Last Updated : 07 Mar, 2014 12:00 AM

 

Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM

குறும்பட இயக்குநர்களின் கவனத்திற்கு...

குறும்பட மோகம் கொடிகட்டிப் பறக்கிறது தமிழ்நாட்டில்! டிஜிட்டல் கேமராக்கள் குறைந்த விலையில் / வாடகையில் கிடைக்க ஆரம்பித்த பின் ஒரு குறும்படம் எடுப்பது இப்போது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் குறும்படம் எடுப்பதை காதலிப்பதுபோல ஒரு தவமாய் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் குறும்படங்கள் வெளியிடும் முயற்சிகள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன. இலவசக் காணொளி வலைதளமான யூட்யூப் 2009-10இல் வந்த பின், எண்ணற்ற திறமைகள் வெளி உலகிற்கு அறிமுகம் ஆகும் வாய்ப்பைத் தந்துள்ளது. ஒரு குறும்படம் எடுப்பது, செலவுபிடிக்கும் சமாச்சாரம் என்ற நிலை மாறி, டிஜிட்டல் கேமராக்கள் மூலம், இன்று ரூபாய் 5,000 முதல் 10,000 மூலமே ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.

இயக்குநர் மீரா கதிரவன் 2009இல் அவள் பெயர் தமிழரசி என்ற குறும்படத்தை என்னிடம் காட்டினார். அது பெரிய திரைப்படமாக 2010இல் வெளிவந்தது. அன்றைக்கு யூடுயூப் இல்லாத காரணத்தால் மீரா கதிரவன், அந்தக் குறும்படத்தைக் குறுந்தகடாக எடுத்துவந்து தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டார். இன்று நிலைமை வேறு. திறமை உள்ள அனைவரும் தங்கள் குறும்படத்தை யூட்யூபில் வெளியீட்டு, அதில் நல்ல வரவேற்பு கிடைக்கும்போது, அதைப் பெரிய படமாக எடுக்கத் தயாரிப்பாளர்களை அணுகுகிறார்கள்.

2012 முதல், தமிழ் சினிமாவில், நல்ல குறும்படம் எடுத்தவர்களுக்குப் பெரும்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை. பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி’ யூட்யூபில் பெரும் வரவேற்பு பெற்று, அதுவே ஒரு பெரும்படமாக வெளிவந்து வெற்றிகண்டது. பாலாஜி மோகனைத் தொடர்ந்து, குறும்படங்கள் எடுத்துப் பெயர் பெற்ற இயக்குநர்கள், கார்த்திக் சுப்பராஜ் (பீட்சா), பாலாஜி தரணிதரன் (நடுவுலே கொஞ்சம் பக்கத்தைக் காணோம்), நலன் குமரசாமி (சூது கவ்வும்) போன்றோரின் பெரும்பட வெற்றி, குறும்பட இயக்குநர்களுக்கு ஒரு உந்துதலைத் தந்துள்ளது.

சாதகமான இந்தச் சூழ்நிலை வெகு சீக்கிரமே எதிர்மறையானதாக மாறக்கூடிய நேரமும் வந்துகொண்டிருப்பது குறும்படம் எடுக்கும் அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயம். குறும்படம் எடுக்கும் அனைவரும், அந்த ஊடகத்தை ஒரு பெரும்படம் எடுக்க வாய்ப்பாக நினைக்கிறார்கள். பல குறும்படப் போட்டிகளில் நடுவராக இருந்து பல குறும்படங்களைப் பார்த்துவருபவன் என்பதால் என்னால் இதை அறிய முடிகிறது. சில குறும்படங்கள் எடுத்தவுடன், தன்னால் பெரிய படம் எடுக்க முடியும் என்ற அதீத நம்பிக்கை உடனே வந்து, அதற்கான வாய்ப்பைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் கவனத்தில் வைக்க வேண்டிய சில அம்சங்கள்.

1. 1990கள்வரை நாடகங்கள் பார்வையாளர்களிடம் ஒரு கதையைப் பரிசோதிக்கப் பயன்பட்டன. ஒரு நாடகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தபோது, அவை அப்படியே திரைப்படமாக எடுக்கப்பட்டன.

ஆனால் அத்தகைய நாடகங்கள் முன்னோட்டம் மட்டுமல்ல. முழுமையான திரைக்கதையைக் கொண்டவை. அதனால்தான், முழுமையான பல நல்ல நாடகங்கள் தமிழ் சினிமாவில் திரைப்படங்களாக மாறிப் பெரும் வெற்றி கண்டன. அனேக குறும்படங்கள் முழுமையான திரைக்கதை அல்ல. அவை அதிகபட்சம், ஒரு முன்னோட்டம் மட்டுமே.

2. குறும்படங்கள் எடுத்த அனுபவம் பெரிய படம் எடுக்க ஒரு பாஸ்போர்ட் அல்லது அறிமுக முகவரி மட்டுமே. பயணச் சீட்டுகள் அல்ல. பாஸ்போர்ட் இருந்தாலும், டிக்கெட் இல்லாமல் எப்படி வெளிநாடு பயணிக்க முடியாதோ, அது மாதிரி பெரிய படத்திற்கான திரைக்கதை இல்லாமல் திரைத்துறையில் பயணிக்க முடியாது. கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி தரணிதரன், நலன் குமரசாமி போன்றவர்களின் வெற்றி, அவர்களின் குறும்படங்கள் மூலம் காண்பித்த திறமை மற்றும் அனுபவத்தையும் தாண்டி, அவர்கள் உருவாக்கிய புதிய திரைக்கதைகள் அவர்களை வெற்றிகாணச் செய்தன.

3. அதிக பட்சம் 10 – 15 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தில் சொல்லப்பட்ட ஒரு சுவாரசியமான விஷயத்தை 120 முதல் 150 நிமிடம் ஓட வேண்டிய பெரிய படத்திற்குத் திரைக்கதையாக மாற்றுவது எளிதல்ல. தமிழ் சினிமாவில், இதுவரை, பாலாஜி மோகன் மட்டுமே (காதலில் சொதப்புவது எப்படி), ஒரு குறும்படத்தைப் பெரிய படமாக மாற்றி வெற்றிகண்டவர். கடந்த இரு வருடங்களில் அவ்வாறு முயற்சி செய்த மற்றவர்கள் வெற்றியைச் சுவைக்கவில்லை.

4. குறும்படங்களுக்கான இலக்கணங்கள் வேறு, பெரிய படங்களுக்கான இலக்கணங்கள் வேறு. ஒரு குறும்படம் தரும் சுதந்திரத்தை 130-150 நிமிடம் ஓடும் பெரிய படத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு குறும்படத்தை எடுத்து, அதை யூட்யூப் போன்ற ஊடகங்களின் மூலம் பிரபலப்படுத்துவது இன்று பெரிய சாதனை இல்லை. பெரிய படங்கள் எடுக்க இன்று கோடிகளில் பணம் தேவை. அதை மக்களிடம் கொண்டுசெல்ல மேலும் சில கோடிகள் தேவை. பல கோடிகள் தேவைப்படும் ஒரு பெரிய படத்தை இயக்க, வெற்றிப் படமாக்க, நல்ல அனுபவமும், வெகுஜன மக்களுக்குப் பிடித்த படமாக உருவாக்கக்கூடிய திறமையும் தேவை. அதைக் குறும்படங்கள் மூலம் மட்டுமே பெற முடியாது.

5. குறும்படங்களை அனுபவத்திற்காகவும், திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல சாதனமாகவும், நாளைய இயக்குநர்கள் உபயோகிக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்பட்ட குறும்படங்களில் நல்ல ஒரு பெரிய படம் உருவாகும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே, அவற்றைப் பெரிய படத்துக்குக்கான திரைக்கதையாக மாற்ற வேண்டும். 10 நிமிடத்திலேயே முடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை, 120-150 நிமிடங்களுக்கு நீட்டிக்கப் போராடுவது அனைவருக்கும் கஷ்டத்தில்தான் முடியும்.

6. எப்படியாவது காட்சிகளை அடுக்கி, ஒரு குறும்படத்தைப் பெரிய படமாக மாற்றும் முயற்சி வீணே. 10 நிமிடக் குறும்படத்தில், ஒரு தொடக்கம், ஒரு விஷயம், ஒரு முடிவு எனச் சொல்லப்பட்டால் போதும். ஆனால் ஒரு பெரிய படத்தில், 10-15 நிமிடங்களுக்கு ஒரு முறை திருப்பங்களை ஏற்படுத்தினால்தான் திரைக்கதை சுவாரசியமாகச் செல்லும்.

குறும்படங்கள் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை உருவாக்கிவருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் அவைகளை அறிமுகமாக மட்டும் எடுத்துக்கொண்டு, முடிந்தால் நல்ல இயக்குநர்களிடமும் பயிற்சி எடுத்து, புதிதாக வெகுஜன ரசனைக்கான திரைக்கதைகளை உருவாக்கும்போது, வாய்ப்பும் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது.

தொடர்புக்கு: dhananjayang@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x