Published : 26 May 2017 09:53 AM
Last Updated : 26 May 2017 09:53 AM
“பெண்களைக் கொண்டாடும் படம்தான் 'மகளிர் மட்டும்'. எனது வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை முன்வைத்துத்தான் முழுமையாக எழுதினேன். பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கதையில் தேவைப்படும் அரசியல், கருத்துகள், சமூகம் எந்த மாதிரியெல்லாம் பெண்களைப் பார்க்கிறது, உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்களா உள்ளிட்ட பல விஷயங்களைத் திரைக்கதையில் கோர்வையாக உள்ளடக்கியுள்ளேன்” என்று தன்னம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் பிரம்மா.தேசியவிருது பெற்ற ’குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிப் பாராட்டுபெற்றவது இரண்டாவது படம்.
பெரிய நடிகைகளோடு பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிக் கூறுங்கள்…
முதலில் கொஞ்சம் தயக்கம், கூச்சம் இருந்தது. ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட அனைவருமே முன்வந்து எனக்காகச் சில விஷயங்கள் செய்து கொடுத்தார்கள். எனக்கு என்ன தேவை என்பதை உள்வாங்கி, அதன்படி நடித்துக் கொடுக்கத் தொடங்கினார்கள். புதுமுக நடிகைகள் மாதிரி எப்படி நடிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டுத்தான் நடித்தார்கள். உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படம் மூலமாக எனக்குப் பெரிய நடிகர், நடிகைகளோடு பணிபுரியும் தயக்கம் இருப்பதைப் புரிந்துகொண்டேன். இதற்குப் பிறகு தயக்கத்தை விட வேண்டும் எனத் தோன்றியது.
சூர்யா தயாரிப்பில் படம் இயக்குவது எப்படி உருவானது?
‘குற்றம் கடிதல்' முடித்துவிட்டு அடுத்த படத்துக்கான திட்டமிடுதலில் இருந்தேன். அப்போது சூர்யாவின் 2டி நிறுவனத்தில் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது மூன்று கதைகள் சொன்னேன். அதில் ஒரு கதையை ஜோதிகா மேடம் கேட்டார்கள். அக்கதை மிகவும் பிடித்துவிடவே, தானே நடிக்கவும் பிரியப்பட்டார். அப்படித்தான் தொடங்கப்பட்டது ‘மகளிர் மட்டும்'. இப்படத்தில் முக்கியமான சில பிரச்சினைகளை நேரடியாகவும், சிலவற்றை மறைமுகமாகவும் கூறியுள்ளேன். அப்பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். டீஸரிலும் ட்ரெய்லரிலும் என்ன கூறியிருக்கி றோமோ அதுதான் படமாக இருக்கும்.
தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும்போது பல பெண்கள் வாழ்க்கையைக் கடந்திருப்பீர்கள். அதன் தாக்கமா 'மகளிர் மட்டும்'?
நாம் பணிபுரியும் இடத்தில் வேலை பார்க்கும் பெண்கள், நமது வாழ்க்கையைக் கடக்கும் மற்றப் பெண்கள், குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் இப்படி அனைவரிடமும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அது மட்டுமன்றிப் படிக்கும் புத்தகங்களில் பல விதமான பெண் கதாபாத்திரங்களைப் பார்த்திருப் போம். அவர்கள் அனைவரிடமும் சில ஒற்றுமைகளும் இருக்கின்றன, விநோதமான தனித்துவம் மிக்க விஷயங்களும் இருக்கின்றன. இப்படியான அனைத்து விஷயங்களை யும் ஒரு சினிமாவுக்குள் கொண்டுவரக் கூடிய முயற்சிதான் ‘மகளிர் மட்டும்'.
பெண்கள், ஆண்கள் எனப் படம் பார்ப்பவர்களை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் விதமாகவும் இப்படம் இருக்கும். ஏனென்றால் இவ்வளவு காலம் பெண்கள் என்னவாக இருந்தார்கள், இனிமே என்னவாக இருக்க வேண்டும் என்பதைத்தான் படத்தில் பேசியிருக்கிறோம். ஆகையால் ஆண்களுக்கும் இது ஒரு முக்கியமான படம்தான். நிறையப் படங்களில் பெண்ணை ஒரு காட்சிப்பொருளாகப் பாவித்துவருகிறோம். ஒரு ஆணைச் சார்ந்துதான் பெண் வாழ வேண்டும் என்பதை நேர்முகமாகவும், மறைமுகமாவும் பல்வேறு படங்கள் உணர்த்தியே வந்துள்ளன. அவற்றை மறுக்க முடியாது.
இளைஞர்கள் பெண்களைப் பார்க்கும் விதம் சமூகத்தில் நிறைய மாறிவிட்டது, ஆனால் சினிமாவில் அந்தளவுக்கு வேகமாக மாறவில்லை. பெண்கள் என்றால் வலிமை குறைந்தவர்கள் என்று அனைவரது மனதிலும் பதிந்துவிட்டது. இந்தியா சார்பாகப் பளுதூக்கும் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது ஒரு பெண்தான். இதுவரைக்கும் ஆண்கள் ஜெயித்ததில்லை. உடல்ரீதியான சாதனைகளைப் படைப்பவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள்.
‘குற்றம் கடிதல்' விமர்சன ரீதியாகப் பெற்ற வரவேற்பு, வசூல் ரீதியிலும் பெற்றதா?
சென்னை, மதுரை, சேலம் ஆகிய இடங்களில் 30 நாட்கள் தொடர்ந்து ஓடியதாகப் பதிவு இருக்கிறது. மேலும், பல்வேறு வெளிநாட்டுத் தளங்களிலும் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலமாக நிறைய மக்களைப் போய்ச் சேர்ந்துள்ளது. இப்படத்தை வெளியிட்ட ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், கிறிஸ்டி இருவருமே நல்ல லாபத்தைத்தான் ஈட்டியுள்ளார்கள். திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம்தான். விருதுகள் வாங்கியவுடன், விருதுக்காக எடுக்கப்பட்ட படம் என்ற பார்வையில் வந்துவிட்டது. இன்னும் நன்றாக விளம்பரப்படுத்தியிருந்தால், இன்னும் நன்றாகப் போயிருக்கலாம் என நினைக்கிறேன்.
பெரிய நாயகர்களின் படம் இயக்குவதுதான் அடுத்த கட்டமா?
பெரிய நாயகர்களோடு படம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் முன்பிலிருந்தே இருக்கிறது. ஒரு நல்ல கதை பரிச்சயமான நாயகர்களோடு உருவானால் இன்னும் பல பேரிடம் அக்கதை சென்று சேரும். அதற்கான முயற்சிகள் நீண்ட நாட்களாகவே நடந்துகொண்டிருக்கின்றன.
பெரிய நாயகர்கள் எனும்போது, அவர்களுக்காகச் சில காட்சிகள் மாற்றியமைக்கும் சூழல் ஏற்பட்டால்...
ஒரு நல்ல கதை நிறையப் பேரிடம் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணுகிறேன். நடிகர்களை முன்னிறுத்தும் விஷயங்களைச் செய்வேனா எனத் தெரியவில்லை. கதைக்குத் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே யோசிப்பேன். பஞ்ச் வசனங்கள், மாஸ் காட்சிகளோடு வரும் படங்களை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிராகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நடிகர்கள் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.
மக்களுக்கு சினிமாவில் மட்டும் நாயகர்கள் தேவைப்படவில்லை, நிஜத்திலும் நாயகர்கள் தேவைப்படுகிறார்கள். நான்கு பேரை அடித்துவிட்டு நிற்கும் நாயகனைத் தாண்டிய ஹீரோயிஸத்தை காட்சியாக்க முடியும் என நம்புகிறேன். அது மக்கள் மனதில் இன்னும் ஆழமாகப் பதியும். கதையின்றி வெறும் மாஸ் காட்சிகளை வைத்துப் படங்கள் செய்வது எனக்குப் பிடிக்காது. அப்படிப்பட்ட படத்தை இயக்க மாட்டேன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT