்று சொல்கிறார்களே...

அப்படியல்ல. உதவியாளர்கள் வரிசைப்படுத்துவார்கள். அவர்கள் எங்களைவிடப் படத்தில் அதிகமாகப் பணியாற்றுபவர்கள். அதிலிருந்து கதைக்கு ஏற்றவாறு எப்படிக் கொண்டுவரப்போகிறோம் என்பதை நான்தான் முடிவு செய்வேன்.

ஒரு படத்தை எடிட் பண்ணும்போதே இது வெற்றியடையும் என்று உங்களால் கணிக்க முடியுமா?

உண்மையைச் சொன்னால் ‘மங்காத்தா’ இவ்வளவு பெரிய வெற்றியாகும் என நான் நினைக்கவில்லை. படத்தின் கதை, காட்சிகள் என்பதை எல்லாம் தாண்டி எந்தத் தேதியில் வெளியாகிறது என்ற ஒரு விஷயம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நான் இவ்வளவு படங்கள் பணியாற்றிவிட்டு, இது வெற்றியாகும் என்று கணிக்க முடியவில்லை என்றால் நான் இவ்வளவு நாட்கள் கற்றுக்கொண்டதில் அர்த்தமே இல்லை.

எனக்கென்று எடிட்டிங்கில் சில வழிமுறைகள் வைத்திருக்கிறேன். படம் ஆரம்பித்த 1 மணி நேரத்துக்குப் பிறகு, அதாவது இடைவேளை நேரத்தில், பாடல் வைக்க நான் விரும்ப மாட்டேன். அப்படி வைத்தால் பெரிய அளவில் ஹிட்டான பாடல்களை மட்டும்தான் வைப்பேன். இல்லையென்றால் கிராமங்களில் எல்லாம் தம் அடிக்கச் சென்றுவிடுவார்கள்.

வெளியீட்டுக்குப் பிறகு காட்சிகளையோ பாடல்களையோ தூக்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. திரையரங்குக்குச் சென்றவுடன் நீக்கக் கூடாது என்று படம் முடிவடையும் தறுவாயிலேயே சொல்லிவிடுவேன். திரையரங்குக்குச் சென்றவுடன் நீக்கினால் படத்தின் ஒலி, காட்சியமைப்பு என அனைத்து விஷயத்திலும் ஜம்ப் ஆகும்.

நீங்கள் பணியாற்றிய இயக்குநர்களிடம் கற்றுக்கொண்டது என்ன?

ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். புதிய இயக்குநர்களிடம் பணியாற்றும்போது அவர்களுடைய திரைக்கதை அமைப்பு புதிதாக இருக்கும். ‘திருடன் போலீஸ்’ படத்தின் கதை கேட்கும் போதே க்ளைமாக்ஸ் காட்சி 17 நிமிடங்கள் இருக்கிறதே என்று கவலைப்பட்டேன். அதுவும் சண்டை இல்லை, காமெடியாக இருக்கிறது; இது வேலைக்கு ஆகாது என்று சொன்னேன். ஆனால் திரையரங்கில் மக்கள் ரசித்தார்கள், அங்கு நான் தோற்றுவிட்டேன். அப்போதுதான் இயக்குநர் கார்த்திக்கிடம் கற்றுக்கொண்டேன். வசந்த பாலன் சார் படங்கள் பார்த்தீர்கள் என்றால் கதை எழுதி படப்பிடிப்பு முடிந்தவுடன் எடிட்டிங்கில் நிறைய மாற்றுவார்.

உங்களுக்கு இயக்குநர் ஆசை இருக்கிறதா?

அனைவருக்குமே அந்த ஆசை இருக்கும். நானும் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக வேண்டுமென்று கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அவர் இன்னும் சேர்த்துக்கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x