Last Updated : 18 Nov, 2014 10:23 AM

 

Published : 18 Nov 2014 10:23 AM
Last Updated : 18 Nov 2014 10:23 AM

வெட்டிவேரு வாசம் 10 - எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?

பெருந்துறையில் பணிபுரிந்தபோது, வங்கி வாடிக்கையாளராக ரவிகுமார் பழக்கமானார். ஸ்டேஷனரி அயிட்டங்கள், வாசனை திரவியங்கள், லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ், வளையல்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, இதர இதர… விற்பனை செய்யும் ஃபேன்சி ஸ்டோர் வைத்திருந்தார்.

ரவிகுமார் எப்போதும் நேர்த்தியாக பேன்ட், சட்டை அணிந்து, அப்போது தான் பறிக்கப்பட்ட வாச மலரைப் போல் சென்ட் வாசத்துடன் தோற்றம் அளிப்பார்.

பெருந்துறையில் பிரதி ஞாயிறு சந்தை கூடும். கடையில் இளம் பெண்களின் கூட்டம் மிதிபடும். கண்ணாடிக் கோப்பையில் கோலிக்குண்டுகளை உருட்டினாற் போன்ற சிரிப்பு, பவுடர் வாசம், வளையல், கொலுசுச் சத்தம்.. அடடாடா.. கடையே கோபிகையரின் பிருந்தாவனமாக இருக்கும்.

கடையில் ஏதாவது ஓர் அயிட்டம் குறைந்தாலும் ரவிகுமார் கடைப் பையனிடம் குடோனில் இருந்து எடுத்து வரச் சொல்லித் துரத்துவார். கடைக்கு அருகிலேயே குடோன். ரக வாரியாக அத்தனை சரக்குகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பொது விடுமுறை தினங்களில் நண்பர்களுக்குக் காலைச் சிற்றுண்டியே அவர் வீட்டில்தான். ரவிகுமாரின் மனைவி பேபி அக்கா கையால் கொட்டமுத்து இட்லி. வெந்தய தோசை. சட்னி. சோம்பு அரைத்துவிட்ட குழம்பு. அகலமான சிரிப்புடன் ஆசையாகப் பரிமாறுவார்.

மதியச் சாப்பாடு வரை முன் அறையில் சீட்டுக் கச்சேரி. பேபி அக்காதான் முதன்முதலில் கொள்ளுக் குழம்பையும், சீரக வாசனையுடன் கோதுமை ரவை உப்புமாவையும் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

மாலை 4 மணிக்கு டிராவல்ஸ் காரில் ஈரோடு பயணம். ஹோட்டலில் பஜ்ஜி, காபி. திரைப்படம். அப்புறம் இரவுக் கடையில் பியர், பிராந்தி, ஆம்லேட், பரோட்டா, குழம்பு. எல்லாச் செலவும் ரவிகுமாருடையதுதான்.

அவர் வாழ்ந்த ஆனந்த வாழ்க்கையின் மீது யார் கண்பட்டதோ… தெரியவில்லை.

ஒரு நாள் இரவு 12 மணிக்கு, கடைப் பையன் என் அறைக் கதவைத் தட்டி, "சீனாபுரத்துல புளியமரத்து மேல அண்ணன் பைக் மோதி..." என்று திகிலோடு ஆரம்பித்தான். முன் நெற்றியில் ரத்தம் வழிய மயங்கிக் கிடந்த ரவிகுமாரை ஈரோடில் அவருக்குத் தெரிந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். 20 ஆயிரம் பில். பேபி அக்கா கழுத்து நகையைக் கழற்றிக் கொடுத்தார்.

அடுத்த மாதத்தில் ஓர் இரவு. ரவிகுமார் வீட்டில் திருட்டு போனது. யார் வீட்டுக் கல்யாணத்துக்குப் போவதற்காகவோ லாக்கரில் இருந்து எடுத்திருந்த பச்சை, சிவப்பு, வெள்ளை, நீலம் என்று கற்கள் பதிக்கப்பட்ட ஒரு அட்டகாசமான நெக்லஸ். கூடவே, வெள்ளித் தட்டுகள், 3 ஆயிரம் ரூபாய் என்று திருட்டு போனவற்றின் பட்டியல் நீண்டது.

இவற்றை எல்லாம் மிஞ்சிய இன்னொரு கோரம் அடுத்த மாதமே நடந்தது. மதியச் சாப்பாட்டுக்காக மெஸ்ஸுக்குப் போய்க் கொண்டிருந்தேன். ரவிகுமாரின் குடோனில் இருந்து தீ நாக்குகள் மேலெழுந்து கொண்டிருந்தன. தெரு எங்கும் வெப்பக் கரும்புகை. கூட்டத்தில் யார் யாரோ தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தார்கள். ரவிகுமாரோ, சரக்குகளை மீட்பதற்காக குடோனை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தார். அவரை ஐந்தாறு ஆட்கள் அமுக்கிப் பிடித்திருந்தார்கள். ரவிகுமார் மயங்கினார். தீயணைப்பு வண்டி வருவதற்குள் குடோன் மொத்தமும் எரிந்து சாம்பலாகிவிட்டது.

சிகிச்சைக்குப் பிறகு ரவிகுமார் வீடு திரும்பினார். சிரித்துப் பேசினாலும் பழைய உற்சாகம் மிஸ்ஸிங்.

பிற்பாடு, எனக்குச் சென்னைக்கு மாற்றலாகிவிட்டது.

அடுத்த வருடம் ரவிகுமார் மஞ்சள் காமாலை தாக்கி இறந்து போனார். வங்கி வேலையாக பரோடா சென்றிருந்ததால், 16 நாட்கள் கழித்துத்தான் பெருந்துறை செல்ல முடிந்தது. பேபி அக்கா அதே சிரிப்புடன் வரவேற்றார்.

முன் அறையில் ரவிகுமாரின் படம். வெள்ளைச் சிரிப்பு, குங்குமப் பொட்டு. சந்தன மாலை!

“பாவம் உங்களுக்குத்தான் ரொம்பக் கஷ்டம்...” என்று ஆறுதலாக ஆரம்பித்தேன்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சந்தோஷமா இருக்கேன். நீங்க பாத்த ரவிகுமார் வேற. எனக்குத் தெரிஞ்ச ரவிகுமார் வேற. எங்கய்யா போட்ட நகையைப் புடுங்கறதுக்காக சீனாபுரத்தில பைக் ஆக்ஸிடென்ட் ஆன மாதிரி ஒரு நாடகம். புள்ள கல்யாணத்துக்கு எங்கய்யா செஞ்ச நெக்லஸை அடிக்க, திருட்டுப் போன மாதிரி ஒரு நாடகம். எல்லாத்துக்கும் மேல, காலி குடோனுக்கு நெருப்பு வெச்சி.. காப்பீட்டு பணம் 10 லட்சம் வந்தது. அந்தப் பணத்தை வெச்சிக்கிட்டு அவரு போடாத ஆட்டம் இல்ல…”

“என்னக்கா.. அண்ணனைப் பத்தி இப்டில்லாம் சொல்றீங்க..? அவ்ளவு பணத்தை அப்படி என்னதான் பண்ணாரு?” என்று திகைப்புடன் கேட்டேன்.

“அவருக்கு நான் ஒருத்தி போறலை. இன்னும் நாலஞ்சு வேண்டியிருந்தது. அப்புறம் குடி. செலவுக்கா பஞ்சம்? மஞ்சக் காமாலை வந்த பிற்பாடு குடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க.. கேட்டாத்தானே?” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

‘கோ’ திரைப்படத்தில் வசந்தனுக்கு (அஜ்மல்) முதல்வர் நாற்காலிதான் குறி. ஆளுங்கட்சியையும், எதிர்க்கட்சியையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தேர்தலில் வென்றாக வேண்டும்.

அரசியல் ரவுடிகள் அவனை ரத்தம் பீறிடத் துரத்தித் துரத்தி அடிப்பார்கள். சேரியில் குடிசை எரியும். வசந்தன் நெருப்பில் பாய்ந்து குழந்தையைத் தீயிலிருந்து காப்பாற்றுவான். அவன் பிரச்சாரம் செய்யும் மேடையில் குண்டு வெடிக்கும்.

வசந்தன் தேர்தலில் ஜெயிப்பான். அப்புறம்தான் அவனது உண்மை முகம் தெரியும். ஆள் வைத்து அடித்துக் கொண்டதும் அவனே. குடிசைக்கு நெருப்பு வைக்க ஏற்பாடு செய்ததும் அவனே. மேடையில் குண்டு வெடிக்க வைத்ததும் அவனே - ரவிகுமாரைப் போல!

- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x