Published : 01 Jul 2016 11:50 AM
Last Updated : 01 Jul 2016 11:50 AM

இருண்டு கிடக்கும் 13,000 கிராமங்கள்!- இயக்குநர் அருண் சிதம்பரம் பேட்டி

முதல் படத்திலேயே சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் அமெரிக்கப் பணியை உதறிவிட்டு, இந்தியாவுக்கு வந்து படம் இயக்கி, நாயகனாகவும் நடித்து சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்கிறார் இயக்குநர் அருண் சிதம்பரம். ஷாங்காய் திரைப்பட விழாவுக்குச் சென்று திரும்பியவரிடம் பேசியதிலிருந்து...

‘கனவு வாரியம்' படத்தின் கதைக்களம் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழ்நாட்டில் நிலவிய மின் தட்டுப்பாட்டை முன்வைத்து எடுக்கப்பட்ட படம்தான் ‘கனவு வாரியம்'. கிராமம் சார்ந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புதான் இந்தப் படத்தின் கதைக்களம். விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல, முழுவதும் ஜனரஞ்சகமாக இருக்கும். சென்னையை விட கிராமங்களில்தான் மின்வெட்டு அதிகம் என்பதால் கிராமத்தின் பின்னணியில் சொல்லியிருக்கிறேன்.

இந்தியாவில் சுமார் 13,000 கிராமங்கள் மின்சார வசதி இல்லாமல் இருக்கின்றன. மின்சாரத்தை நாம் அதிகமாக உற்பத்தி பண்ணினாலும், நம்மால் சேமிக்க முடியாது. மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் உலகத்திலேயே கிடையாது.

அதை யார் தற்போது கண்டுபிடிக்கிறார்களோ அவர்தான் உலகத்திலேயே பெரிய கோடீஸ்வரராக இருப்பார். இதற்கு என்ன பண்ணலாம் என்பதுதான் இந்தப் படம். இந்திய சினிமாவில் அறிவியலை ஜாலியாக யாரும் சொன்னதில்லை. அவ்வாறு கூறினால் மக்களுக்குப் பிடிக்கும் என்பது என் எண்ணம்.

சர்வதேச அளவில் விருதுகள் வென்றிருக்கிறீர்களா?

இதுவரை 6 சர்வதேச விருதுகளை இப்படம் வென்றிருக்கிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், ஆங் லீ, ஜார்ஜ் லூக்காஸ் போன்ற பெரிய இயக்குநர்கள் வென்ற ரெமி விருதை நான் வாங்கியிருக்கிறேன். இந்த ரெமி விருதை வாங்கியிருக்கும் முதல் தமிழ் இயக்குநர் நான். ரெமி விருதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற திரைப்படத்துக்குக் கொடுக்கப்படும் பிளாட்டினம் ரெமி விருது என் படத்துக்கு கிடைத்திருக்கிறது.

'Best Theatrical Feature Film' பிரிவில் இந்த விருதை வென்றிருக்கிறேன். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கல்லா மண்ணா' என்ற பாடலுக்காக ‘சிறந்த குழந்தைகள் பாடல்' என மற்றொரு ரெமி விருது வென்றிருக்கிறேன். இந்திய அரசாங்கம் நடத்தும் தேசிய அறிவியல் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் குழு விருதை ‘கனவு வாரியம்' வென்றிருக்கிறது.

நீங்கள் எழுதிய முதல் கதையே ‘கனவு வாரியம்'தானா?

இது நான் எழுதிய 4-வது கதை. எனக்குப் பத்தோடு பதினொன்றாக இருப்பதில் உடன்பாடு கிடையாது. நான் எது பண்ணினாலும், தனித்தன்மையாகத் தெரிய வேண்டும் என நினைப்பேன். அறிவியலை முன் வைத்து யாருமே படம் பண்ணியதில்லை.

அதை நாம் பண்ணி ஜெயித்தால் என்ன எனத் தோன்றியது. மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய படங்கள் தான் ஓடும். எந்தப் பிரச்சினை தொட்டால் மக்களிடையே நெருக்கமாக முடியும் என்று திட்டமிட்டு, இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் மின்வெட்டைக் கையில் எடுத்தேன்.

மின்சாரப் பின்னணியில் கதை பண்ணுவதற்கு என்ன படித்திருக்கிறீர்கள்?

உண்மையில் எனக்கு மின்சாரத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. அதற்கான தேடல் அதிகம், பல பேரிடம் பேசிக் கற்றுக்கொண்டேன். இதை மட்டுமே ஒன்றரை வருடங்கள் பண்ணினேன்.

அமெரிக்காவில் நல்ல சம்பாத்தியத்தில் இருந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஏன் சினிமா ஆசை?

என்னுடைய நோக்கம் பணம் சம்பாதிப்பது கிடையாது. பில் கேட்ஸின் நோக்கம் கம்ப்யூட்டருக்கு ஓ.எஸ். (OPERATING SYSTEM ) கண்டுபிடிப் பதாகத்தான் இருந்தது. அந்த வேலையை அவர் ஒழுங்காகச் செய்தார். அதற்குப் பலனாகப் பணம் வந்து கொட்டியது. நோக்கம் பணமாக அல்லாமல் லட்சியமாக இருந்தால் அனைத்துமே தானாக நடக்கும். அமெரிக்காவுக்குச் சென்று 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது.

விஜய் நடித்த ‘சச்சின்' மற்றும் ‘துப்பாக்கி' படங்களின் விளம்பர வாக்கியங்களை நான்தான் எழுதினேன். ‘சிவாஜி', ‘பீமா', ‘வாரணம் ஆயிரம்', ‘வில்லு', ‘ஏகன்', ‘விண்ணைத் தாண்டி வருவாயா' போன்ற பல படங்களை அமெரிக்காவில் விநியோகம் செய்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு எப்போதுமே ஈர்ப்பு இருந்தது. அதில் நிறைய எழுத வேண்டும் என நினைத்தேன். இயக்கம் என்பதெல்லாம் எனக்குத்தோன்றவில்லை.

யாரிடமும் நீங்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றவில்லை. இயக்கம் என்பது சவாலாக இருந்ததா?

படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளுமே சவால்தான். இக்கதையை எப்படிப் படமாக்கி மக்களிடம் கொண்டுசேர்க்கப் போகிறோம் என்பதில் சவால் இருந்தது. எங்கு சவால் இருக்கிறதோ அங்குதான் நம்மை நிரூபிக்க முடியும். நல்ல ஒரு அணி இருந்தால் எந்தக் கதையாக இருந்தாலும் சரியாக பண்ணிவிட முடியும் என்று நம்பினேன். ஏனென்றால் இப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே எப்படி இதை முதல் படமாக இயக்கினீர்கள் எனக் கேட்டார்கள்.

‘கல்லா மண்ணா' என்ற பாடலுக்காகவும் ரெமி விருது வென்றிருக்கிறீர்கள். அப்படி அப்பாடலில் என்ன ஸ்பெஷல்?

இந்தப் பாடலுக்காக மட்டுமே சுமார் 6 மாதங்கள் உழைத்திருக்கிறேன். கிராமிய விளையாட்டுக்களை வைத்து ஏன் ஒரு பாடல் பண்ணக் கூடாது என்று நினைத்தேன். தற்போது குழந்தைகள் எல்லாம் போனில் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். “கல்லா மண்ணா ஆடலாம்… நாடு புடிக்க நாடு புடிக்க ஓடலாம்… டயரு வண்டி ஒட்டியே வீடு போய்ச் சேரலாம்” இதுதான் அப்பாடலின் வரிகள். பாடல் வரிகள் முழுக்க கிராமிய விளையாட்டுகள்தான். இப்பாடலில் சுமார் 100 குழந்தைகளை நடிக்க வைத்திருக்கிறோம். இப்பாடலை எழுதுவதற்கு என் மகன் எழில்தான் தூண்டுகோலாக இருந்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x