Last Updated : 24 Jan, 2014 12:00 AM

 

Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

வெள்ளை வேன்
கதைகள்

இலங்கையில் அப்பா, மகன், கணவன், சகோதரன் எனத் தங்கள் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்கள் ஏராளம். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர்கள், வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாகப் போராளிகளாக ஆக்கப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக ராணுவத்திடம் சரணடைந்தவர்கள், பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மௌல்விகள், கலைஞர்கள். கேள்வி கேட்பவர்கள் என எண்ணற்றவர் காணாமல் போக்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் அன்பானவர்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாமல் பீதியிலும் அவநம்பிக்கையிலும் வாழ்நாளைக் கழிக்கும் பெண்களின் சோகங்கள் விவரிக்க முடியாதவை.
ஒரு கட்டத்தில் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அவர்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்து போராடத் துணிந்துவிட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புவுக்கும் விஜயம் செய்தபோது அவர் முன்னால் ஒரு மிகப் பெரிய ஊர்வலத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அதில் பங்குபெற்ற குடும்பங்களைத் தனித்தனியாகப் பேட்டி கண்டு அந்த விவரிப்பில் உருவானதுதான் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ‘வெள்ளை வேன் கதைகள்’ என்னும் ஆவணப்படம்.


இரானபாலை பகுதியைச் சேர்ந்த ஜெயா லங்காரத்னம் என்பவரின் போராளி மகன் ராணுவத்திடம் சரணடைந்த பிறகு இன்னும் வீடு திரும்பவில்லை. திரிகோணமலையில் லயா என்பவரின் தந்தை விசாரணைக்காக நடு இரவில் வீட்டிலிருந்து வெள்ளை வேனில் அழைத்துச் செல்லப்பட்டவர். புத்தாளம் பகுதியில் ரசியா என்பவரின் கணவரான ஷகீல், காணாமல் போயிருக்கிறார். இவர் ஒரு மௌல்வி. கிளிநொச்சியில் சந்திராவின் இளம் வயது மகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயிற்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின் காணாமல் போனவர். மன்னாரில் புலிகள் இயக்கப் போராளியான வெற்றிச்செல்வி தன்னுடைய சக போராளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஹம்பன்தோடாவில் 1980களில் ஜே.வி.பி. நடத்திய கொரில்லா கலகத்தில் காணாமல்போன தன் தந்தையின் அரசியல் அறிவை அஷீலா பகிர்ந்துகொள்கிறார். அரசு பயங்கரவாதத்தின் சின்னமான இந்த வெள்ளை வேன் கொடூரம் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது.


ராணுவக் கண்காணிப்புகளைக் கடந்து பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று அவர்களுடனேயே தங்கியிருந்து அவர்களுடைய சூழல் பின்புலத்துடன் இது படமாக்கப்பட்டுள்ளது. இழந்து போன உறவுகளின் நினைவுகளுடன் கடுமையான வாழ்க்கை யதார்த்தத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கும் இவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இழப்பின் அவலங்கள் இனி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளன.


வெள்ளை வேன் கடத்தல்களில் பாதிக்கப்பட்டவர்களின் எஞ்சியிருக்கும் உறவினர்களின் அவலக் குரலை இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது. இலங்கையின் போர்க்குற்ற விசாரணை கோரிக்கைக்கான ஆதாரங்களில் ஒன்றாக இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ளலாம். காரணம் இந்தப் படம் நம்பகத்தன்மையுடனும் ஒலி அதிர்வுகளுடனும் மனதைப் பாதிக்கும் விதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. சானல் 4இல் இதன் ஒரு பகுதி காட்டப்பட்டிருக்கும் நிலையில், வரும் மார்ச்சில் நடைபெற இருக்கும் ஜெனிவா சந்திப்பில் இது திரையிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x