Published : 31 Mar 2017 10:43 AM
Last Updated : 31 Mar 2017 10:43 AM
“ஒரு படத்தின் ஒரு கதாபாத்திரத்தை மட்டும் வைத்துத் தனியாக எடுக்கப்படும் ‘ஸ்பின் ஆஃப்’ படங்கள் ஹாலிவுட்டில் அதிகம். அந்த வகையில் இங்கே 'நான்தான் ஷபானா' உருவாகியுள்ளது” என்று தனக்கேயுரிய வெள்ளாவிச் சிரிப்புடன் தொடங்கினார் தப்ஸி.
'நான்தான் ஷபானா' படத்தில் சண்டை எல்லாம் போட்டுள்ளீர்களே?
பயிற்சியின்போதுதான் அதிக சிரமம் இருந்தது, படப்பிடிப்பின்போது திடமாக இருந்தேன். என்னால் கையாள முடிந்தது. இந்தக் கதைக்கு உடல் வலிமையாக இருக்க வேண்டும். அதற்குத் தயாராக இருந்தேன். காயம் எதுவும் ஏற்படவில்லை. நம்பக்கூடிய வகையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பெண்களை மையப்படுத்தி வரும் கதைகள் குறைந்துவிட்டதே… நடிகர்களின் ஆதிக்கம்தான் காரணம்?
சினிமா ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் ஒரு கதையைச் சொல்லி, தயாரிப்பாளர் பணம் போட்டு, ஊடகங்கள் அதை நல்ல படம் என மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். நான் படம் நடிக்கத் தொடங்கியபோது அப்படிப்பட்ட படங்கள் நிறைய வந்திருக்கவில்லை. தற்போது பாலிவுட்டில் அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
அதேநேரம் அமிதாப் பச்சன் போல ஒருவர் நடிக்கவில்லையென்றால் ‘பிங்க்' திரைப்படம் இவ்வளவு பேரைச் சென்றடைந்திருக்காது. அக்ஷய் குமார் இல்லையென்றால் ‘பேபி' பெரிதாகப் பேசப்பட்டிருக்காது. இப்போது ஆமிர்கான் ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ என ஒரு சிறுமியை மையப்படுத்திய திரைப்படம் தயாரிக்கிறார். அதில் சிறிய பாத்திரத்தில் நடித்துவருகிறார். பெரிய நடிகர்கள் இந்த மாதிரியான மாற்றத்துக்கு உதவ முன்வருகின்றனர்.
'பிங்க்' படத்துக்குப் பிறகு கதாபாத்திரங்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?
அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்படி வெவ்வேறான படங்கள் வந்தது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நான் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். அது மட்டும்தான் என் கையில் இருக்கிறது. 'பேபி' படத்துக்குப் பிறகு வந்த ஆக்ஷன் பட வாய்ப்புகளை மறுத்துவிட்டேன். ஒரே மாதிரியான படத்தில் நடித்தால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த முடியாது.
தமிழில் தற்போது உங்களைக் காண முடிவதில்லையே?
தமிழில் சரியான நேரத்தில் சரியான வாய்ப்புகள் வருவதில்லை. கடைசி நிமிடத்தில் தேதிகள் கேட்டால் என்னால் ஒதுக்க முடியாது. இப்போது சில கதைகள் கேட்டுவருகிறேன். பார்க்கலாம்.
மொழி ஒரு பிரச்சினை என எடுத்துக் கொள்ளலாமா?
மொழி ஒரு பிரச்சினை என்பது தெரியும். ஆனால் தெலுங்கு கற்றுக் கொண்டு பேசும்போது என்னால் தமிழும் கற்றுக்கொண்டு பேச முடியும். அதற்குத் தொடர்ந்து அந்த மொழியில் நடிக்க வேண்டும். நான் பஞ்சாபியாக இருந்தாலும் அந்த மொழிப் படங்களில் நடிக்கவில்லை. சீக்கிய மொழி எனக்குத் தெரியாது. ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் தேவை என்பதால், மலையாளம், கன்னடத்தில் நல்ல படங்கள் வந்தாலும் நான் மறுத்து விடுகிறேன்.
இனிமேல் மசாலா படங்களில் நடிக்க மாட்டீர்களா?
சுவாரசியமான கதாபாத்திரம் என்றால் மசாலா படத்தில் நடிப்பேன். 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சொல்லுங்கள், பரவாயில்லை. அது நன்றாக இருந்தால் போதும். என் கதாபாத்திரம் இல்லையென்றால் படம் முழுமையடையாது என்பது போல இருக்க வேண்டும். திறமையான இயக்குநராக இருக்க வேண்டும்.
ஒரு படத்துக்கு அல்லது கதாபாத்தி ரத்துக்கு தேர்வு வைத்துத் தேர்ந்தெடுக்கும் முறையை ஏற்றுக் கொள்கிறீர்களா?
என்னை நல்ல நடிகையாக ஒப்புக்கொண்டுள்ளனர். நடிகர் தேர்வு எனத் தனியாக யாரும் கூப்பிடுவதில்லை. நான் நடிகர் தேர்வில் சரியாக நடிக்க மாட்டேன். இதுவரை நான் கலந்துகொண்ட நடிகர் தேர்வு எதிலும் தேர்வானதில்லை. ஏனென்றால் நான் பயிற்சி பெற்ற நடிகை அல்ல. இயக்குநர் சொல்லித்தராமல், சுற்றி நடிகர்கள் இல்லாமல் எனக்கு நடிக்க வராது.
உங்களுடைய நண்பர் தனுஷ் இயக்குநராகிவிட்டார். அதைப் பற்றி...
இப்போதும் வெற்றி மாறன், தனுஷ் ஆகியோருடன் நட்பில் உள்ளேன். ஒரு தேசிய விருதை வெல்ல வேண்டும் என்று வெற்றி மாறன் படத்தில் நடிக்க வேண்டும் எனக் கேட்டுவருகிறேன். அவர் வாய்ப்பு தருவார் என நினைக்கிறேன். இன்னும் ‘பவர் பாண்டி' ட்ரெய்லரைப் பார்க்கவில்லை. தனுஷுக்கு இயக்க வேண்டும் என்ற ஆசை எவ்வளவு இருந்தது என்பது எனக்குத் தெரியும். தன்னை இயக்குநராகவும் அவர் அடையாளம் கண்டுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT