Published : 21 Feb 2014 10:33 AM
Last Updated : 21 Feb 2014 10:33 AM

நட்சத்திரங்களுடன் என் வானம்..!: சினேகமுடன் சினேகா!

தமிழ் சினிமாவைப் பொறுத் தவரையில் நடிகைகள் மூலவர்களைப் போலத்தான்… பெரும்பாலும் நமக்கு உற்சவர்களின் தரிசனம்தான் கிடைக்கும். ‘பாப்பா ஷூட்டிங்ல பிஸியா இருக்குதே… பேட்டி எல்லாம் வேண்டாமே… நீங்க கம்பெனியிலே ஸ்டில்ஸ் வாங்கி நியூஸ் போட்டுக்கோங்களேன்..’ என்று அம்மாக்கள்தான் பேசுவார்கள். அதையும் மீறி நடிகைகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அருகிலேயே அம்மாவும் இருப்பார்.

ஆனால், சினேகா வித்தியாசமானவர். பேட்டி என்று கேட்டால் பெரும்பாலும் வீட்டுக்கு வந்துடுங்களேன்… ஷூட்டிங் ஸ்பாட்ல தேவையில்லாம வெயிட் பண்ண வேண்டியிருக்கும் என்பார். வீட்டுக்குச் செல்வது என்றாலும் நம் தோழியின் வீட்டுக்குச் செல்வது போலத்தான்… காலிங் பெல்லை அழுத்தினால் சினேகாவின் அம்மாவோ அப்பாவோ கதவைத் திறப்பார்கள். நம் வருகையைச் சொன்னதும், ‘சுஹா.. உனக்கு கெஸ்ட்…’ என்று குரல்கொடுப்பார்கள். சினேகா அறைக்குள் இருந்து எட்டிப் பார்த்து கம் இன் என்பார். அதன்பிறகு பத்து நிமிடங்களில் டீயோ ஜூஸோ கொண்டு வருவார் அம்மா. அவ்வளவுதான். மற்றபடி என்ன விஷயம் என்றுகூட கேட்க மாட்டார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்க்கும் போதுகூட சினேகாவின் அம்மா வேறு வேலைகள் பார்த்துக்கொண்டுதான் இருப்பாரே தவிர என்ன பேசுகிறோம் என்பதற்கு காது கொடுக்கமாட்டார். சினேகா திருப்பதி அருகே பெரும் விபத்தை சந்தித்து தீவிர மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட படம் ‘ஏப்ரல் மாதத்தில்’. அதற்கான போட்டோ ஷூட் நடந்த சமயம் ஒரு பேட்டிக்காகச் சென்றேன். சினேகா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள்…

ஆனால், அதுபோன்ற சமயத்தில்கூட சினேகா தனியாகத்தான் பத்திரிகைகளைச் சந்தித்தார். ‘ஏப்ரல் மாதத்தில்’ போட்டோ ஷூட் சமயத்தில் அதுபற்றிக் கேட்டபோதுகூட மிக உறுதியான குரலில் தன் கருத்தைச் சொன்னார். இவர்களுக்கு அக்கா தங்கை கிடையாதா… இவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றெல்லாம் புலம்பாமல் என் கேரியரில் விழுந்த இந்த இடைவெளியை எப்படிச் சரிசெய்யத் திட்டமிட்டிருக்கிறேன் என்ற கோணத்தில்தான் பேசினார்.

ஆனால், அதுபோன்ற சமயத்தில்கூட சினேகா தனியாகத்தான் பத்திரிகைகளைச் சந்தித்தார். ‘ஏப்ரல் மாதத்தில்’ போட்டோ ஷூட் சமயத்தில் அதுபற்றிக் கேட்டபோதுகூட மிக உறுதியான குரலில் தன் கருத்தைச் சொன்னார். இவர்களுக்கு அக்கா தங்கை கிடையாதா… இவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றெல்லாம் புலம்பாமல் என் கேரியரில் விழுந்த இந்த இடைவெளியை எப்படிச் சரிசெய்யத் திட்டமிட்டிருக்கிறேன் என்ற கோணத்தில்தான் பேசினார்.

பொதுவாக நடிகை பேட்டி என்றாலே நாலைந்து புகைப்படங்கள், மூன்று நான்கு பக்கங்களுக்கு சினிமா பற்றி கட்டுரை என்ற எண்ணத்தில்தான் இருப்பார்கள். ஆனால், சினேகா தன் பர்சனல் பக்கங்கள் பற்றியும் தைரியமாகப் பேசுவார். அதேபோல எல்லா நடிகைகளுமே கேட்கும் ஒரு கேள்வி, இந்த மேட்டர் அட்டைப்படமாக வருமா என்பதுதான். ஆனால், அவரை நம்பி நாம் ஒரு துணுக்கு செய்திக்கு கூட அணுகலாம்.

இந்தியத் தொலைத்தொடர்புத் துறை வில்போன் என்ற தொலைபேசி வசதியை கிராமப்புறங்களுக்குக் கொண்டு செல்வதற்காக ஒரு திட்டத்தை அமல்படுத்தியது. கிராமங்களுக்குத் தபால் கொண்டுசெல்லும் தபால்காரர்கள் கையோடு ஒரு வில்போனையும் கொண்டு செல்வார்கள். அவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் ஒருமணிநேரமோ இரண்டுமணி நேரமோ அந்த கிராமத்தினர் அந்தத் தொலைபேசியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வில்போனில் இருந்து லேண்ட்லைன் போன்களுக்குப் பேசிக்கொள்ளலாம்.

இந்த வசதியை வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தலாமே என்ற எண்ணத்தில் ஒரு கட்டுரையைத் தயாரிக்கத் தீர்மானித்து கிராமத்துக்கும் சென்றுவிட்டார் அப்போது நிருபராக இருந்த ஞானவேல். வேறொரு தகவலுக்காக அவரைத் தொடர்புகொண்டபோது கிராமத்தில் இருக்கும் விவரத்தைச் சொல்லி, ‘வந்ததும் பேசுகிறேன்’ என்றார். அப்போதுதான் அந்த கிராமத்தில் இருந்து ஒருவரை, நடிகை ஒருவருடன் பேச வைத்தால் என்ன என்று தோன்றியது.

உடனே சினேகாவின் நினைவுதான் வந்தது. அப்போது ஷூட்டிங்கில் இருந்தார் சினேகா. “லஞ்ச் பிரேக்கில் வீட்டுக்கு வருவேன். அப்போ அவரை கூப்பிடச் சொல்லுங்க” என்றார்.

இதில் என்ன சிரமம் என்றால் அந்த போஸ்ட் மேன் அந்த கிராமத்துக்கு காலையில் பத்து மணிக்கு போய்விட்டு பனிரெண்டு மணிக்குத் திரும்பிவிடுவார். சினேகா லஞ்ச் பிரேக்கில் வரும்போது அந்த போஸ்ட்மேன் இன்னொரு கிராமத்தில் இருப்பார். பரவாயில்லை, அங்கு ஒருவரைப் பிடித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டுக்கொண்டோம்.

வீட்டுக்கு வந்த சினேகா லஞ்ச் முடிந்து தொலைபேசி அருகே காத்துக்கொண்டிருந்தார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. யாரோ ஒரு முக்கியஸ்தரின் போனுக்காகக் காத்திருக்கும் ரசிகையைப் போல இருந்தார். நடுவே, நிருபரின் அலைபேசியும் நாட் ரீச்சபிள் ஆகிவிட டென்ஷனாகிவிட்டது.

தொலைபேசி ஒலித்ததும் வேகமாக எடுத்து, “வணக்கம்… நான் நடிகை சினேகா பேசறேன்” என்று அவர் காட்டிய உற்சாகத்தைப் பார்த்தபோது எதிர் முனையில் இருப்பவர் யாரோ பெரிய மனிதர் என்றுதான் தோன்றியது. சில நிமிடங்கள் குடும்ப நலனெல்லாம் விசாரித்துவிட்டு, “போனை போஸ்ட்மேன் கிட்டே கொடுங்க…” என்றார். போஸ்ட்மேன் லைனில் வந்ததும், “ரொம்ப நன்றி சார்… உங்க சர்வீஸால பலருக்கு எவ்ளோ பயன் கிடைக்குது… உங்களோட பேசுனது எனக்கு சந்தோஷம்…” என்றார். அந்த வார்த்தைகளில் துளிக்கூட சம்பிரதாயம் இல்லை.

சினேகமுடன் சினேகா என்பது வெறும் ரைமிங் வார்த்தைகள் இல்லை!

தொடர்புக்கு cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x