Last Updated : 05 May, 2017 10:18 AM

 

Published : 05 May 2017 10:18 AM
Last Updated : 05 May 2017 10:18 AM

மண் வாசனைக் கலைஞன்: வினுசக்கரவர்த்தி அஞ்சலி

படிப்பறிவில்லாத கிராமத்துத் தலைவர், ஆணவம், ஆணாதிக்கம் தெறிக்கும் தீர்ப்புகளைச் சொல்லும் மரத்தடி நாட்டாமை, கழுத்தில் புலிநக டாலர் அணிந்து, நீண்ட குழல் துப்பாக்கியை தூக்கிப் பிடித்து மிரட்டும் கிராமத்து வில்லன், கோபமும் பாசமும் மிக்க தமிழ் கிராமத்தின் அப்பா, நடப்பு அரசியலை நகலெடுத்ததுபோன்ற ஊழல் எம்.எல்.ஏ., கடுகடுக்கும் காவல் அதிகாரி.

இப்படி வினுசக்ரவர்த்தி ஏற்ற அடுக்கடுக்கான குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் யதார்த்த நகைச்சுவை வழிந்தோடும். கேட்ட மாத்திரத்தில் சிரிப்பையும் பயத்தையும் ஒருசேர வரவழைக்கும் கரகரப்பான குரல், அதன்வழி வெளிப்படும் கதாபாத்திரத்துக்குத் தகுந்த கச்சிதம் குறையாத வசன உச்சரிப்பு, ஆகிருதிக்கு ஏற்ற உடல்மொழி இவை எல்லாம் சேர்ந்த, மண்ணின் வாசம் கடைசி வரை மங்காத திரைக்கலைஞராக மிளிர்ந்தவர்தான் வினுசக்கரவர்த்தி,

உசிலம்பட்டியிலிருந்து சாலிகிராமம் வரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆதிமூலத்தேவர், மஞ்சுவாணி அம்மாள் தம்பதிக்கு மூன்று பிள்ளைகளில் மூத்த மகனாக 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி வினுசக்ரவர்த்தி பிறந்தார். அவருக்கு ஐந்து வயதானபோது தெருக்கூத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. உசிலம்பட்டியில் தெருக்கூத்தையே நம்பிப் பிழைத்த செய்த பல குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. சித்திரை, வைகாசி, பங்குனித் திருவிழாக்களில் உசிலம்பட்டியிலும் சுற்றுவட்டாரக் கோவில்களிலும் 15 நாட்கள் வரை தெருக்கூத்து களைகட்டும்.

கூத்து இல்லாத நாட்களில் நடிகர்கள் நாடகப் பயிற்சியில் ஈடுபடுவதைக் கண்ட சிறுவன் வினுசக்கரவர்த்தியைத் தன்பால் ஈர்த்துக்கொண்டது அந்தக் கலை. அப்பாவின் எதிர்ப்பையும் மீறி கூத்துப் பாடல்களைக் கற்றுக்கொண்டு 8 வயதில் லோகிதாசன் வேடம், பாலமுருகன் வேடங்களில் நடித்தார். இப்படியே விட்டால் மகன் கூத்தாடியாகிவிடுவான் என்று கருதிய அவரது அப்பா, மகனைச் சென்னைக்கு மூட்டை கட்டி அனுப்பிவைத்தார்.

பத்து வயதில் சென்னை வந்த வினுசக்கர வர்த்தி ராயப்பேட்டைவெஸ்லி பள்ளியில் சேர்ந்து படித்தார். ஆனால் நாடக ஆர்வம் அவரை விட்டுக் கொஞ்சமும் அகலவில்லை. பள்ளி நாடகங்களில் முதல் ஆளாக நிற்பார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் சென்னை ஜெயின் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். இறுதியாண்டு படித்தபோது கல்லூரி ஆண்டு விழா நாடகத்தை எழுதி, இயக்கிய வினுசக்கரவர்த்தி, அதற்குத் தலைமையேற்க அன்றைய தமிழகத் தலைமைக் காவல் அதிகாரியான அருளை (டிஜிபி) அழைத்து வந்தார்.

எமதர்ம ராஜா வேடத்தில் வாட்டசாட்டமாக நடித்த வினுசக்கரவர்த்தியை தன் அருகே அழைத்த காவல் அதிகாரி அருள், “ நீ போலீஸ் வேலைக்காகவே பிறந்தவன், பரிட்சை முடிந்ததும் என்னை வந்து பார்” என்று கூறிவிட்டுச்சென்றார். அவரது பரிந்துரையில் உதவி ஆய்வாளராகத் தேர்வான வினுசக்கரவர்த்தி, வேலூரில் போலீஸ் பயிற்சியை முடித்துக்கொண்டபின் சென்னை ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் ஆறு மாத காலம் உதவி ஆய்வாளராகப் பணியாற்றினார். ஆனால் நாடகம், சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரைத் துரத்திக்கொண்டேயிருந்தது. இதனால் போலீஸ் வேலை அவருக்குப் பிடிக்காமல் போனது. அதை உதறிவிட்டு ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார்.

மைசூருக்கு மாற்றலாகி வந்த வினுசக்கரவர்த்தி, அங்கே ‘கன்னட சினிமாவின் பிரம்மா’ என்று கொண்டாடப்படும் இயக்குநர் புட்டண்ணா கனகலின் படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அவரைச் சென்று சந்தித்து சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கேட்டார். வினுசக்கரவர்த்திக்கு அப்போதே கன்னடம் தெரிந்திருந்தது. கன்னடத்தில் பேசிய தமிழ் இளைஞரான வினுசக்கரவர்த்தியைப் பார்த்து வியந்த புட்டண்ணா கனகல், “ உன்னிடம் நல்ல கதை அறிவு இருக்கிறது.

நடிப்பு என்று திசைமாறிப்போய் அதை வீணாக்கிவிடாதே என்னோடு உதவியாளனாக வந்துவிடு” என்று கூறினார். அப்போது அவரிடம் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்த இன்னொரு மதுரைத் தமிழ் இளைஞர் பாரதிராஜா. புட்டண்ணா கனகல் இயக்கிய ஐந்து படங்களுக்கு ‘ஸ்ரிப்ட் அசிஸ்டெண்ட்’ ஆக வேலைசெய்த வினுசக்கரவர்த்தியைத் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர் படத் தயாரிப்பாளர் திருப்பூர் மணி.

விரும்பி வந்தது… கையில் விழுந்தது

புட்டண்ணா கனகலின் உதவியாளர்கள் அனைவரும் இணைந்து உருவாக்கிய ’பரசக்கதே கண்டதிம்மா’ (Barasnkathae Kandathimma) என்ற கன்னடப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் திரைக்கதையில் வினுசக்கரவர்த்தியின் பங்களிப்பு இருந்தது. நடிகர் சிவகுமார் தனது 100-வது படம் சிறப்பாக அமைய வேண்டும் என்று நல்ல கதையைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இந்தக் கன்னடப் படத்தை பரிந்துரைத்தார் தயாரிப்பாளர் திருப்பூர் மணி. உலக மகா கோழை கதாபாத்திரத்தில் சிவகுமார் நடிக்க, அந்தப் படத்தின் தமிழ்த் திரைக்கதையில் பணியாற்றுவதற்காக சென்னைக்கு வந்தார் வினுசக்கரவர்த்தி.

‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ படத்தின் இயக்குநர் தேவராஜ் மோகன், தயாரிப்பாளர் திருப்பூர் மணி, கதாசிரியர் கல்தூண் கிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து திரைக்கதை, வசனத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற கிராமத்துப் பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வான நடிகர், வசனங்களை ராகம் போட்டு இழுத்துப் பேசியதில் எரிச்சலடைந்தார் இயக்குநர். திரைக்கதை, வசனத்தில் பங்காற்றிய வினுசக்கரவர்த்தி நடிகர்களுக்கு வசனம் சொல்லித்தரும் முக்கிய வேலையை அவரிடம் கொடுத்திருந்தார்.

ராகம் போட்டு வசனங்களைப் பாடும் நடிகரின் கிராமத்துப் பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தினார் தேவராஜ் மோகன். சிவகுமாரும் அதை வழிமொழிந்தார். நடிப்பை நேசித்து சினிமாவுக்குள் நுழைந்து கதாசிரியர் ஆன வினுசக்கரவர்த்தி, எதை விரும்பி வந்தரோ அது ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தின் மூலம் அவரது கைகளில் விழுந்தது.

1003 படங்கள்

1977-ல் வெளியான ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ யில் தொடங்கிய வினுசக்கரவர்த்தியின் பயணம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, நீலகிரியில் வாழும் படுகா மக்களின் படுகா மொழியில் ஒரு படம் என 1003 படங்களுக்கு நீடித்தது. வினுசக்கரவர்த்தியின் சினிமா வாழ்வைத் தொடங்கி வைத்த கன்னட சினிமாவில் கடைசிவரை அவர் நடிக்கவேயில்லை. தமிழில் அவர் கடைசியாக ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் நடித்திருந்தார். ரஜினி, கமல் போன்ற முன்னணிக் கதாநாயர்களுடன் இணைந்தாலும் கவுண்டமணி, செந்தில் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்தாலும் வினுசக்கரவர்த்தி தனக்கேயுரிய நகைச்சுவை முத்திரையைத் தனது கதாபாத்திரம் வழியே பதித்துச்சென்றுவிடும் ஆற்றல்மிக்க நடிகராக விளங்கினார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘மண்வாசணை’, மணிவண்ணன் இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ ஆகிய இரண்டு படங்களும் வினுசக்கரவர்த்திக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தன. பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதிய வினுசக்கரவர்த்தி, ‘வண்டிச் சக்கரம்’ படத்தில் சில்க் ஸ்மிதாவைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.

தமிழக அரசின் ‘கலைமாமணி’, நடிகர் சங்கத்தின் ‘கலைச்செல்வம்’ உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர். சினிமாவில் நடித்துக்கொண்டே நாடகங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்த வினுசக்கரவர்த்தி சிறந்த ஆன்மிகப் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x