Published : 31 Oct 2014 12:43 PM
Last Updated : 31 Oct 2014 12:43 PM

பாலிவுட்டுக்குப் படியளப்பதே நாம்தான்! - விஷால் பேட்டி

தீபாவளிப் போட்டியில் முதல் ஆளாகக் களமிறங்கி வெற்றியை ருசித்திருக்கிறார் விஷால். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகத் தமிழகம் முழுவதும் ஒரு ரவுண்டு அடித்துத் திரும்பியிருந்தவரை ‘தி இந்து’வுக்காகச் சந்தித்தபோது...

பட பூஜையன்றே வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிடுகிறீர்கள். சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்யும் ரகசியம் என்ன?

‘பூஜை’ படம்வரை எனது தயாரிப்பில் உருவான மூன்று படங்களைச் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்திருக்கிறேன். இதன் பின்னணியில் துல்லியமான திட்டமிடல்தான் ஒரே ரகசியம். ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கும் முக்கியமான சவால் காஸ்ட் கண்ட்ரோல்.

ரூபாய் பத்து கோடி என்று பட்ஜெட் போட்டால் படம் முடிந்து ஃபர்ஸ்ட் காப்பி தயாராகும்போது 10 முதல் 20 சதவீதம் துண்டு விழுந்திருக்கும். திட்டமிடல் இல்லாததுதான் இதற்குக் காரணம் . ‘பூஜை’ படத்தில் முன்னணி நட்சத்திரங்களின் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. எல்லோரின் கால்ஷீட்டும் எந்த ஷெட்யூலில், எத்தனை நாட்களுக்குத் தேவை என்பதைச் சரியாக ‘பிரேக் டவுன்’ செய்து வாங்கினோம்.

அதேபோல வெளிப்புறப் படப்பிடிப்புக்குத் தேவையான அனுமதிகளையும் முன்னதாகவே வாங்கினோம். கலை இயக்குநர் சொன்ன தேதியில் செட் வேலைகளை முடித்துக் கொடுத்தார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாமே இயக்குநர் ஹரியின் திட்டமிடல்தான்.

‘பூஜை’ படத்தின் கதையில் நிறைய மாற்றங்களைச் செய்ய வைத்தீர்கள் என்று ’ செய்தி வெளியானதே?

ஹரியின் திரைக்கதை பக்காவாக இருக்கும். அதில் திருத்தங்கள் சொல்லவே முடியாது. ஆனால், அதே நேரம் நாம் மனதில் தோன்றும் சந்தேகங்களை அவரிடம் சொன்னால், எந்த பந்தாவும் காட்டாமல் மாற்றிக்கொள்வார்.

எல்லோர் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்பதில்தான் ஹரியின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அப்படி நான் சொன்ன சின்னச் சின்ன விஷயங்கள் ‘ஸ்பாட் இம்ரோவைசேஷனுக்கு’ப் பயன்பட்டது. அவ்வளவுதான்.

ஹரியின் மாஸ் மசாலா பாணி பாலிவுட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லப்படுவதை ஒரு உதவி இயக்குநராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

அது உண்மை. மாஸ் எண்டெர்டெய்னர் படத்துக்கான சூட்சுமம் எல்லோருக்கும் வசப்படுவதில்லை. மாஸ் எண்டெர்டெய்னர் என்றால் ஆல் கிளாஸ் படம். ஐடி புரஃபெஷனலுக்கும் பிடிக்கும். பத்து ரூபாய் கொடுத்துப் படம் பார்க்கிற முதல் பெஞ்ச் ரசிகனுக்கும் பிடிக்கும்.

என்னதான் மசாலா இருந்தாலும் அதில் ஃபேமிலி வேல்யூவுக்கு மரியாதை கொடுத்திருப்பார். ஹரியின் இந்த பாணி இன்று பாலிவுட்டில் ஒரு டிரெண்டாகவே ஆகிவிட்டது. ரோகித் ஷெட்டி டிட்டோவாக ஹரியின் பாணியைப் பின்பற்றுகிறார். அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் உட்பட அங்கே பல முன்னணி ஹீரோக்கள் ஹரி பாணி திரைக்கதையில் நடிக்கவே அதிகமும் விரும்புகிறார்கள். அங்கே தயாராகும் ஹரி பாணி படங்கள் ரூ. 200 கோடியைச் சர்வ சாதாரணமாக வசூல் செய்கின்றன. பாலிவுட்டுக்குத் திறமையான டெக்னிஷியன் களையும், நல்ல கதைகளையும் நாம்தான் கொடுக்கிறோம்.

இப்போது பாலிவுட்டின் வசூல் சாதனைகளுக்கும் நமது மாஸ் எண்டெர்டெய்னர் பாணிதான் காரணமாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் பாலிவுட்டுக்கு மறைமுகமாகப் படியளப்பதே நாம்தான் என்று சொல்லுவேன்.

‘பூஜை’ படத்தின் நாயகன் வாசுபோல நிஜத்தில் ஒரு கதாபாத்திரம் சாத்தியமா?

என்னதான் ஹீரோயிஸம் செய்தாலும் எனது கேரக்டர் என்பது காமன்மேனுக்குரிய குணங்களோடு இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். வாசு கேரக்டர் அம்மாவைப் பிரிந்து வாழும் ஒரு கேரக்டர்.

இன்று பல இளைஞர்கள் அம்மா, அப்பாவுடன் சரிவரப் பேசாதவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் நம்ம பிள்ளை எப்படியெல்லாம் வரணும் என்று எதிர்பார்த்தோம், இவன் இப்படி இருக்கிறானே என்று பேச்சை நிறுத்திவிடுகிறார்கள். இந்த உணர்வுகளின் கலவைதான் வாசு. எதையுமே நாம் மனம்விட்டுப் பேசிவிட்டால் பிரச்சினையில்லை.

எல்லாவற்றையுமே லேட்டாகவே செய்வதால் நிஜ வாழ்க்கையில் அன்பும் பாசமும் எப்போ தேவையோ, அப்போ கொடுக்காம ஏமாத்திடுறோம். வாசு நமக்கு மத்தியில இருக்க கேரக்டர்தான்.

அடுத்தடுத்து மிதமான ஆக்‌ஷன் படங்களில் நடித்தீர்கள். ஆனால் ‘பூஜை’ அதீத ஆக்‌ஷனாக இருக்கிறதே?

சண்டைக்காட்சிகளில் இருக்கும் ரீசனிங் சரியாக இருப்பதால்தான் ரசிகர்கள் இருக்கையில் அமர்ந்து ரசிக்கிறார்கள். இல்லாவிட்டால் எவ்வளவு செலவு செய்து எடுத்தாலும், எழுந்து பாத்ரூம் போய்விடுவார்கள்.

இயக்குநர்கள் என்னை எப்படிப் பார்க்க விரும்புகிறார்களோ, அப்படித்தான் எனது கேரக்டர்களில் நான் பொருந்துகிறேன். அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் காக்கி யூனிஃபார்ம் அணியப்போகிறேன். இதில் ஆக்‌ஷனின் முகமே வேறாக இருக்கிறது. கதைகளையும் இயக்குநரையும் பொறுத்தே எனக்கு ஆக்‌ஷன் ஸ்டைல் அமைகிறது.

ஸ்ருதி ஹாசன் - ஆண்ட்ரியா என்று கதாநாயகிகள் குத்தாட்டம் ஆடுவதற்கு நீங்கள்தான் காரணமா?

(சிரித்துக்கொண்டே) சத்தியமாக இது இயக்குநரின் ரசனை சார்ந்தது. ஸ்ருதி ஹாசன் அபாரமான நடனத் திறமை கொண்டவர். ‘பூஜை’யில் அவர் அதை வெளிப்படுத்த இரண்டு பாடல்கள் அமைந்துவிட்டன. டான்ஸில் அடித்து நொறுக்கியிருப்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள்.

தமிழ் சினிமாவில் ஹீரோயின் பஞ்சம் தீர வேண்டுமானால் ஸ்ருதி ஹாசன் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் தமிழ்நாடு டூரில் என்ன ஸ்பெஷல்?

நண்பன் சூரியின் சொந்தக் கிராமமான ராஜாக்கூரில் உள்ள அவனது வீட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் சர்ப்ரைஸ் விசிட் அடித்தேன். கண்டிப்பாக சூரி வீட்டில் இருப்பான் என்று தெரியும். அவனது மகன் சர்வானுக்கு (அக்டோபர் 27) அன்றுதான் முதல் பிறந்தநாள்.

நான் வந்திருப்பதை அறிந்த ஊர்மக்கள் மொத்தமாக சூரி வீட்டுக்கு வந்துவிட்டார்கள். நானும் நெகிழ்ந்து, சூரியும் நெகிழ்ந்து போனோம். எனது குடும்பம் பெரியது என்று உணர்ந்துகொண்டேன்.

பொங்கலுக்கும் மோதல் உண்டா?

கண்டிப்பாக. சுந்தர்.சியின் ‘ஆம்பள’ படத்தில் மாநாடு, கட்சிப் பேரணி, சினிமா ஷூட்டிங் ஆகியவற்றுக்கு ஆள் திரட்டித் தரும் ஏஜெண்ட் கேரக்டர் செய்கிறேன். நானே இந்தப் படத்துக்காக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன். பொங்கல் போட்டியில் கண்டிப்பாக ‘ஆம்பள’ மோதுவான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x