Published : 14 Apr 2017 12:14 PM
Last Updated : 14 Apr 2017 12:14 PM
திகில், த்ரில்லர் படங்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து விட்டார் ரகுமான். ‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு அவரிடம் கதை சொல்ல உதவி இயக்குநர்கள் மொய்த்து வருகிறார்கள். பல கதைகளைக் கேட்டு, தற்போது ஐந்து படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறாராம் ரகுமான். அதில் ஒன்று அவர் தற்போது நடித்துவரும் ‘சதுர அடி 3500’. படத்தை எழுதி இயக்குபவர் ஸ்டீபன். “ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்குப் பஞ்சமே கிடையாது. இந்தத் துறையில் நடைபெற்ற சில உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம்.
பேய் இருக்கிறதா, இல்லையா, இறந்த ஒருவரது ஆத்மாவின் பயணம் எங்கு, எப்படியிருக்கும் என்பதைப் பற்றிப் புலனாய்வு செய்யும் கதாபாத்திரம் ரகுமானுக்கு. பெங்களூரு, சாலக்குடி, சென்னையின் புறநகர் பகுதிகளில் 80 சதவிகித படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டோம். கன்னடத் திரையுலகிலிருந்து நடிகர் ஆகாஷைத் தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். நிகில் என்ற புதுமுக நடிகரும் அறிமுகமாகிறார்” என்கிறார் இயக்குநர்.
காட்டுச் சிறை
இன்று வெளியாகும் ‘கடம்பன்’ படத்தில் ரதி என்ற மலைவாழ் பழங்குடி இனப் பெண்ணாக நடித்திருக்கிறார் கேத்தரின் தெரேசா. “துபாயில் பிறந்து வளர்ந்ததால் தாய்மொழியான மலையாளம் எனக்குச் சரிவரத் தெரியாது. தெலுங்கு சினிமா வழியாகத்தான் தமிழுக்கு வந்தேன். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் இதுவரை 17 படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் தமிழ்ப் படங்களில் நடிக்கும்போதுதான் கற்றுக்கொள்கிறேன். நான் மிகவும் சொகுசாக வளர்ந்தவள். அப்படிப்பட்ட என்னை, ரதி கதாபாத்திரத்துக்காக தேனி அருகேயுள்ள மலைக்காட்டில் இருந்த ஒரு மரவீட்டில் ’கடம்பன்’ படத்தின் இயக்குநர் ராகவா 30 நாட்கள் தங்க வைத்துவிட்டார். இதைக் காட்டுச் சிறை என்றும் சொல்லலாம். அந்த வீட்டில் மின்சாரம் இல்லை, மொபைல் போன் சிக்னல் இல்லை, ஹோட்டல் சாப்பாடு இல்லை, ஆனால் நல்ல காற்றும் இயற்கையும் இருந்தன. மலைவாழ் பெண்ணாக, காலில் செருப்பு இல்லாமல் காட்டில் சுற்றித் திரிந்தேன். அந்த மக்களின் வாழ்க்கையை நானும் வாழ்ந்தேன். ஒரு சினிமா என் வாழ்க்கைமுறையையே மாற்றிவிட்டது” என்கிறார்.
நன்கொடை சினிமா
பிரபு தேவாவின் தயாரிப்பு, இயக்கத்தில் உருவாகிவரும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் கார்த்தி, விஷால் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துவரும் சாயிஷாதான் கதாநாயகி. கார்த்தி, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்கள். கதையை எழுதியிருப்பவர் மறைந்த இயக்குநர் கே.சுபாஷ். திரைக்கதை, வசனம் சுபா. ஹாரிஸ் ஜெயராஜ் இசை. நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக கார்த்தி, விஷால் இருவரும் இணைந்து 10 கோடி ரூபாய் தருவதாகக் கூறியிருந்தனர். அந்தத் தொகையைத் திரட்டவே இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.
விறுவிறு வடசென்னை
தனுஷ் இயக்கத்தில் இன்று வெளியாகிறது ‘ப.பாண்டி'. இதற்கிடையில் வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தனுஷ் தயாரிக்கிறார். தனுஷுக்கு ஜோடி சமந்தா. படத்தில் கடல் முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெறுகிறது என்கிறார்கள். ‘புதுப்பேட்டை’, ‘மாரி’ படங்களைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் வடசென்னை இளைஞராக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே தயாராகிவிட்டன.
த்ரிஷாவின் ‘கர்ஜனை’
பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நயன்தாரா நடித்து வருவதுபோல த்ரிஷாவும் தனக்கான கதைகளைத் தேடிவந்தார். சுந்தர் பாலு என்ற அறிமுக இயக்குநர் கூறிய கதை பிடித்துவிடவே முழுமூச்சாக அவரது இயக்கத்தில் த்ரிஷா நடித்து முடித்திருக்கும் படம் ‘கர்ஜனை’. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணாவுக்கு முக்கியக் கதாபாத்திரம். ஆபாச வலைதளங்களை வைத்து ஒரு பெரிய சந்தை உலகம் முழுவதும் இயங்கிவருகிறது. தற்போது இந்தியாவில் இதுபோன்ற இணையதளங்களின் முகவர்கள் செயல்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கும் இளைஞர்கள் ஐந்து பேரிடம் நயவஞ்சகமாக மாட்டிக்கொள்ளும் பெண்களுக்காகக் களமிறங்கும் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருக்கிறாராம். காதலிக்க மறுக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மோப்பம் பிடிக்கும் கதாபாத்திரம். வெளுத்துக் கட்டியிருக்கிறாராம் த்ரிஷா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT