Published : 24 Oct 2014 08:56 AM
Last Updated : 24 Oct 2014 08:56 AM

திரை விமர்சனம்: கத்தி

இந்தியாவின் அடிப்படை ஆதாரமான விவசாயத்தைச் சீரழிக்கும் சக்திகள் குறித்து எச்சரிக்கை செய்து, விவசாயத் தையும் விவசாயிகளையும் ஊக்குவித்தால் தான் இந்தியாவில் நிஜமான வளர்ச்சி சாத்தியமா கும் என்று சொல்வதே ‘கத்தி’யின் உள்சரடு. கார்ப்பரேட் சூழ்ச்சிகள் பற்றிய சிவப்புச் சிந்தனைக் கோபங்களையும் தெறித்து, ஆக்‌ஷன் அரிவாளால் பொழுதுபோக்குக் கதிர் அறுக்கிறது.

கொல்கத்தா சிறையிலிருந்து தப்பிக்கும் கதிரேசன் (விஜய்) சென்னை வருகிறான். நண்பன் உதவியுடன் பாங்காக் செல்லத் திட்டமிடுகிறான். விமான நிலையத்தில் அங்கிதாவை (சமந்தா) பார்த்தவுடன் காதல் வயப்பட்டுத் தனது பயணத் திட்டத்தைக் கைவிட்டுச் சென்னையில் இருக்கத் திட்ட மிடுகிறான்.

குண்டு அடிப்பட்டுக் கிடக்கும் ஜீவானந்தத் தைக் (அடுத்த விஜய்) காப்பாற்றுகிறான். தேடி வரும் போலீஸிடம் ஜீவானந்தத்தை சிக்க வைத்துவிட்டு, அந்த இடத்துக்கு கதிரேசன் இடம் மாறுகிறான். ஜீவா யார், அவனைக் கொல்ல ஏன் முயற்சி நடக்கிறது, கதிர் என்ன சாதித்தான், அவன் காதல் என்ன ஆயிற்று என்பதை ரெண்டேமுக்கால் மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

வணிக சினிமாவின் சட்டகத்துக்குள் நின்றபடி தீவிரமான பிரச்சினைகளைப் பேசுவது முருகதாஸின் அடையாளம். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் ஆன்மாவைச் சுரண்டுவதை வசனங்களாக மட்டுமின்றி, வலுவான காட்சிகளாகவும் சித்தரித்திருக்கிறார்.

அரிமா சங்கத்தினர் ஜீவாவின் பணிகள் பற்றிய ஒலி ஒளிக் காட்சியைத் திரையிட, அதைப் பார்த்தே கதிர் மனம் மாறுகிறான். பார்வையாளர்களையும் சேர்த்தே சிந்திக்க வைக்கும் அளவுக்கு இந்தக் காட்சி அமைந்திருக்கிறது. அதேசமயம், தன்னூத்து கிராமத்தில் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றைக் கண்டுபிடித்துத் திறந்துவிட்டால் இரண்டு மாவட்டங்களுக்குத் தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும் என்று நிறுவுவதற்கு இயக்குநர் முன்வைக்கும் காட்சிகள் வலுவாக இல்லை. ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்க, சென்னைக்குக் குடிநீர் விநியோகத்தை நிறுத்திவைக்கும் காட்சியிலும் பலவீனம் தென்படுகிறது. ஆனால் சொல்ல வந்த செய்தி வலுவாகவே வெளிப்படுகிறது.

இடைவெளிக்கு முன்பு வரும் சண்டைக் காட்சியில் முருகதாஸின் முத்திரை... அலைக்கற்றை ஊழல் விவகாரம் பற்றியும் வசனம் உண்டு!

சிறையிலிருந்து தப்பிப்பது, காதலில் விழுவது ஆகிய முதல் அரை மணி நேரக் காட்சிகள் நெளியல் ரகம். முதியோர் இல்லத்தில் விஜய் தங்கியிருப்பது ஏதோ மேன்ஷனில் இருப்பதுபோல் தெரிகிறது. கிளைமாக்ஸ் திருப்பமும் பொறுமையை சோதிக்கிறது. படத்தின் முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்த பிறகும், கதிரேசனைக் காப்பாற்றுவதற்காகவே ‘கத்தி’ நீள்கிறது.

வெற்று ஹீரோயிஸக் கதையைத் தவிர்த்துவிட்டு, வலுவான செய்தி சொல்லும் பாத்திரத்தில் நடித்ததற்கு விஜயைப் பாராட்டலாம். ஊடகங்களிடம் விஜய் பேசுவதாக வரும் வசனங்கள் பல ஹீரோக்கள் பேசத் தயங்கக்கூடியவை. பாத்திரத்துக்கு ஏற்ற தோற்றத்துக்காக மெனக்கெடுவதில் நம்பிக்கை இல்லாத விஜய், இதிலும் இரட்டை வேடத்துக்கு மெனக்கெடவில்லை. ஆனால் இருவரின் குணங்களில் இருக்கும் வித்தியாசத்தை நடிப்பில் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

சமந்தா இரண்டு பாடலுக்குப் பயன்பட்டிருக்கிறார். உற்சாகம் நிறைந்திருந் தாலும் கதை நகர்வதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை.

விஜய்யின் நண்பனாக சதீஷ், சில காட்சிகளில் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதியாக நீல் நிதின் முகேஷ், தோற்றத்திலும், உடல் மொழியிலும் கச்சிதம்.

அனிருத்தின் இசையில் ‘செல்ஃபி புள்ள’ பாடலும், யேசுதாஸின் குரலில் ‘யார் பெற்ற மகனோ’ பாடலும் ஓகே.

வசனங்களில் கூர்மை, திரைக்கதையில் கொஞ்சம் மொண்ணை... என்றாலும் காலத் துக்கு ஏற்ற செய்தியைச் சொல்கிறது ‘கத்தி’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x