Published : 14 Apr 2017 12:24 PM
Last Updated : 14 Apr 2017 12:24 PM
திரையுலகப் பிரச்சினைகளைப் பற்றியும், அதனைச் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ச்சியாக எழுதியற்காக தேசிய விருது வென்றுள்ளார் தனஞ்ஜெயன். தயாரிப்பாளரும் எழுத்தாளரும் BOFTA திரைப்படக் கல்லூரியை நடத்திவருபவருமான அவரிடம் உரையாடியதிலிருந்து...
நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள். தமிழில் நிறைய அலசல் கட்டுரைகள் வருவதில்லையே...
சினிமாவை மக்கள் மத்தியில் கொண்டு போக, அலசல் கட்டுரைகள் நிறைய வர வேண்டும். ஒரு நல்ல சினிமா வந்தால் ஏன் இது நல்ல சினிமா, ஏன் கொண்டாப்படுகிறது என்று விலாவாரியாக எழுத வேண்டும். கமர்ஷியல் சினிமா வெற்றியடைந்தால் ஏன் மக்கள் அப்படத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் எழுத வேண்டும். விமர்சனங்களையும் மீறி ஒரு படம் வெற்றி பெறுகிறது என்றால் ஏன் என்பதை விவாதிக்க வேண்டும். இதைப் பற்றியெல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகளில் நிறைய வருகின்றன. அதே போல 'தமிழ் இந்து'வில் வெளியாகும் அலசல் கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
தமிழ்த் திரையுலகில் தற்போது நிலவும் பிரச்சினைகள் என்ன?
ஒரே நாளில் நிறையப் படங்கள் வெளியாவதுதான் முதல் பிரச்சினை. கடந்த மாதம் 5 வாரங்களில் 24 படங்கள் வெளியாகியுள்ளன. ஒரு விமர்சகரால்கூட அவ்வளவு படங்களையும் பார்க்க முடியவில்லை. 15 கோடிக்கு மேல் செலவுசெய்து தயாரிக்கப்பட்ட 250 படங்கள் திரையரங்குகள் கிடைக்காதா என்று காத்திருக்கின்றன. எதற்காக இந்தப் போராட்டம்? இதை நான் முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கிறேன். இதையடுத்து, திருட்டு விசிடி, வருமானம் ஈட்டும் வழிமுறைகள் (தொலைக்காட்சி மற்றும் இசை உரிமை), நடிகர்களின் சம்பளப் பிரச்சினை ஆகியவை இருக்கின்றன.
30 கோடி சம்பளம் மட்டும் கொடுத்துவிடுங்கள், படத்தைப் பற்றி எனக்குத் தெரியாது என்பது தயாரிப்பாளர் மீது மொத்தமாகப் பணப் பிரச்சினைகளைத் திணிப்பது போன்று உள்ளது. தெலுங்கு, இந்தியில் இந்தப் பிரச்சினை கிடையாது. அங்குள்ளதுபோல நடிகர்கள் லாபத்தில் பங்கை வாங்கிக்கொள்ளும் முறை இங்கும் வர வேண்டும். இதெல்லாம் நடக்கும்போதுதான் தமிழ் சினிமா வியாபாரத்தில் இன்னும் மேலோங்கும்.
தமிழக அரசிடமிருந்து திரையுல கினருக்கு ஒத்துழைப்பு உள்ளதா?
தமிழ்த் திரையுலகத்துக்கு அரசாங்கத்தின் ஆதரவு 8 வருடங்களாகக் கிடையாது. டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. ஆனால் பிரச்சினையே அனைத்துப் படங்களுக்கும் 120 ரூபாய் டிக்கெட் விலை இருப்பதுதான். இந்தியில் இருப்பதைப் போல இங்கும் பெரிய படம், சிறிய படம் என்று டிக்கெட் விலை மாற வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக அரசாங்க மானியம் கிடைக்கவில்லை. அரசும் கலைஞர்களை ஊக்குவித்து விருதுகள் கொடுக்கவில்லை. கலைஞர்களை அங்கீகரிக்கவே இல்லை. இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது கடினம். பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில்தான் நடக்கின்றன.
படம் வெளியாகி 3 நாட்களுக்குப் பிறகு விமர்சனங்களை வெளியிடலாமே என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
அக்ஷய் குமார் 2 வருடங்களுக்கு முன்பே இதைக் கூறியுள்ளார். அப்போது அளித்த ஒரு பேட்டியில், “ நல்ல சினிமாவை உடனடியாகப் பாராட்டி எழுதுங்கள். அதை நாங்கள் கொண்டாடுகிறோம். படம் பிடிக்கவில்லை என்றால் 3 நாட்கள் கழித்து வெளியிடுங்கள். 3 நாட்களில் அப்படத்தைக் காப்பாற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார். அதைத்தான் விஷாலும் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்துகொண்டு அவர் சொல்லும்போது மரியாதை கொடுக்க வேண்டும். ஒரு தயாரிப்பாளர் மோசமான படம் எடுக்க வேண்டும் என்று வரவில்லை. ஆனால் சில சமயம் மோசமாக அமைந்துவிடும். மக்கள் அப்படத்தைப் பார்த்து நல்லாயில்லை என்பது வாய் வார்த்தையாகப் பரவத்தான் போகிறது. ஊடகங்கள் மூலமாக 3 நாட்களுக்கு விமர்சனம் செய்யாமல் இருங்கள் என்று மட்டுமே விஷால் கூறியுள்ளார். இதில் எந்த விதத்திலும் நாம் குறைந்துவிடப் போவதில்லை.
இன்றைய விமர்சனங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
இன்றைய விமர்சனங்களில் தனிமனிதத் தாக்குதல் அதிகம். இன்றைக்கு எல்லார் கையிலும் ஊடகம் இருக்கிறது. 120 ரூபாய் கொடுத்துப் படம் பார்ப்பவருக்கு விமர்சனங்களை வைக்க உரிமை இருக்கிறது. ஆனால், ஒரு விமர்சனம் என்பது தராசு மாதிரி நிறைகள், குறைகள் கலந்து இருக்க வேண்டும். நிறைகள் இல்லாமல் இதுவரை படமே வந்ததில்லை. 4 விஷயங்கள் நல்லாயிருந்தது, இதுவெல்லாம் சரியில்லை. இதற்கு மேல் படங்கள் பார்ப்பது உங்கள் விருப்பம் என்று விட்டுவிட வேண்டும். குறைகளை மட்டும் சொல்லிவிட்டு, இதைப் பார்க்க ஏன் திரையரங்கிற்குப் போக வேண்டும் என்று சொல்வது தனிமனிதத் தாக்குதலாகிவிடுகிறது.
இதைத்தான் ரஜினியும் விஷாலும் கூறியிருக்கிறார்கள். எனக்குப் படம் பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் சொல்வேன். பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுவேன். ஏனென்றால் நான் விமர்சகன் இல்லை. நான் விமர்சனம் செய்து தயாரிப்பாளருக்கு 1000 ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்றால் கண்டிப்பாக விமர்சனம் செய்வேன். ஏனென்றால் தமிழ் சினிமா மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது. திருட்டு விசிடி அதிகமாகிவிட்டது. ஒரே நாளில் அதிகமான சினிமாக்கள் வெளியாகின்றன. சினிமாவே தெரியாமல் பலர் சினிமா எடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அதனால்தான் 95% படங்கள் தோல்வியடைகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT