Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM
கடந்த வாரக் கட்டுரையில் மோசமான கதையில் இருந்து ஒரு நல்ல சினிமா உருவாக வாய்ப்பில்லை என்றேன். மேலும் கதை திரைக்கதை மட்டுமே சினிமா அல்ல. நல்ல சினிமாவிற்கு அது ஒரு ஆரம்பம் மட்டுமே. அதனுடன், ரசிக்கத்தகுந்த வசனங்களும், ஊடக ஆளுமை கொண்ட திரை இயக்கமும்தான் ஒரு படத்தை நல்ல சினிமாவாக்குகின்றன என்றும் புரிந்து கொண்டோ,. அதைச் சற்று விரிவாகக் காணலாம்.
ஊடக ஆளுமை என்பது சினிமாவின் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆளுமை. சிறப்பான பாடல்களையும், பின்னணி இசையையும் இசை அமைப்பாளரிடம் வாங்குவதில் தொடங்கி, எடிட்டிங், கலை நிர்மாணம், சிறந்த நடிப்பு என அனைத்துத் துறைகளிலும் உள்ள ஆளுமையைக் குறைக்கிறது.
நல்ல கதைக்குத் தேவைப்படும் அவசியங்கள் என்ன?
கே. பாலசந்தர் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்ன கருத்து இது:
“புது மாதிரியான (ஃப்ரெஷ்) திரைக்கதைகள் புதிய முறையில் அழுத்தமாகச் சொல்லப்படும்போது வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படத்தில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மத்தியில் ஒரு அழுத்தமான உறவைச் சில காட்சிகளிலேயே ஒரு இயக்குனர் ஏற்படுத்திவிடும் போது, அவர்கள், கதாபாத்திரங்களுடன் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.”
கதாசிரியர் - இயக்குனர் பி.எஸ். ராமையா சினிமா (1940) என்ற புத்தகத்தில் எப்படி ஒரு திரைக்கதையை உருவாக்க வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தார்: “உங்கள் கதை கடைசியாக எப்படி முடிகிறது என்பதை முதலில் தீர்மானித்துக்கொள்ளுங்கள். அந்த முடிவு எப்படி வந்தது, ஏன் வந்தது என்ற கேள்விகளைப் போட்டுக்கொண்டு பின்னால் போங்கள். கடைசிக்கு முந்திய காட்சி, அதற்கும் முந்தியது; இப்படியே பின்னால் நகர்ந்து, கடைசியாக ஆரம்பத்திற்கு வரும் வரை ஏன் என்று கேள்வி கேட்டு எடைபோட்டுப் பாருங்கள். உங்கள் கதை பலவீனமாக இருக்க முடியாது.”
அவரின் மற்றொரு சிறந்த கருத்து: “ஒரு நல்ல கதைக்கு நான்கு நிலைகள் உண்டு: ஒரு போராட்டம் ஆரம்பமாகுதல், சிக்கல்கள் விளைதல், சிக்கல்கள் முற்றி உச்ச நிலையடைதல், முடிவில் ஒரு தீர்வு ஏற்படுதல். இவ்வாறு நான்கு நிலைகளுடன் பின்னப்படும் ஒரு கதை தங்கு தடையின்றி மடமடவென்று, அனாவசியமாக எங்கும் நிற்காமல் நகர வேண்டும். ஒரு சம்பவத்திற்குப் பிறகு, அடுத்தது, அதற்கடுத்தது என்று நிற்காமல் திரைக்கதை மேலே போய்க்கொண்டிருக்க வேண்டும்.”
ஒரு நல்ல படம் பார்வையாளர்களைத் திரையில் நடக்கும் நாடகத்தில் ஈடுபட்டு, தானே அதில் கலந்துகொண்டது போல உணர்ந்து, கதாநாயகனின் வெற்றியையும் தோல்வியையும் தன்னுடைய வெற்றி-தோல்வி எனக் கருத வேண்டும். அவர்களின் உணர்ச்சியை (கோபம், சோகம், காதல், வீரம், நட்பு என எதுவாயினும்) தூண்டும் விதத்தில் காட்சிகள் இருக்க வேண்டும். அத்தகைய பிரமையை ஒரு திரைப்படம் உருவாக்கும் போது, வெற்றிப் படங்கள் சாத்தியமாகின்றன. பார்வையாளர்கள் திரையில் நடக்கும் நாடகத்திலிருந்து அன்னியப்பட்டு, அதை ஒரு நாடகமாகப் பார்க்க ஆரம்பிக்கும்போது, ஒரு படத்தின் தோல்வி தொடங்குகிறது. ஒரு நல்ல திரைக்கதை என்பது பார்வையாளர்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்துவதுதான். நான் தயாரிப்பாளராக இருந்த படங்களில் கண்ட உண்மை இது. பார்வையாளர்கள் எங்கள் படங்களுடன் இணைந்து பயணித்து, சந்தோஷப்பட்டபோது, வெற்றி கிட்டியது. அவர்கள் தூர விலகிப் படத்தைப் பார்த்தபோது, தோல்வியே ஏற்பட்டது.
புதுமையான கதை சொல்ல வேண்டும் என நாம் மெனக்கெடத் தேவையில்லை. கதையை அமைக்கும் முறை, உருவாக்கும் சம்பவங்கள் எல்லாம் படம் பார்ப்பவர்களின் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை உண்டாக்குவதற்காகத்தான் என்ற கவனமிருந்தால், புதுமை தானாகவே கதையில் வந்து சேரும்.
மேலே சொன்ன கருத்துக்களை உள்ளடக்கி, ஒரு வெற்றிச் சூத்திரம் சொல்ல முற்பட்டால், ஒரு நல்ல வெகுஜன திரைக்கதையில் கீழ்க்கண்ட அடிப்படைத் தத்துவங்கள் இருப்பது அவசியம் என்று சொல்லலாம்:
சுவாரஸ்யம்: ஒரு திரைக்கதை நல்ல பொழுதுபோக்கை (Entertain ment) தர வேண்டும். மக்கள் பொழுதுபோக்கத்தான் திரையரங்கு களுக்கு வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு, எந்தப் படம் எடுத்தாலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் தர வேண்டும்.
ஒன்றுதல்: நல்ல திரைக்கதை எந்த இடரும் இல்லாமல் நம்மைத் தொடர்ந்து திரைப்படத்தில் ஈடுபடுத்த (Engage) வேண்டும். தங்கு தடையின்றி மடமடவென்று, எங்கும் நிற்காமல் நகர வேண்டும்.
உணர்ச்சி: திரைக்கதை ஏதோ ஒரு வகையில், சில காட்சிகளிலாவது நம்மை உணர்ச்சிப் பெருக்கோடு (Emotionally connecting) படத்துடன் ஒன்ற வைக்க வேண்டும். நம்மை உணர்ச்சிபூர்வமாக ஒரு படம் பாதிக்கவில்லை என்றால், நாம் அப்படத்தைத் திரையரங் கத்திலிருந்து வெளிவரும்போதே மறந்துவிடுவோம் என்பது நிஜம்.
புதுமை: நல்ல திரைக்கதை ஏதோ ஒரு வகையில் புதுமையான (Experiment) அனுபவத்தை சில காட்சிகளிலாவது பார்வையாளர்களுக்கு தர வேண்டும்.
செய்தி: திரைக்கதையில் சமூகத்திற்குத் தேவைப்படும் ஒரு நல்ல செய்தியை பிரச்சார நெடியில்லாமல், புத்தி சாலித்தனமாகச் சொல்லும் போது அப்படத்தின் மேன்மை மேலும் கூடுகிறது.
தாக்கம்: ஒரு நல்ல திரைக்கதை, படம் முடிந்த பின்பும் பார்வையாளர்களை ஏதோ ஒரு வகையில் பாதித்திருக்க வேண்டும். அவர்களை ஏதாவது செய்யத் தூண்ட வேண்டும் அல்லது காலம் காலமாக, அப்படத்தை மறக்கச் செய்யாதிருக்க வேண்டும். ஒரு சிறந்த திரைக்கதை நம்மைத் தூங்கவிடாமல் சில நாட்கள் சிந்திக்கச் செய்யும் போது, அது சரித்திரம் படைக்கிறது.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் (சுலபமாக மனதில் வைக்க ஆறு அடிப்படை தத்துவங்கள் அல்லது அம்சங்கள்) ஒரே திரைப்படத்தில் இருந்தால் அது மிகச்சிறந்த படமாகிறது. வெற்றி பெற்ற படங்களை மேலே சொன்ன அடிப்படைத் தத்துவங்களுடன் பொருத்திப் பாருங்கள். அவற்றின் முக்கியத்துவம் புலன்படும்.
அன்றும், இன்றும், என்றும், குறைந்தபட்ச அடிப்படைத் தத்துவங்கள் உள்ள நல்ல திரைக்கதையைத் தேர்வு செய்வதும், அதைச் சரியான ஒரு இயக்குநர் மூலம் வெளிக் கொண்டுவருவதும்தான் சினிமாவில் வெற்றிக்கு வழி. இதற்கான முயற்சியில் அனைவரும் இருந்தாலும், ஒரு சிலரே வெற்றி காண்பது, சினிமாவும் பார்வையாளர்களின் ரசனையும் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையைக் காட்டுகிறது.
தொடர்புக்கு: dhananjayang@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT