Last Updated : 24 Oct, 2014 10:48 AM

 

Published : 24 Oct 2014 10:48 AM
Last Updated : 24 Oct 2014 10:48 AM

கிரேசியைக் கேளுங்கள் 5 - கவிஞர் வாலி கொடுத்த பட்டம்

இரா.முருகன், சென்னை.

‘போணி’ன்னா என்ன சார்?

இந்த வாரம் கேள்வியை ‘போணி’ பண்ணியிருப்பது எனது நண்பர் கம் எழுத்தாளர் இரா.முருகன்தான் என்று நம்பி, என் பதில் கடையை விரிக்கிறேன். ‘பூ, கீரை, பழம் விற்கும் சின்னச் சின்ன வியாபாரிகளிடம் பேரம் பேசாதே…’ என்று சாஸ்திரம் சொல்கிறது. காலையில் அவர்கள் கடையைத் திறக்கும்போதே சென்று கடன் சொல்லாமல், கையில் காசை எடுத்துக்கொண்டு ‘போ… நீ’ என்பதுதான் ‘போணி’ என்றாகிவிட்டது என்பது என் ஊகம்.

சுமதி ராஜன், மடுவன்கரை.

பஜ்ஜி தெரியும்... அது என்ன சொஜ்ஜி?

பெண் பார்க்கச் செல்லும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கொட்டிக்கொள்ளும் பலகாரம்தான் ‘சொஜ்ஜியும் பஜ்ஜியும்’. தமிழில் நாம் ‘ ரவா’ (ரவை) என்று சொல்கிறோமல்லவா, அதற்கு இந்தியில் ‘சூஜி’ என்று பெயர். ரவா கேசரிதான் ‘சொஜ்ஜி’.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அந்த நாளில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ‘சொஜ்ஜி - பஜ்ஜி’ சாப்பிட்டார்கள். Marriages Are Made In மடிக்கணினி என்றாகி மேட்ரிமோனியல் வெப்சைட்டுகளிலும், ஸ்கைப்பிலும் திருமணம் நிச்சயிக்கப்படும் இந்த நாளில் மாப்பிள்ளையும் பெண்ணும் பீட்ஸா, பர்கர் சாப்பிடுகிறார்கள். இன்று பஜ்ஜிக்கும் சொஜ்ஜிக்கும் வேலையே இல்லை!

எல்.மகாதேவன், மயிலாடுதுறை.

உங்களுக்குப் பிடித்த சினிமா நகைச்சுவை எழுத்தாளர்கள் 10 பேரை பட்டியல் போடுங்களேன்?

1. ‘கல்யாணப் பரிசு’ மன்னார் அண்ட் கம்பெனி கோபு.

2.‘காதலிக்க நேரமில்லை’ ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் கோபு.

3. ‘காசேதான் கடவுளடா’ டீக்கடை சாமியார் கோபு

4. ‘கலாட்டா கல்யாணம்’ கோபு

5. ‘வீட்டுக்கு வீடு’ கோபு

6. ‘சுமதி என் சுந்தரி’ கோபு

7. ‘ஊட்டிவரை உறவு’ கோபு

8. ‘உத்தரவின்றி உள்ளே வா’ கோபு

9. ‘பாட்டிச் சொல்லைத் தட்டாதே’ கோபு

10. சடகோபன் என்கிற சித்ராலயா கோபு.

- இப்படி நகைச்சுவை தசாவதாரமும் கோபுதான். பெருமாள் ஆலயத்தில் தீர்த்தம் தந்துவிட்டு குருக்கள் ‘சடாரி’ என்னும் ‘சடகோபத்தை’ தலையில் வைப்பார். சித்ராலயாவின் குருக்கள் இயக்குநர் ஸ்ரீதர் வைத்த ‘கோபு’ என்கிற சடகோபரை, என் தலையில் நானே வைத்துக் கொண்டதால்தான் நகைச்சுவையில் ஓரளவு நான் தேறியிருக்கேன்.

ஆதி.கேசவன், திருப்பூர்.

‘காதலித்தவளையே கல்யாணம்

செய்துகொள்ள வேண்டிய

கட்டாயம் உண்டாகிவிட்டது

ஆம்... உண்டாகிவிட்டது!’

- இதுதான் புதுக்கவிதை என்கிறான் என் நண்பன். ‘வெண்பா’ எழுதும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

‘உண்டானாலும் குண்டானாலும் கல்யாணம் செய்து கொண்டவளையே காதலிப்பதுதான் மரபுக் கவிதை!

கே.மகா, சென்னை-90.

உங்களுக்குப் பிடித்த நான்கு கடி ஜோக்குகளைச் சொல்லுங்களேன்?

நாய் கடி பட்டவன்: ‘‘டாக்டர்… என்னை நாலு நாய் கடிச்சுடுச்சி!’’

டாக்டர்: ‘‘ஏம்பா ஒரு நாய் கடிச்சாலே தொப்புளைச் சுத்தி 16 ஊசி போடணும். நாலு நாய் கடிக்கு 64 ஊசி போட்டா… இன்னொரு தொப்புளே வந்துரும், பரவாயில்லையா?’’

நாய் கடி பட்டவன்: ‘‘பரவாயில்ல டாக்டர்! பழைய தொப்புள்ள பம்பரம் விடலாம், புதுசுல கோலி விளையாடலாம்ல!’’

கி.அரவிந்தன், கோயம்புத்தூர்-8.

சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம், சர்க்கரை சாதம் போன்றவற்றில் இருந்துதான் பிரசாதம் என்கிற பெயர் வந்தது என்கிறார் ஒருவர். உங்கள் தீர்ப்பு என்ன?

அதிதி தேவோ பவ; அதாவது ‘ஐயமிட்டு உண்’ என்பது ஆன்றோர் வாக்கு! இதன்படி பார்த்தால் நாம் வல்லினமாக இல்லாமல் மென்மையான மெல்லினமாக பிறருக்கு அளித்துவிட்டு சாப்பிடும் சாதம்தான் ‘பிரசாதம்’. சன்மானமாக பத்திரிகை களில் இருந்து எழுத்தாளருக்கு வருவது ‘Pressசாதம்’.

எஸ்.தேன்மொழி, கோயம்புத்தூர்.

கவிஞர் வாலி உங்களுக்கு ரொம்பவும் நெருக்கம் என்று கேள்விபட்டதனால்… இந்தக் கேள்வி. வாலியைப் பற்றி சொல்லுங்களேன்?

என் சிறிய அனுபவத்தில் சொல்கிறேன்: கவிஞர் வாலி ஒரு ‘சினிமா சச்சின் டெண்டுல்கர்’! Full Length Delivery Bowl செய்தால் சச்சின் டெண்டுல்கர் Front Foot போய்… அந்த பந்தை ஃபோரோ , சிக்ஸரோ விளாசுவார். ஒரு இயக்குநர் பாடலின் சூழலை சொல்லி முடிப்பதற்குள்… வாலி பல்லவியை முடித்து சரணத்துக்குத் தாவியிருப்பார். சச்சின் Half VOLLEY. இவர் Full வாலி. பழகியவர்களுக்குத் தெரியும் இவருடைய பாட்டு வரிகளில் மட்டுமல்ல; பேச்சிலும் இவரிடம் ஒரு கவர்ச்சி உண்டு.

வாலியிடம் என்னுடைய ‘கண்ணன் அனுபூதி’ வெண்பா தொகுப்பைக் கொடுத்தேன். மறு நாளே அந்த வசிஷ்டர் தனது வாயால் ‘வெண்பா ரிஷி’ என்கிற பட்டத்தை எனக்கு அளித்தார்.

வாலிக்காக நான் எழுதிய இரங்கற்பா… அல்ல இது. ஏற்றப்பா:

‘தூளியில்லா இல்லமும் ஜாலியில்லா இல்லறமும்

வேலியில்லா தோட்டமும் வீணாமே - வாலியில்லா

வெள்ளித் திரையுலகம் வேடக் குறத்திமகள்

வள்ளியில்லா தென்பழனி வெற்பு.’

எனக்காக வாலி எழுதியப் பா:

‘கண்ணன் மேல்; ராகம்

கடந்த ரமணன்மேல்

வண்ணத் தமிழ்வெண்பா

வார்க்கின்றான் எண்ணத்

தராசிலவன் சீரைத்

தமியேன் நிறுத்தேன்

கிரேசிமோகன் ஞானக்கிடங்கு’



- கேட்போம்…
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள - crazymohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x