Last Updated : 09 Sep, 2016 10:55 AM

 

Published : 09 Sep 2016 10:55 AM
Last Updated : 09 Sep 2016 10:55 AM

திரைப் பார்வை அகீரா (இந்தி) - பெண்மையின் சீற்றம்

சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான ‘ மௌனகுரு’ படத்தை நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு, ‘அகீரா’வாக இந்தியில் மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

ஜோத்புரில் வசிக்கும் பள்ளிச் செல்லும் சிறுமி அகீராவின் (சோனாக்ஷி சின்ஹா) வாழ்க்கை ஓர் ஆசிட் வீச்சு சம்பவத்தை நேரில் பார்த்த பிறகு மாறுகிறது. அவளுடைய அப்பா (அதுல் குல்கர்ணி) தன் மகள் நடனம் தெரிந்துகொள்வதைவிட கராத்தே தெரிந்துகொள்வது முக்கியம் என்று நினைக்கிறார். கராத்தே கற்றுக்கொண்ட பிறகு, அகீராவின் தன்னம்பிக்கை அதிகமாகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் ஒரு சண்டையில் மூன்று ஆண்டுகள் சிறார் சிறைக்குச் செல்ல நேர்கிறது.

பதினான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, அண்ணனுடன் வசிப்பதற்காக மும்பைக்கு வருகிறாள். கல்லூரியில் அமைதியாகப் படிப்பைத் தொடர வேண்டும் என்று நினைக்கும் அகீராவைத் தேடி வருகின்றன பிரச்சினைகள். இதற்கிடையில் ஊழல் அதிகாரியான கோவிந்த் ரானே (அனுராக் கஷ்யப்) பெரும் பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒரு விபத்தை மூன்று காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து மூடிமறைக்கிறார். எதிர்பாராத விதமாக கோவிந்தின் திட்டத்தில் வசமாகச் சிக்கிக்கொள்கிறார் அகீரா. இந்த வழக்கைக் கண்டுபிடிப்பதற்காக வருகிறார் ராபியா சுல்தான் (கோங்கணா சென்). அகீராவால் இந்தப் பிரச்சினையில் இருந்து வெளிவர முடிந்ததா இல்லையா என்பதுதான் படம்.

பாலிவுட்டில் ‘கஜினி’, ‘ஹாலிடே’ படங்களைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படம் பல அம்சங்களில் கவனத்தை ஈர்க்கிறது. சாந்தகுமாருடன் இணைந்து முருகதாஸ் எழுதியிருக்கும் திரைக்கதையை முக்கியமானதாகச் சொல்லலாம். கதாநாயகனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருந்த ஒரு படத்தை கதாநாயகிக்கானதாக மாற்றி அமைத்திருப்பது துணிச்சலான முயற்சி. அத்துடன், கதாபாத்திரங்களின் தேர்வையும் படத்தின் பலமாகச் சொல்லலாம். ஆர். டி. ராஜசேகரின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

அகீராவாக சோனாக்ஷி சின்ஹா நடிப்பிலும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி அசத்தியிருக்கிறார். பாலிவுட்டில் ‘ஆக்‌ஷன் ஹீரோயினாக’ வலம்வருவதற்கான எல்லா சாத்தியங்களும் சோனாக்‌ஷியிடம் தெரிகின்றன. ஏசிபி கோவிந்த் ரானாவாக அனுராக் கஷ்யப்பும், ராபியாவாக கோங்கணாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

வீடியோ பதிவு திருடுபோவது போன்ற சில திருப்பங்கள் நம்பகத்தன்மையுடன் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. காட்டிலிருந்து தப்பிப்பது போன்ற திருப்பங்கள் பலவீனமாக உள்ளன. மனநல விடுதியிலிருந்து அகீரா தப்பிப்பதை இன்னும் நம்பகத்தன்மையுடன் காட்டியிருக்கலாம். அதன் பிறகான அவரது நடவடிக்கைகள் எல்லாமே யதார்த்தத்திலிருந்து விலகியே இருக்கின்றன.

கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் அகீரா மட்டும் தனியாக அமர்ந்திருக்கும் காட்சி, அகீராவின் அண்ணி அவளிடம் நடந்துகொள்ளும் விதம், ‘என்னை நானே சிலுவையில் அறைந்துகொண்டேன்’ என்று அகீரா சொல்வது போன்ற வழக்கமான சித்தரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். இவை படத்தின் இயல்பான போக்கைத் தடுக்கின்றன. கல்லூரியில் நடக்கும் சண்டை கதையோடு ஒட்டாமல் அகீராவின் சண்டைத் திறனைக் காட்டுவதற்காகவே சேர்க்கப்பட்டதாகத் தோன்றுகிறது. காவல் துறையினர் பற்றிய சித்தரிப்பும் புலனாய்வும் கச்சிதம்.

சிறைவாசம் என்பது ஒரு தனிநபரின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கங்களையும், அதிகார மமதை கொண்ட காவல் துறை அதிகாரிகளின் பேராசையால் பாதிக்கப்படும் அப்பாவிகளின் வாழ்வையும் விறுவிறுப்பான முறையில் சொல்ல முயல்கிறது ‘அகீரா’. அழுத்தமான காட்சிகளும் நடிப்பும் அதைப் பெருமளவு வெற்றிகரமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்துகின்றன. ஆக்‌ஷன் திரில்லர்’ படத்துக்கென்று ஆகிவந்த சில அம்சங்களைத் தவிர்த்திருந்தால், ‘அகீரா’ இன்னும்கூட வலுவான, இயல்பான சினிமாவாகத் திரையில் விரிந்திருக்கும். எனினும் விறுவிறுப்பில் குறைவைக்காத இந்த ‘அகீரா’ பெண்மையின் கம்பீரத்துடன் கவர்கிறாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x