Published : 16 Sep 2016 11:41 AM
Last Updated : 16 Sep 2016 11:41 AM
‘இருமுகன்' படத்தில் ஒளிப்பதிவுக்காகப் பாராட்டுகள் குவிந்துவரும் நேரத்தில் ‘நெருப்புடா' படத்தின் ஒளிப்பதிவுப் பணிகளை கவனித்துவருகிறார் ஆர்.டி. ராஜசேகர். அவரது ஒளிப்பதிவுப் பயணம் குறித்துப் பேசியதிலிருந்து…
உங்களுக்கும் கெளதம் மேனனுக்கும் எப்படி நட்பு உருவாகி, ஒளிப்பதிவாளராகப் பயணிக்கத் தொடங்கினீர்கள்?
ராஜீவ் மேனன் ‘மின்சார கனவு' படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் உதவி இயக்குநராக கெளதம் மேனன் வந்து சேர்ந்தார். அப்போதுதான் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பு உருவானது. அந்தப் படம் முடிவடையும்போது “நான் ஒரு கதை பண்ணியிருக்கிறேன். அதற்கு நீங்களே ஒளிப்பதிவு செய்யுங்கள்” என்றார். ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று என்னை எண்ண வைத்ததே கெளதம்தான். அப்படித்தான் ‘மின்னலே' தொடங்கினோம்.
‘காக்க காக்க' படத்தில் ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடலில் வண்டியின் டயரையும் காட்டியிருப்பீர்கள். அது யாருடைய யோசனை?
பயணம் செய்வது போன்ற பாடல் பண்ணலாம் என்று திட்டமிட்டோம். அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் இருக்கும் என யோசித்தோம். ஸ்டியரிங், ப்ரேக் போடலாம், கியர் மாற்றலாம், கண்ணாடியைப் பார்க்கலாம் என வரும்போது வண்டியின் டயரைக் காட்டும் யோசனை தோன்றியது. ஒரு டயர் திரும்புகிற ஷாட் எடுக்கலாமே என்று நினைத்தேன். நிறைய விஷயங்கள் அப்படத்தில் புதுமையாகவும் இயல்பாகவும் இருக்க வேண்டும் என்று பணியாற்றினோம்.
‘காக்க காக்க' படத்துக்குப் பிறகு, நீங்களும் கெளதம் மேனனும் ஏன் இணைந்து பணியாற்றவில்லை?
‘காக்க காக்க' படத்தைத் தெலுங்கில் பண்ணினோம். அதை முடித்துவிட்டு நான் ‘கஜினி' பண்ணப் போகும்போது, அவர் ‘வேட்டையாடு விளையாடு' தொடங்கினார். அதற்குப் பிறகு இருவரின் கமிட்மெண்டுகளும் இணைய விடாமல் போய்க்கொண்டே இருந்தன. எப்போதுமே வாரத்துக்கு ஒருமுறை பேசிக்கொள்வோம். சமீபத்தில் பேசும்போது கூட, மறுபடியும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று பேசியிருக்கிறோம். விரைவில் அறிவிப்பு இருக்கும்.
உங்கள் குருநாதர் ராஜீவ் மேனனிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
காலையில் சூரியன் நேரத்துக்கு உதித்து, நிழல்களை உருவாக்கி மாலையில் மறைந்துவிடும். யாருக்காகவும் காத்திருக்காது. நாம்தான் அதற்குத் தகுந்தாற்போல் பணியாற்ற வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுத்தார். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை விளக்கின் அடிப்படையில் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். எந்தச் சூழ்நிலையில் எங்கு சென்றாலும் எங்கிருந்து வெளிச்சம் வருகிறது, எப்படியெல்லாம் சொல்கிறது என்பதை ஒரு கண் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார்.
இந்த மாதிரியான சூழலில்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கக் கூடாது. விளக்கே இல்லை என்றாலும் எப்படி ஒளிப்பதிவு பண்ணலாம் எனத் தயாராக இருக்க வேண்டும் என்பார். இந்தத் தொழில்நுட்ப நேர்த்திகள் ஒரு பக்கம் என்றால் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம், நேர்மை.
நீங்கள் ஒரு படத்தின் காட்சிக்கான ஒளிப்பதிவை எப்படித் தீர்மானிப்பீர்கள்?
காட்சியமைப்புக்கான திட்டத்தை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் ஒளிப்பதிவுக்குள் போவேன். என்னோடு பணியாற்றிய இயக்குநர்கள் அனைவருமே முதலிலேயே திரைக்கதைப் புத்தகத்தை எனக்கு அனுப்பிவிடுவார்கள். அதை முழுமையாகப் படித்துவிட்டு, இந்தப் படத்தை இந்தத் தோற்றத்தில் பண்ணலாமா, இதிலிருந்து ஆரம்பிக்கலாமா என்பது உள்ளிட்ட சில விஷயங்களை இயக்குநரிடம் கேட்பேன். இயக்குநர்களை மீறி நான் எந்தவொரு படத்திலும் பணியாற்றியது கிடையாது. ஒளிப்பதிவு சூப்பர் என்று யாராவது சொன்னால், நாம் கதையை மீறிவிட்டோம் என்றுதான் நினைப்பேன். கதையோடு இருக்கும் ஒளிப்பதிவுதான் எனக்குப் பிடிக்கும்.
டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றம் எளிதாக இருக்கிறதா?
தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. புகைப்படத்துக்கான கேமராவை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அது என்றைக்கு டிஜிட்டலாக மாறியது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏன் டிஜிட்டலுக்குப் போனீர்கள் என்று கேட்டால் அது காலத்தின் கட்டாயம் என்றுதான் சொல்ல வேண்டும். வந்த புதிதைவிட இப்போது டிஜிட்டலின் தரம் நன்றாக இருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியில் ‘அகீரா' படத்துக்குப் பணியாற்றியிருக்கிறீர்கள்…
இடையில் ‘தூம்' வரிசைப் படங்களுக்கு அழைத்தார்கள். ஆனால், பாலிவுட்டில் பணியாற்ற வேண்டும் என நான் போராடவில்லை. நல்ல படங்கள் அமைந்தால் பண்ணலாம் என்று இருந்தேன். ‘ஏழாம் அறிவு' படத்துக்காக ஏ.ஆர். முருகதாஸ் அழைத்தபோது, மற்றொரு படத்துக்காகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது வேறு ஒரு படத்தில் இணையலாம் என்று சொல்லியிருந்தார். சரியாக நான் ஒரு படம் முடிக்கிறேன், ‘அகீரா'வுக்காக அழைத்தார். இப்போது படம் வெளியானவுடன் நிறைய பேர் கேட்கிறார்கள். இனி இந்திப் படங்கள் நிறைய பண்ணுவேன் என நினைக்கிறேன்.
‘இருமுகன்' படத்தில் உங்களுக்குச் சவாலாக இருந்த காட்சிகள் என்றால் எதைச் சொல்வீர்கள்?
நிறைய அரங்குகளில் படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால், அரங்குகள் என்பதே தெரியாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். மலேசியாவில் காரில் போய்க்கொண்டே இருப்போம், அப்படியே விக்ரம், நித்யா மேனன் இருவரையும் தெருவில் நடக்க வைத்துக் கையில் கேமிரா வைத்துக்கொண்டு ஷூட் பண்ணியிருக்கிறேன். இது போன்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஷூட் பண்ணியது ரொம்பவும் சவாலாக இருந்தது. விக்ரம் நடித்திருக்கும் இரண்டு வேடங்களுக்காக விளக்குகளை மட்டும் கொஞ்சம் மாற்றியமைத்து ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறேன். சண்டைக் காட்சிகள் அனைத்துமே பெரிய சவால்தான்.
ஒளிப்பதிவாளர் எனும்போது பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும். குடும்பத்துக்கு எப்போது நேரம் ஒதுக்குவீர்கள்?
எனக்கு சித்ரபாரதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். மனைவி கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றியவர், எனக்காக அந்த வேலையை விட்டுவிட்டார். குடும்பம் தொடர்பாக எந்த வேலையையும் நான் பண்ணுவதே கிடையாது. என் மனைவியின் துணையால்தான் என்னால் எந்தவொரு கவலையுமின்றி பணியாற்ற முடிகிறது. உண்மையில் என்னுடைய வெற்றிக்குப் பின்புலம் என்னுடைய மனைவிதான். ஆகவே, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டை விட்டு எங்கேயும் செல்லாமல் என் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT