Published : 18 Jan 2017 10:35 AM
Last Updated : 18 Jan 2017 10:35 AM

திரை விமர்சனம்: கோடிட்ட இடங்களை நிரப்புக

கைநிறைய சம்பாதிக்கும் ஒரு வெளிநாடுவாழ் தமிழ் இளைஞர் கெவின் (சாந்தனு). வர்த்தகக் காரணங்களுக்காகத் தமிழ்நாட் டுக்கு வருகிறார். அவரது ரசனை அறிந்து பொறுப்பாக அவரை கவனித்துக் கொள்கிறார் குடிகார கார் டிரைவர் ரங்க ராஜ் (பார்த்திபன்). தனக்குச் சமைத் துப் பரிமாறும் வேலையில் அமர்த்தப் பட்டிருக்கும் மோகினியின்பால் (பார்வதி நாயர்) சாந்தனு ஈர்க்கப்படுகிறார். மோகினி பார்த்திபனின் மனைவி என்று அறிந்து அவர் பின்வாங்கினாலும், மோகி னியை நெருங்குவதற்கான சூழல் உருவா கிறது. இந்தச் சூழலை இருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள், இதில் பார்த்திபனின் பங்கு என்ன என்னும் கேள்விகளுக்கான பதில்தான் திரைக்கதை.

பார்வதி பார்த்திபனின் மனைவி என் பதை அறிந்ததும் சாந்தனுவுக்கு ஏற் படும் அதிர்ச்சியைப் போலப் பல அதிர்ச்சி களையும் அவற்றுக்கான திருப்பங் களையும் திரைக்கதை கொண்டிருக்கிறது. அடுத்தது என்ன என்பதற்கான சாத்தியக் கூறுகள் பலவற்றை உருவாக்கிக் கடைசி வரையிலும் எதிர்பார்ப்பைத் தக்கவைத் திருப்பது இயக்குநர் பார்த்திபனின் வெற்றி. கடைசி 10 நிமிடங்களில் வரும் எதிர்பாராத திருப்பம், அதுவரையிலான நிகழ்வுகளைப் புரட்டிப்போடுவதுதான் திரைக்கதையின் புதுமை.

பார்வையாளர்களைத் திசை திருப்பு வதற்காக அமைக்கப்பட்டுள்ள பல காட்சி கள் சந்தேகத்தையும் கிளப்பு கின்றன. குறிப்பாக, தன் மனைவியிடம் பார்த்திபன் நடந்துகொள்ளும் விதம், சாந்தனுவும் பார்வதியும் தனியே இருப்பதற்கான வாய்ப்புகளை அவரே உருவாக்கித் தரு வது ஆகியவை திரைக் கதையின் புதிர்களைப் பலவீனமாக்குகின்றன.

காட்சிகள், வசனங்களில் பார்த்திபன் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார். மோகினி, சாந்தனு தொடர்பான பல காட்சிகள் படத்துக்கு உணர்வுபூர்வமான வலுவைச் சேர்க்கின்றன. தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் நறுக்கென்று எழுதப்பட்ட பல வசனங்கள், அவற்றில் இழையோடும் நகைச்சுவை ஆகியவை பார்த்திபன் முத்திரைகள். காட்சியமைப்பில் இயக்கு நரின் கற்பனை வளம் பளிச்சிட்டாலும், குறியீட்டு ரீதியான சில உத்திகள் சலிப்பூட்டுகின்றன. நிஜத்தில் நடப்ப வற்றையும் பாத்திரங்களின் மன அரங்கில் நடப்பவற்றையும் சித்தரிக்கும் காட்சிகளில் படத்தொகுப்பாளர் ஆர்.சுதர்ஷன் திறமை யாகச் செயல்பட்டிருக்கிறார்.

படத்தின் கதையே மோகத்தையும் பாலியல் வறட்சியையும் பற்றியதாக இருக்கும்போது வசனங்களும் காட்சி களும் அதையொட்டி இருப்பதில் ஆச்சரியமில்லை. பாலியல் ஈர்ப்பைச் சொல்லும் காட்சிகளில் சராசரி ஆண்களின் உளவியல் வெளிப்படுகிறது. இந்த இடங்களைப் பெருமளவில் நாசூக்காகக் கையாளும் பார்த்திபன், தேவையில்லாத இடங்களில் மலினமான இரட்டை அர்த்த வசனங்களைப் பயன்படுத்துவது முகம் சுளிக்கவைக்கிறது.

உடல்மொழி, பாவனைகள், வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் அசத்தி யிருக்கிறார் நடிகர் பார்த்திபன். பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தும் சாந்தனு, தேவையான நடிப்பைச் சிறப்பாகத் தந்திருக்கிறார். நடனத்திலும் அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார்.

தனது கதாபாத்திரத்தின் இரண்டு பரிமாணங்களை அழகாக வெளிப்படுத்தி யிருக்கிறார் பார்வதி நாயர். பார்த்திபனின் நக்கல்களுக்கு இலக்காகும் அப்பாவி வேடத்தில் தன் அடையாளத்தை நிறுவ முடியாமல் தவிக்கிறார் தம்பி ராமய்யா.

தடாலடி திரைக்கதை, தேர்ச்சி யான நடிப்பு ஆகியவற்றைத் தவிர, கலை இயக்கம், இசை, ஒளிப்பதிவு ஆகியவையும் படத்தை ரசிக்கவைக் கின்றன. சத்யாவின் பின்னணி இசை பல இடங்களில் பிரமாதமாக உள்ளது. வசனங்களை அதிகம் நம்பும் இயக்கு நர் பார்த்திபன், சத்யாவின் இசைக்கு இடம்கொடுத்துப் பல காட்சிகளில் மவுனம் சாதிப்பது பாராட்டத்தக்கது. அர் ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்துக்குச் செழுமையான தோற்றத்தைத் தருகிறது.

ஏதோ ஒன்றைக் காட்டுவதாகப் போக் குக் காட்டி, வேறொன்றாக வெளிப்படுத் தும் கண்ணாமூச்சி விளையாட்டுதான் மொத்தத் திரைக்கதையும். இந்தக் கண்ணாமூச்சியை இன்னமும் நேர்த்தி யாக வடிவமைத்திருக்கலாம்.

திகில் படம் போல தொடங்கி, அந்தக் கால நாடக பாணி படங்களைப் போல திசை மாறி, இடையில் சற்று காமெடி பட மாக உருமாறி, முடிவில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போல தோற்றம் கொண்டு நிலைகொள்ளாமல் நகர்கிறது படம்.

முதல் பாதிக்குள்ளேயே கோடிட்ட இடத்தை நம்மால் நிரப்பிவிட முடிவதால், இறுதி காட்சிகள் வியப்பை தரவில்லை.

சரிதான்... இயக்குநரே சொல்லிவிடு கிறாரே - ‘தவறுகள் கொண்ட திரைப் படம்’ என்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x