Published : 27 Jan 2017 10:06 AM
Last Updated : 27 Jan 2017 10:06 AM
திரையுலகு ஏற்படுத்தும் திருப்பங்கள் சுவையானவை. பாடலாசிரியர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் ஆகிய மூன்று வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்களும் ஒரே திரைப்படத்தின் மூலம் புகழ் அடையும் சாதனையைச் சில திருப்பங்கள் நிகழ்த்துகின்றன.
1947-ல் வெளிவந்த ‘தோ பாயி’ (இரு சகோதரர்கள்) என்ற திரைப்படம் மெஹதி அலி கான் என்ற பாடலாசிரியரையும் எஸ்.டி. பர்மன் என்ற இசையமைப்பாளரையும் கீதா தத் என்ற பின்னணிப் பாடகியையும் இந்தித் திரை உலகம் என்றென்றும் மறக்க இயலாத மாபெரும் நட்சத்திரங்களாக ஆக்கியது.
தன் தாத்தாவின் பெயரையே தன் ஊராகக் கொண்ட மெஹதி அலி கான், திரிபுரா அரச பரம்பரையில் பிறந்த எஸ்.டி. பர்மன், செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்ப வாரிசான கீதா தத் ஆகிய மூவரும் சாதாரண திரை ரசிகர்களின் ஆதரவு என்ற நேர்கோட்டில் இணைந்த மூன்று புள்ளிகளாகப் புகழடைந்த அந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் வியப்பூட்டும் சிறப்புடையவை.
இப்படத்தின் ‘மேரா சுந்தர் சப்னா பீத் கயா’ என்று தொடங்கும் பாடல் ஆற்றாமை உணர்வை வெளிப்படுத்துவது. இந்த உணர்வை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திப் பாடிய கீதா தத் 15 வயதுப் பெண். பாடலை எழுதிய மெஹதி அலி 19 வயது இளைஞன். இசையமைத்த எஸ்.டி. பர்மன் கிராமிய இசை அறிந்த அரச வாரிசு. இப்படி நகைமுரண்களால் பின்னப்பட்ட அந்தப் பாடலின் பொருள்:
என் அழகிய கனவுகள் அழிந்துவிட்டன.
நான் காதலில் அனைத்தையும் தோற்றுவிட்டேன்.
மோசமான இந்தச் சமூகம் வென்றுவிட்டது.
ஏன் கருமை மேகங்கள் படர்ந்து
கருகிய மொட்டுக்களாகச் சிரிக்கின்றன.
என் காதல் கதை முடிந்துவிட்டது.
என் ஜீவனின் இசை நின்றுவிட்டது.
ஓ, என்னை விட்டுச் செல்லும் காதலனே
என் இதயத்தை சிதைத்துவிட்டுச் செல்பவனே
என் விழிகள் நான் விடும் கண்ணீரில் மூழ்கிவிட்டன.
மகிழும் காலம் மறைந்துவிட்டது.
என் எல்லா இரவுகளும் தீபாவளி இரவுகளாக இருந்தன.
நான் என் காதலனின் எல்லாமுமாக இருந்திருக்க வேண்டியவள்.
இப்பொழுது அந்த வாழ்வு
அழிந்துவிட்டதே அழிந்துவிட்டதே
என் ஜீவன் என்னை விட்டு அகன்றுவிட்டதே.
பாடலின் பொருளுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத அந்த மூவரின் பங்களிப்பு, குறிப்பாக கீதா தத்தின் சோகம் இழைந்தோடும் வயோதிகக் குரல், நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையே உள்ள திரை அம்சங்களைத் தெளிவாக எடுத்துக்காட்டியது.
‘தோ பாய்’ படத்தின் 8 பாடல்களில் 5 பாடல்கள் சோகம் நிறைந்த பாடல்கள். இவற்றைப் பாடியவர் கீதா தத். இப்படத்தில் இவர் பாடிய இன்னெரு புகழ் பெற்ற பாடல், ‘யாத் கரோகி, யாத் கரோகி, ஏக் தின் ஹம்கோ யாத் கரோகி’. விட்டுப் பிரிந்த காதலனை மட்டுமின்றி எப்போதும் மீண்டும் பார்க்க முடியாமல் நம்மை விட்டுப் பிரிந்த நம் பாச உறவுகள் நம்மை நினைத்து ஏங்குவது போன்ற உணர்வைச் சிறப்பாக எடுத்துக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இப்பாடலின் பொருள்:
நினைத்துக்கொள்வாய்,நினைத்துக்கொள்வாய்
என்னை ஒரு நாள் நினைத்துகொள்வாய்
மனம் தடுமாறுவாய் மன்றாடுவாய் என்னைக் காண
மாரிக்கால இரவு வரும்பொழுது
மறந்துபோன விஷயங்கள் மறுபடி விழித்தெழும்
இதயம் வலிக்கும் அந்த நினைவுகள்
இனிமேல் நிரந்தரமாகும்படி நினைத்துக்கொள்வாய்
எவரை மனதில் எப்பொழுதும் இருத்தியிருந்தாயோ
அவரைத் தேடுவாய் வனத்திலும் நந்தவனத்திலும்
அழித்துக்கொள்வாய் உன் சுகமனைத்தையும்
உள்ளத்தில் இருத்தி, பிறகு உதறிவிட்டாய்
உன் இல்லத்தையே உடைத்துக்கொண்டுவிட்டாய்
எப்படி, எப்படி அதை நீ மீண்டும் எழுப்புவாய்?
இழந்துவிட்ட என்னை மீண்டும்
அடைய முடியாது
என் இடத்திற்கு நீ வரவும் இயலாது
நினைத்துக்கொள்வாய், நினைத்துக்கொள்வாய்
என்னை ஒரு நாள் நினைத்துக்கொள்வாய்
மனம் தடுமாறுவாய் மன்றாடுவாய் என்னைக் காண.
அந்தஸ்தைத் துறக்க வைத்த காதல்
எளிய வரிகள், ஏக்கம் நிறைந்த குரல் ஆகியவற்றுக்கு இயற்கையான கிராமிய இசை அளித்ததன் மூலம் இந்திப் பாடல்களுக்கு ஒரு புது முத்திரையை அளித்த எஸ்.டி. பர்மன் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். தந்தை திரிபுரா அரச பரம்பரையில் வந்தவர். தாய் மேகலாயா அரச பரம்பரைச் சார்ந்தவர். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த பர்மன் இளைமைக் காலம் முதல் இறுதி நாள்வரை கிராமிய வாழ்க்கை, இசை, உணவு ஆகியவை மீது தீராத பற்றுடையவராக இருந்தார்.
தன்னிடம் இசை கற்க வந்த மீரா என்ற சாமானியப் பெண் மீது காதல் கொண்டு அவரை மனைவியாக ஏற்ற பர்மன், அந்தக் காதலிக்காக அரச வாரிசு உரிமையைத் துறந்தார். ரவீந்திரநாத் தாகூர் முன் தும்ரி பாடி தங்கப் பதக்கம் வென்ற பர்மன், மும்பையின் நகர வாழ்க்கை பிடிக்காமல் ஒரு படத்தின் பாதியில் கல்கத்தா சென்றுவிட முடிவு செய்தார். இந்திப் பட உலகின் நல்வாய்ப்பாக அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.
தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் புகழ் அடைந்த ‘ஆராதானா’ படப் பாடல்களுக்கு இசை அமைத்த இந்த இசை ஆராதகரின் பெயரைத்தான் தன் மகனுக்கு வைத்து மகிழ்ந்தார் மராட்டிய எழுத்தாளர் ஒருவர். அவர் பெயர் ரமேஷ் டெண்டுல்கர். மகன் சச்சின் டெண்டுல்கர். எஸ்.டி. பர்மனின் முழுப் பெயர் சச்சின் தேவ் பர்மன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT